Saturday, July 9, 2016



பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
மிழில் எஸ். சங்கரநாராயணன்
• • •

ஹெமிங்வே 1899ல் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஓக் பார்க் என்ற ஊரில் பிறந்தார். 1917ல் கன்சாஸ் சிடி ஸ்டார் இதழில் எழுத ஆரம்பித்தார். முதல் உலகப் போரில் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டியாக இணைந்து கொண்டார். என்றாலும் காயம்பட்டு வீடு திரும்ப நேர்ந்தது. 1921 முதல் அவர் பாரிஸ் நகரத்தில் வாழ ஆரம்பித்தார்.
1923ல் அரது முதல் முதல் புத்தகம் ‘மூன்று கதைகளும் பத்து கவிதைகளும்’ பாரிசில் வெளியானது. அடுத்ததாக அவரது சிறுகதைத் தொகுதி ‘நம் காலத்தில்’ 1925ல் அமெரிக்காவில் வெளியானது.
1926ல் வெளியான அவரது புத்தகம் ‘சூரியனும் உதிக்கிறான்’ வெளியானபோது அவர் ‘கடந்த தலைமுறை’யின் குரலாக அடையாளம் காணப் பட்டார். 1930 களில் அவர் கீ வெஸ்டிலும், பிறகு கியூபாவிலும் வசித்தார். என்றாலும் ஸ்பெய்ன், ஃப்ளாரிடா, இத்தாலி, ஆபிரிகா என பயணங்கள் செய்தார். அந்த அனுபவங்களில் எருதுபொருதுதல், வேட்டை என்று அவர் கதைகள் எழுதலானார். ஸ்பானிய உள்நாட்டுப் போரில் நிருபராக இருந்ததில், போர்ப் பின்னணியில் அவரால் ‘யாரை நோக்கி மணியோசை?’ என்கிற அருமையான நாவலைத் தர முடிந்தது.
பெரியவர் மற்றும் கடல் என்கிற இந்த நாவல் 1951ல் எழுதப்பட்டு, 1953 ல் புலிட்சர் விருது இதற்கு அறிவிக்கப் பட்டது. 1954ல் ‘இனி வேண்டாம் ஆயுதங்கள்’ என்ற அவரது நாவல் நோபல் பரிசு வென்றது.
1961ல் ஹேமிங்வே தற்கொலை செய்துகொண்டார்.
---
நாவலைப் பற்றி
பாப் கோர்பெட்
சனவரி 2006
மீளவும் நான் ஹெமிங்வேயிடம் வந்திருக்கிறேன். இடையே ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைக்கும் ‘ஓல்ட் மேன் அன்ட் தி சீ’ ஒரு பிரமிப்பளிக்கிற கதை. ஒரு தளத்தில் அது மனிதன் ஒருவனுக்கும் ஒரு மீனுக்கும் நடக்கிற கதை. இன்னொரு விதத்தில் பார்த்தால் அது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஊடாட்டம். வேறொரு கோணத்தில், கால காலமான மானுடத்தின் பண்பாட்டையும், வீரத்தையும், இருத்தல் சார்ந்த சவால்களின் முன் மானுடத்தின் பராக்கிரமத்தையும் விவரித்துச் செல்வதாய் அமைகிறது. இது வெளியான காலத்தின் ஆவணமாகவும், அந்த வாழ்க்கை அதன் சூழல் அதில் தனி மனிதப் பங்களிப்பு எனவும் இதை அறிய முடியும். குழுக்களாகவோ, அமைப்புகளாகவோ அல்லாமல் ஒரு தனி மனிதனின் இயக்கம், செயல்பாடு அக்கால அஎமரிக்க வாழ்க்கை இது.
இதில் வரும் கிழவனின் துணிச்சலையும், இயல்பான தினவையும் ஹெமிங்வே கொண்டாடுகிறார்.
ஹெமிங்வேயின் உலகம் வேறு. என் உலகம் வேறு. இந்தக் கதையின் கிழவன், அந்த சாண்டியாகோ அல்ல நான். இன்றைய வாழ்க்கை ஒழுங்குகளை வைத்துச் சொல்கையில், ஹெமிங்வே பரத்திக் காட்டுகிற இந்தக் கிழவன் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு முற்றிலும் அந்நியமானது தான்.
என்றாலும் ஹெமிங்வேயின் வீர்யமான கதைகூறு திறன், நான் என்னை அறியாமல் சாண்டியாகோ பக்கம் நிற்கிறேன். அவனை வியப்புடன் நோக்குகிறேன். அவனுக்கு மீறிய நெருக்கடிகளில் அவன் அடையும் இழப்புகள் எனக்கு வலிக்கின்றன.
தன் காலத்தில் மனிதன் தனது இருத்தலுக்காகவே கூட இயற்கையோடு போராட வேண்டி யிருந்தது, என்பதை ஹெமிங்வே சுட்டிக் காட்டிப் பதிவு செய்கிறார். தலையசைத்து ஆமோதிக்கவும், அந்த நாட்களை நினைவு கூரவும் ஹெமிங்வே வழி வகை செய்கிறார். சிறப்பாக, தனி மனிதன் எத்தனை மகத்தானவன், என்பதை, அவனது அபாரத் துணச்சலை, திறமையை, கலாரசனையை, பிரச்னைகளில் தாக்கு பிடிக்கிற ஆத்ம வலிமையை எல்லாம் அவர் இந்த நாவலில் உணர வைக்கிறார்.
 • • •
 ஆசானுபாகு
நூன்முகம்
மொழிபெயர்ப்பு தனிக் கலை. என் வாசகத் தளத்தை அது பரத்தி விரிக்கிறது. அகலப்படுத்தி ஆழப்படுத்துகிறது. வாசகனாக நான் அதிர்ஷ்டம் செய்தவனாகிறேன்.
ஹெமிங்வே என் ஆசான். உலக இலக்கியத்துக்கே அவர் நெறியாளர்.
அவரது இந்த நாவலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
'ஓல்ட் மேன் அன்ட் தி ஸீ' நாவலை நான் ஆங்கிலத்தில் தான் வாசித்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஓர் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை அது எனக்குக் கற்பித்தது.
தனியே ஒரு கிழவன். அவனது அசாத்திய தன்னம்பிக்கை. அவன் மாத்திரமே பிரம்மாண்டமான கடலில். கூட அவனிடம் சிக்கிய பெரிய மீன். அதனுடன் அவனது போராட்டம். யார் ஜெயிக்கப் போகிறாரகள்?... என்கிற முடிச்சு. ஆ, மனிதன் மகத்தானவன் என்ற முத்தாய்ப்பு. எத்தனை வசிகரமான கரு. என்ன வசிகரமான நடை. வாழ்க்கை மீதான பிரியம். சவால்களின் தேடல். சாதனைத் தினவு.
கிழவன் மறறும் மீன். தவிர கடல். இதில் கிழவன் தனக்குத் தானே பேசிக் கொள்கிற உத்தி அற்புதமானது. முழு கதையையும் இந்த உத்தியில் ஹெமிங்வே சிரமம் இல்லாமல் கூறிச் செல்ல முடிகிறது... இந்த உத்திதான் அந்த வயதில், என் எழுத்தின் மொட்டுப் பருவத்தில் என்னைக் கிறங்க வைத்தது.
ஹெமிங்வே என் ஆசான்.
*
நான் அடிப்படையில் எழுத்தாளன். புனைவுக்காரன். மொழிபெயர்ப்பு என் வேலை அல்ல. அது எனக்கு உவப்பாகாது, என நான் நினைத்திருந்தேன்.
நான் வாசித்த நிறைய மொழிபெயர்ப்பு நூல்கள் எளிமையாய் இல்லை. வாசிக்கும் தரத்தில் இல்லை. மூல நூலை நான் தற்செயலாக வாசித்திருந்தால், அதன் மொழிபெயர்ப்பின் விவரப் பிழைகளும், நடைத் தடங்கல்களும், விடுபடல்களும், இன்ன பிற அபத்தங்களும என் கண்ணில் தூசி போல உறுத்தின. வெகு துயரமான கணங்கள் அவை.
திரிந்த பால். வாய்க்கு ருசிக்காது.
ஆனால் நான் தற்செயலாக கவனித்தேன். தி. ஜானகிராமன், க.நா.சுப்ரமணியம் போன்றவர்கள் மொழிபெயர்ப்பைப் பொறுப்பாய்க் கையில் எடுத்துச் செயல்பட்டிருக்கிறார்கள். எழுதக் கிடைக்கிற நேரத்தை தங்கள் படைப்புகளுக்காக அல்லாமல், மொழிபெயெர்ப்புக்கு என இப்படி அவர்கள் செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் அனுபவித்த படைப்பை மொழிபெயர்ப்பாக தாம்தான் செய்ய முடியும் என்கிற மாதிரி எதோ உணர்ச்சி உந்தப் பட்டிருக்க வேண்டும். யாம் பெற்றேம் இன்பம். பெறுக வையகம். ஒரு படைப்பு உருவாவதைப் போலவே மொழிபெயர்ப்பும் ஒரு 'கிரியேடிவிடி', புனைவுத்திறன் வேண்டிநிற்கிற விஷயம் என அவர்கள் கண்டுகொண்டார்கள்.
நானும்.
மொழிபெயர்ப்பு என்பது 'டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்'. இதைப் பலமுறை நான அனுபவித்திருக்கிறேன். இராமானுசராய் பகிரங்கப் படுத்தியும் இருக்கிறேன். மூலத்தை உள்வாங்கிக் கொள்ள மொழிபெயர்ப்பாளனாக ஒரு புனைவுஎழுத்தாளனின் வாசிப்பு அனுபவம் என்பது ஆகாவென்று அமைகிறது. மொழிபெயர்க்கையில் அவன் மூல எழுத்தாளனோடு இன்னும் நெருங்கி அமர்கிறான். மகா அனுபவம் அது. தன் பார்வை தீட்சண்யத்தை அந்த மொழிபெயர்ப்புப் புனைவாளன் இன்னும் தீர்க்கமாக்கிக் கொள்ள வாய்க்கிறது. இந்துவாகப் பிறந்தால் சாவதற்குள் காசி போய்வர வேண்டும், என்கிறாப் போல, ஒரு ருசிகொண்ட எழுத்தாளன் மொழிபெயர்ப்பதில் தானாகவே ஆர்வப் படுவான், என்றே எனக்குத் தோன்றுகிறது. தோன்றியது. நான் அப்படித்தான் இதோ இந்த நூலுக்குள் வந்தேன்.
*
ஹெமிங்வேயின் இந்த நாவலுக்கு, கடலும் கிழவனும், கிழவனும் கடலும், என பல மொழிபெயர்ப்புகள் தமிழிலேயே கிடைக்கின்றன. ஆயின் தலைப்பிலேயே அதன் வீர்யம் இன்னும் பொலிவு பெற வேண்டும் என்று இருக்கிறது எனக்கு. ஆங்கிலப் படங்கள், கடல் சார்ந்த திரைப்படங்கள் பார்க்கிற போது, கப்பலின் தலைவனை, அவன் எவ்வளவு இளையவனாய் இருந்தாலும் கூட, மரியாதையாய் எல்லாரும் 'ஓல்ட் மேன்' என்று அழைப்பதை கவனிக்க முடியும். 'ஓல்ட் மேன்' என்பது ஒரு மங்கல வழக்கு. ஆங்கிலேய ஆட்சியில் கூட இளம் வயது நீதிபதிகளை, தீர்ப்பு வழங்கும் போது, தலையில் வெண்நரை முடியாலான 'விக்' வைத்துக் கொண்டு பதவியாற்றியதைப் பார்த்திருக்கலாம். வெகுகாலமாய் நட்புடன் இருக்கிற ஒரு நண்பனைக் கூட, வயதுக்கு சம்பந்தம் இல்லாமல், “எங்கே உன்னோட ஒல்ட் மேன்?” எனக் கேட்பதைப் பார்க்கிறோம்.
கடலை நன்கு அறிந்தவன் இந்த நாவலின் கதாநாயகன். அவனை உயர்த்திப் பிடிக்கிற அளவிலேயே ஹெமிங்வே அவனை 'ஓல்ட் மேன்' என்று குறிப்பிடுகிறார். அந்த அளவில் கடலும் கிழவனும், அல்லது கிழவனும் கடலும் என்கிற தலைப்புகள் எனக்கு உவப்பாய், போதுமானதாய், ஒட்டுறவாய் இல்லை.
பெரியவர் மற்றும் கடல்,
இதுவே எனது தேர்வு. 'மற்றும்' என்பது 'அன்ட்' என்கிற அளவில் ஒரு எறிவேகத்துடன் அமைதல் பொருத்தம், என நினைக்கிறேன்.
தவிரவும் பகிர முக்கியமாய் சேதி ஒன்று உண்டு. மூல நூல் கிடைக்கப் பெற்றவர்கள், அதையே நுகர்க. மொழிபெயர்ப்பை நோக்கி இடம் மாற வேண்டாம். என்னதான் தர்க்கம் செய்தாலும், மொழிபெயர்ப்பு என்பது 'ரெண்டாம் டிகாஷன்' தான்.
நன்றி.

எஸ். சங்கரநாராயணன்
91 9789987842
(இனி அடுத்த ஞாயிறு முதல் நாவலின் பகுதிகள் வேளியாகும்)


1 comment: