The old man and the sea
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்
எஸ். சங்கரநாராயணன்
பகுதி பதிமூன்று
••
மீனின் முதுகுப்புற எலும்பு வரிசை.
வெண்மையான நிர்வாணமாய்
சதையற்று இருந்தது.
••
காத்து நமக்கு
நண்பன், என நினைத்தார் பெரியவர். பிறகு சேர்த்துக் கொண்டார் சில சமயங்களில்! அப்புறம்
இந்த மகா கடல். அதில் நமது நண்பர்களும் இருக்காங்க. எதிரிகளும் உண்டு. அத்தோடு, ஆ,
படுக்கை, என நினைத்தார். வெறும் படுக்கை போதும் எனக்கு. என் நண்பன் அல்லவா? அது அருமையான
விஷயம் ஆச்சே. (சம்சாரம் பற்றிய நினைவுகள் அவரிடம் இல்லை.)
தோல்வி, அதன் பின்னான காலம் எளிமையானது
தான், என யோசித்துப் பார்த்தார். இதுவரை நான் அறியாத எளிமை இது, தோல்விக்குப் பிறகான
மகா எளிமை.
என்ன தோல்வி? யார் உன்னைத் தோற்கடிச்சா?
“ஒண்ணில்ல. என்னை யாரும் தோற்கடிக்கவில்லை”
என்றார் சத்தமாக. “நாந்தான் ரொம்ப தூரமா கடலுக்கு உள்ளே போயிட்டேன்.”
சின்ன அந்தக் கரையில் அவர் நுழைந்தார்.
மாடி விடுதியின் விளக்குகள் அவிந்திருந்தன. எல்லாரும் இந்நேரம் படுக்கையில் படுத்து
நல்லுறக்கத்தில் இருப்பார்கள், அவர் அறிவார்.
காற்று நல்ல நிதானத்துடன் மேலேறிச்
சுழன்றது. இப்போது சலசலவென்று உக்கிரம் பெற்று வந்தது. ஆனால் கடற்கரை அமைதி காத்தது.
பாறைகளுக்கு அடியே பட்டைவைத்து ஒதுக்கப்பட்ட ஒரு படித்துறைப் பக்கம் படகைக் கொண்டுபோய்
நிறுத்தினார்.
கூட உதவிக்கு ஆள் யாரும் கிடையாது.
அவரே முடிந்த அளவுக்கு படகைக் கரைப்பக்கமாக இழுத்து நிறுத்தினார். பிறகு கரைக்கு வந்தார்.
படகை பாறை ஒன்றோடு பிணைத்துக் கட்டினார். பாயமரத்தை இறக்கினார். துணியைச் சுருட்டிக்
கட்டிக் கொண்டார். அதைத் தோளில் போட்டுக் கொண்டபடி மேடேறி வந்தார். அப்போது தான் அதுவரை
தெரியாத சோர்வு அவருக்குத் தெரிந்தது. தள்ளாடியது.
அப்படியே ஒரு கணம் நின்றார். திரும்பிப்
படகைப் பார்த்தார். தெரு விளக்கின் வெளிச்சத்தில் படகின் பின்புறத்தில் அதைவிட மகா
உயரமான எடுப்புடன் அந்த வாலைப் பார்த்தார். மீனின் முதுகுப்புற எலும்பு வரிசை. வெண்மையான
நிர்வாணமாய் சதையற்று இருந்தது. கெட்டியான தலையின் ஒரு பகுதி. கூர்மையான மூக்கு நீட்டித்
தெரிந்தது.
பின்னே வால். முன்னே தலை. நடுவே தான்
கோரமாக நிர்வாணக் கோலம்.
திரும்ப கரையை நோக்கி ஏறிவர ஆரம்பித்தார்.
மேட்டை எட்டவும் அப்டியே சரிந்து விழுந்து விட்டார். அப்படியே சிறிது படுத்துக் கிடந்தார்.
அவர்மேலே குறுக்காகக் கிடந்தது பாய்மரக் கம்பம். எழுந்துகொள்ள முயன்றார். முடியவில்லை.
மகா காரியமாய் இருந்தது அது. அப்படியே சப்பென்று உட்கார்ந்து கொண்டார். பாய்மரக் கம்பம்
தோளில்.
அப்படியே தெருவைப் பார்த்தார். எதோ
பூனை கடந்து தன்வேலையாய் ஓடியதைக் கண்டார். அதை வேடிக்கை போலப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பூனை போயிருந்தது. இப்போது தெருவைத்தான் அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு அவரே கம்பத்தைத் தரையில் போட்டுவிட்டு
தான் மாத்திரம் எழுந்து நின்றார். திரும்ப கம்பத்தைத் தூக்கிக் கொண்டார். அதைத் தோளில்
ஏற்றிக் கொண்டார். தெரு வரை மேலேறிப் போக வேண்டியிருந்தது.
தன் ஜாகைக்கு அவர் போய் அடையும் முன்னால்
அஞ்சு முறை ஆங்காங்கே உட்கார்ந்து ஆசவாசப்பட வேண்டியிருந்தது.
குடிசை. பாய்மரத் தண்டைச் சுவரில்
சார்த்தினார். அந்த இருட்டிலேயே துழாவினார். தேடி ஒரு தண்ணீர்ப் போத்தலை எட்டி எடுத்தார்.
ஒரு மிடறு தண்ணீர் அருந்தினார். பிறகு படுக்கையில் படுத்துக் கொண்டார். போர்வையைத்
தோளுக்கு மேலே ஏற்றி முதுகுக்கும் கால்களுக்குமாகப் போர்த்திக் கொண்டார். செய்தித்தாள்களில்
குப்புறப் படுத்து உறங்கிப் போனார். கைகள் விலகி விரிந்து கிடந்தன. உள்ளங்கைகள் திருகினாப்
போல மேலே பார்த்துக் கிடந்தன.
•
காலையில் பையன் வந்து பார்த்தபோது
நல்ல உறக்கத்தில் இருந்தார் அவர். வெளியே காற்று கட்டுக்கடங்காமல் வீசிக் கொண்டிருந்தது.
மீன் பிடிக்க இந்தக் காற்றில் கடலுக்குள் போக முடியாது. பையன் விடிந்த பின்பும் கூட
நன்றாக உறங்கி மெதுவாக எழுந்து கொண்டிருந்தான். தினசரி வரும் வழக்கப்படி அவன் பெரியவரின்
குடிசைக்கு அவரைப் பார்த்துப்போகலாம் என்று வந்தான்.
பெரிய பெரிய மூச்சுகளாய் விட்டுக்
கொண்டிருந்தார அவர். அவரது கைகளைப் பார்வையிட்டான் அவன். பயந்து ஓவென்று அழ ஆரம்பித்தான்.
ஆனால் சத்தம் எழுப்பவில்லை. அமைதியாய் வெளியே காபி வாங்கிவர என்று கிளம்பினான். தெருவில்
நடக்கையில் அவன் குமுறிக் குமுறி அழுதுகொண்டே தான் போக முடிந்தது.
கடற்கரையில் நிறைய மீனவர்கள் கூடி
பெரியவரின் படகையும், அதில் கடடப்பட்டுக் கிடக்கும் மீனையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் ஒராள் முட்டிவரை சராயை ஏற்றி மடித்துக் கொண்டு அந்த எலும்புக் கூட்டின் நீளத்தை
தூண்டில் இழையினால் அளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்கேயிருந்தே பையன் எல்லாம் எல்லாம்
பார்த்தான். ஆனால் அங்கேவரை கிட்டே போகவில்லை. ஏற்கனவே அவன் அங்கே வந்து விவரங்கள்
அறிந்திருந்தான். தன்னொத்த ஒரு மீனவனை இந்தப் படகைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப்
போயிருந்தான் பையன்.
“ஏய், பெரியவர் எப்பிடி இருக்காரு?”
யாரோ சத்தமாய் அவனிடம் கேட்டார்கள்.
“தூங்கிட்டிருக்காரு” என்று சத்தங்
கொடுத்தான் பையன். இப்போதும் அவன் அழுதபடியே இருந்தான். மத்தவர்கள் பார்ப்பதைப் பற்றி
அவன் சட்டை பண்ணவில்லை. “யாரும் அங்க வந்து அவரை இப்ப தொந்தரவு பண்ண வேண்டாம்.”
“மூக்கு முதல் வால் வரை பதினெட்டு
அடி!” அளவெடுத்தவன் கத்தினான்.
“ஆமாம். இருக்கும்” என்றான் பையன்.
மாடி உணவுவிடுதிக்குப் போனான். ஒரு
கேனில் காபி கேட்டான். “நல்லா சூடா, நிறைய பால் விட்டு, சக்கரை போட்டு...” என்றான்
பையன்.
“வேற எதாவது?”
போதும். அப்பறமா, அவரால என்ன சாப்பிட
முடியுதுன்னு பாத்துக்கிட்டு வந்து வாங்கிக்கறேன்.”
“ஆகா. என்ன அருமையான மீன்!” என்றான்
மார்ட்டின். விடுதிக்காரன். “இப்பிடி ஒரு மீன் இந்தப் பக்கம் யாருமே பிடிச்சது இல்லை.
நீ நேத்தி பிடிச்சியே, ரெண்டு மீன்.... அதுவும் நயமான சரக்கு.”.
“என் மீன் பாழாப்போக!” பையன் சொல்லிவிட்டு
திரும்ப அழ ஆரம்பித்தான்.
“எதாவது பானம், பீர் மாதிரி, எடுத்திட்டுப்
போறியா?” கடைக்காரன் கேட்டான்.
“அதெல்லாம் வேணாம்,” என்றான் பையன்.
“அந்தா அவங்களை சாண்டியாகோவை வந்து பார்த்து தொந்தரவு செய்ய வேண்டாம்னு மாத்திரம் சொல்லுங்க.
நான் போயிட்டு மறுபடி வரேன்.”
“அவரை நான் விசாரிச்சேன். நான் எவ்வளவு
வருத்தப் படுறேன்னு அவராண்ட சொல்றியா?”
“நன்றி” என்றான் பையன்.
பாத்திரத்தில் காபி சூடாய் இருந்தது.
பெரியவரிடம் போய் அவர் விழித்துக் கொள்ளும் வரை அவரைத் தொந்தரவு செய்யாமல் காத்திருந்தான்.
ஒரு சமயம் பெரியவர் விழித்துக் கொள்வார் போல இருந்தது. சற்றே அசைந்துவிட்டு திரும்ப
பலமான உறக்கத்தில் அவர் ஆழ்ந்து போனார். காபி ஆறிவிட்டது. திரும்ப அதைச் சுட வைத்துத்
தர வேண்டுமாய் இருந்தது. யாரிடமாவது விறகு வாங்கி வரலாம் என்று வெளியே வந்தான் பையன்.
•
மெல்ல பெரியவர் கண் விழித்தார்.
“எழுந்து உட்கார முயற்சிக்க வேணாம்”
என்றான் பையன். “இந்தாங்க. இதைக் குடிங்க.”
ஒரு கண்ணாடி தம்ளரில் காபியில் கொஞ்சத்தை
ஊற்றி நீட்டினான்.
அதை வாங்கிக் குடித்தார்.
“அதுங்க என் கையை அப்பிடியே மேசையில்
சரிச்சிட்டது, மனோலின்!” என்றார் பெரியவர். “தோல்வின்னா துல்லியத் தோல்வி..”
“இது உங்களைத் தோற்டிக்கவில்லை...
இந்த மீன்.”
“இந்த மீன் இல்லை. நிசம்மா மனோலின்.
அதற்கு அப்புறம்...”
“பெட்ரிகோவை படகையும் துடுப்பு சமாச்சாரங்களையும்
பாத்துக்கச் சொல்லிட்டு வந்தேன். அந்த மீனின் தலையை என்ன செய்யலாம்ன்றீங்க?”
“பெட்ரிகோ அதை வெட்டி எடுத்துக்கடடும்.
அதை அவன் மீனைப் பிடிக்கிற கண்ணிகளில் பயன்படுத்திக் கொள்வான்.”
“அந்த ஈட்டி?”
“உனக்கு வேணுன்னால் அதை, அந்த ஈட்டிமூக்கை
நீயே எடுத்துக்கோ.”
“எனக்கு வேணும் அது” என்றான் பையன்.
“இப்ப நாம மத்ததைப் பத்தி யோசனை பண்ணணும்...”
“மத்தவங்கள்லாம் என்னைத் தேடினாங்களாடா?”
“பின்னே? கடலோர ரோந்துப்படை மூலம்
தேடினாங்க. விமானம் மூலம் தேடினாங்க.”
“சமுத்திரம் ரொம்பப் பெரிசுடா. படகு
சின்னது. அதை தூரத்தில் இருந்து கண்டுபிடிக்கறது கஷ்டமான காரியம்” என்றார் பெரியவர்.
அடாடா, கூடப் பேச்சுத் துணை என்று ஒராள் இருப்பது எப்பெரும் ஆறுதல், என்று கவனித்தார்.
இதுவரை நான் எனக்குநானே, இல்லாவிட்டால் கடலோடு அல்லவா பேசிக் கொண்டிருந்தேன்!
கடலும் மனசும் பதில் என்று குரல்
தராதே! இன்னொரு மனுசக்குரல் என்பதே மனுசாளுக்குப் பெரும் சமாதானம் தான்.
“கடல்ல, கூட நீ இல்லைன்னு ரொம்ப இதுவா
இருந்ததுடா” என்றார். ”நீ என்ன பிடிச்சிட்டு வந்தே?”
“முத நா ஒண்ணு. அடுத்த நா ஒண்ணு.
நேத்தி ரெண்டு மீன் கிடைச்சது.”
“அட்டகாசம்.”
“இனிமே நாம ஒண்ணா சேர்ந்தே போலாம்
தாத்தா.”
“ம்ஹும்” என்றார் பெரியவர். “நான்
அதிர்ஷ்டக்கட்டை. இனி எனக்கு நல்ல காலம்னு எதுவும் கிடையாது...”
“அதிர்ஷ்டமாவது வெங்காயமாவது” என்றான்
பையன். “அப்பிடிப் பாத்தாலும், நான் அதிர்ஷ்டக்காரன் தானே தாத்தா? என்னையும், அதிர்ஷ்டத்தையும்
கூட நீங்க அழைச்சிக்கிட்டுப் போங்க தாத்தா.”
“உங்க அப்பாஅம்மா என்ன சொல்வாங்களோ?”
“அவங்க என்ன வேணா சொல்லட்டும். அதைப்பத்தி
எனக்குக் கவலை இல்லை. நேத்திக்கு எனக்கு ரெண்டு மீன் கிடைச்சது. ஆனாலும் இப்பலேர்ந்து
நான் உங்ககூட வரேன். எனக்கு உங்ககிட்ட நிறைய கத்துக்கணும் தாத்தா...”
“பாய்ஞ்ச ஜோரில் சாவடிக்கிற ஒரு கோடாரி
தயாரா படகில் எடுத்திட்டுப் போகணும்டா” என்றார் பெரியவர். பழைய ஃபோர்டு காரின் சக்கர
விசிறிகளில் ஒரு பகுதியை எடுத்துக்கிட்டால் கோடாரி மாதிரிப் பயன்படும். கானாபகா பக்கம்
போனால் பட்டறைகளில் சக்கர விசிறியைத் தட்டிக் கூர்மையாக்கி தயார் செஞ்சிக்கலாம். கூர்மையா
இருக்கணும் அது. அதே சமயம் ஓரத்தை நசுக்கி மெல்லிசா ஆக்கிறப்டாது. அப்பிடி ஆக்கிப்பிடடால்
உடைஞ்சிரும்” என்றார். “என் கத்தி அப்பிடித்தான்... உடைஞ்சிட்டது.”
“கத்தி வேற வாங்கிக்கலாம். நீங்க
கேட்ட மாதிரி கோடாரி போல ஆயுதமும் பட்டறையில் தயார் செஞ்சிக்குவோம் தாத்தா.“
“வெளிய சூறைக்காற்று,எத்தனை நாள்
இருக்கும்னு சொல்றாங்க?”
“ஒரு மூணுநாள். கூடவும் ஆகலாம்ன்றாங்க.”
“நாம எல்லாத்தையும் தயார் பண்ணிக்குவோம்
தாத்தா” என்றான் பையன். “நீங்க உங்க கையை சொஸ்தம் பண்ணிக்கணும் ஐயா.”
“அதுங்களை எப்பிடி வெச்சிக்கணும்னு
எனக்குத் தெரியும்டா” என்றவர், “ஒரு விஷயம்டா. நேத்தி ராத்திரி நான் திடீர்னு ஒரு மாதிரி
புதுசா எதோ திரவத்தைக் கக்கினேன். அப்ப என் நெஞ்சில் எதோ நொறுங்கினாப் போல இருந்ததுடா.”
“அதையும் சரி பண்ணிக்கோங்க” என்றான்
பையன். “பேசாமல் படுத்துக்கோங்க ஐயா. உங்க நல்ல சட்டை ஒண்ணு எடுத்து வரேன். அப்பிடியே
சாப்பிடவும் எதாவது கொண்டு வரேன்.”
“நான் இல்லாத நாட்களின் செய்தித்தாள்கள்
கிடைச்சா எடுத்திட்டு வாடா” என்றார் பெரியவர்.
”நீங்க சீக்கிரம் குணமாகணும். ஏன்னா
உங்ககிட்ட நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு தாத்தா. கடலின் நல்லது ஆபத்தானது எல்லாத்தையும்
நீங்க எனக்குச் சொல்லித் தரணும் தாத்தா. இந்தப் பயணத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க?”
“ஐயோ. நிறையப் பட்டாச்சு” என்றார்
பெரியவர்.
“போயி நான் உணவும், நாளிதழ்களும்
கொண்டு வரேன்” என்றான் பையன். “நல்லா ஓய்வெடுங்க தாத்தா. மருந்துக்கடையில் கேட்டு உங்க
கைக்கு களிம்பு எதும் கிடைச்சால் வாங்கிட்டு வரேன்.”
“சரி. பெட்ரிகோ கிட்ட மறக்காமச் சொல்லிரு.
தலை அவனுக்கு தான்.”
“மறக்க மாட்டேன். சொல்றேன்.”
பையன் வீட்டை விட்டு வெளியேறி, பவளப்
பாறைகளைக் காலில் அழுத்திக் கொண்டு நடந்து போனபோது, அதுவரை அடக்கி வைத்திருந்த குமுறல்
திரும்ப வெடித்தது.
•
அந்த மதியத்தில் ஒரு உல்லாசப் பயணிகளின்
விருந்து மாடி விடுதியில். விருந்தினர்களில் ஒரு மாது மாடியில் இருந்து பார்த்தாள்.
விடுதிக்கு வெளியே தெருக் குப்பைத் தொட்டிகளில் காலி பீர் கேன்கள், விடுதியில் சாப்பாட்டு
மிச்சங்களாக எறியப்பட்ட மீன் எலும்புக் கூடுகள். அவள் பார்வை தாண்டிப் போனபோது அந்தப்
படகைக் கண்டாள். படகில் கட்டியிருந்த அந்த பிரம்மாண்ட மீனின் வாலோடு தலை வரை பார்த்தாள்..
காற்றுக்கும் அலைக்கும் அந்த மகா வால் எழும்பித் தணிவதைக் கண்டாள். கீழைக்காற்று அழுத்தமாக
எல்லாவற்றையும புரட்டும் வேகத்துடன் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் வளையவந்து கொண்டிருந்தது.
“என்னப்பா அது?” என்று ஒரு பரிசாரகனிடம்
விசாரித்தாள். ஒரு பெரிய மீனின் மகா எலும்புக் கூடு அது. இனி அது குப்பையாக அலையோடு
போகப் போகிறது.
“திபுரான்” என்று ஸ்பானிய மொழியிலும்
பின் “சுறா” என்றும் அவன் நடந்தவற்றை விளக்க முற்பட்டான்.
“சுறாக்களுக்கு இப்படி அழகான சீரான
வால் இருக்கும்னு எனக்கு இதுவரை தெரியாது.”
“எனக்கும்” என்றான் அவள் கூட வந்தவன்.
தெருவுக்கு சற்று தள்ளி தனது ஜாகையில்
பெரியவர் உறங்கிக் கொண்டிருந்தார். இப்பவும் குப்புறக் கவிழ்ந்திருந்தார். பக்கத்திலயே
அந்தப் பையன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். கிழவனின் கனவுகளில் இப்போது சிங்கங்கள்
உலவித் திரிந்து கொண்டிருந்தன.
(மு டி வு)
91 97899 87842 storysankar@gmail.com