Saturday, July 23, 2016

பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

3

••
“ஆமாம்!” கிழவன் பரபரப்பானான்.
“அட ஆமாங்கறேன்!”
••

ஆ. அதோ பறவை... வட்டம் இடுகிறது!
“அது மீனைக் கண்டுக்கிட்டது!” கிழவன் சத்தமாய்க் கூவினான். பறக்கும் மீன்கள் எதுவும் நீர்ப்பரப்புக்கு மேலே எகிறவில்லை. தூண்டில் இரையிலும் எந்தச் சலனமும் இல்லை. கிழவன் உன்னிப்பாகப் பார்த்தான்.
சின்ன டூனா வகை மீன் குஞ்சு ஒண்ணு. விஷ்க் என்று தண்ணீருக்கு மேலே தாவியது. அப்படியே காற்றில் சுழன்று தலைகீழாகத் திரும்பி தண்ணீருக்குள் புகுந்து கொண்டது. மேலே காற்றுக்கு அந்த மீன் எகிறும்போது அதன் உடம்பே பளபளவென்று வெள்ளியாய்ப் பொலிந்தது அந்த சூரிய வெளிச்சத்தில்.
முதல் மீன் திரும்ப நீருக்குத் திரும்பியதும், இதோ அதோ என்று மேலும் ஒவ்வொரு மீனாகத் துள்ளாட்டம் போட்டன. நாலா பக்கத்திலும் எட்டு திசை, அல்ல மேலும் கீழும் என்று பத்து திசையிலும் சிதறின அவை. தண்ணீரே அமளி துமளிப் பட்டது. காலை ஊனி எக்கி நீளந் தாண்டுதல் போல. தூண்டில்களைச் சூழ்ந்து கொண்டன அவை. தூண்டில்களைச் சுற்றி மொய் மொய் என்று மேய்ந்தன. அதை முட்டி தட்டி அசைத்து ஒரு ஆட்டம்.
டூனா மந்தை ரொம்ப வேகமா நகர்ந்து விடும். அது கொஞ்சம் சாவகாசப்பட்டால் நான் அவற்றை அடைந்துவிடுவேன்... என அவன் நினைத்தான். அதுகளின் திரிசமனில் தண்ணீரே நுரைத்துச் சிரித்தது.
பறவை சிறகுகளைச் சரித்து இறங்கி தண்ணீர் மட்டத்துக்கு வந்து மீனை லபக் எனக் கவ்வ எத்தனித்தது. மீன்கள் இந்த களேபரத்தில் மேல்மட்டத்தில் பரிதவித்திருந்தன.
“மீனவனுக்குப் பறவைகள் ரொம்ப ஒத்தாசை” என்றான் கிழவன்.
அந்த நேரம் அவன் காலால் அழுத்திக் கொண்டிருந்த ஒரு தூண்டில் சிறிது சிணுக்கம் காட்டியது. தூண்டில் கம்பிகளைக் கடலில் இறக்கிய வசத்தில் காலில் அதன் ஒரு பகுதியை அழுத்தி வைத்துக் கொண்டிருந்தான் அவன்.
கிழவன் துடுப்புகளைத் தளர விட்டான். தண்ணீருக்குள் சின்ன டூனா மீன் தூண்டிலை எத்தனை கனமாய் இழுக்கிறது என்று கையால் இலேசாய் இழுத்துப் பார்த்தான். கயிறை இறுக்கமாய்ப் பிடித்தான்.
மெல்ல அந்தத் தூண்டிலை மேல் நோக்கி வலிக்க ஆரம்பித்தான். அதை மேலே இழுக்க இழுக்க கயிறு மேலும் மேலும் நடுக்கமுற்று உதறிப் பதறியது.
ஒரு மீனின் நீல முதுகு தெரிந்தது. தகதகவென்று அது திரும்பியது. அதை அப்படியே தூண்டிலோடு பக்கவாட்டில் இழுத்து தூக்கிப் படகில் போட்டான்.
சூரியனைப் பார்க்க அது அப்படியே படகின் தரைத் தளத்தில் கிடந்தது. கிண்ணென்று போர்க்குண்டு வடிவத்தில் மீன். குறிப்பு காட்டாத உப்பிய கண்ணின் வெறித்த அசையாத பார்வை.
கிழிசல் இல்லாத ஒழுங்கான அதன் வாலைப் பற்றினான். உதறித் துடிதுடித்தது வால்.
அப்படியே படகின் சுவரில் அதை ஓங்கி அறைந்து சாந்தப் படுத்த முயன்றான் அவன். உயிர் போகவில்லை அதற்கு.
பாவம் ரொம்ப துடிக்க விடக் கூடாது. தலையில் ஒரு அடி. காலால் ஒரு உதை. படகின் உள்ளே ஒருச்சாய்ந்த சிறிய நிழல். மீன் சாகாமல் இன்னும் கடைசி நேரத் துடிப்பு காட்டியது.
“அல்பகோர்!” சத்தமாய்க் கத்தினான் கிழவன். “பெரிய மீனுக்குச் சரியான தூண்டில் இரை ஆச்சே. இதுவே பத்து பவுண்டு எடை காணுமே!”
தனியே இப்படி தான் மாத்திரம் படகில் இருந்தால் இப்படி தனக்குத் தானே பேசிக் கொள்கிறான் அவன். எப்படி எப்போது இந்தப் பழக்கம் ஆரம்பித்தது நினைவில் இல்லை.
அது ஒரு காலம்.. இப்படி தனியான கணங்களில் வாய் தன்னைப் போல பாட்டெடுக்கும். படகில் சில ராத்திரிநேரப் பயணங்களில், ரோந்து போனாலோ, ஆமை வேட்டை என கிளம்பிய சமயங்களிலோ பாடியிருக்கிறான்.
பையன் கூடவருவதை நிறுத்திய பின் தனியே அவன் மாத்திரம் படகில் கிளம்ப வேண்டி வந்ததே, அபபத்திலேர்ந்து வந்திருக்கலாம் இந்தப் பழக்கம். தனியே தனக்குத் தானே பேசிக் கொள்வது.
சரியாக அவனுக்கு ஞாபகம் இல்லை.
ஆனா என்ன வேடிக்கை என்றால், அவனும் பையனும்... ரெண்டு பேருமாய் மீன் பிடிக்க என்று கூட்டாய்ப் போனால், அவர்கள் தேவைப் பட்டால் ஒழிய ஒரு வார்த்தை பேசிக் கொண்டது கிடையாது!
ராத்திரி வேளை என்றால் பேசிக் கொள்வார்கள். அல்லது, புயல் மாதிரி கடலுக்குள் அசந்தர்ப்பங்கள் எதுவும் வந்தால் பேசிக் கொள்வார்கள். அவ்வளவுதான்.
கடலில் இருக்கும்போது தேவைப்படி பேசு. தேவை இல்லாட்டி பேச்சு வேணாம். வேலையில் கவனம் இருக்கட்டும். கிழவனுக்கு அப்படித்தான் யோசனை இருந்தது. அதைக் கடைப்பிடிக்கவும் செய்தான்.
அது ஒரு காலம். இப்ப அவனே மனசில் நினைக்கிறதை யெல்லாம் அந்த அத்துவான வெளியில் சத்தம் போட்டு அறிவித்தான். ஒரே விஷயமானாலும் திரும்பத் திரும்பக் கத்திச் சொன்னான். கடல்தானே? சுத்தி ஆள் யார் இருக்கா? யாரை அது பாதிக்கப் போகிறது, என்கிற எண்ணமாய் இருக்கலாம்.
“ஹா ஹா, இப்படி நான் தனியே சத்தமாய் பேசிக்கிடறதைப் பார்த்தால் அவனவன் என்னைப் பைத்தியக்காரன்னு நினைப்பான்” என்றான் கிழவன். அதையும் அந்தக் கடல் வெளி அத்துவானத்தில் சத்தமாகவே சொல்லிக் கொண்டான். “நானா பைத்தியக்காரன்? நான் பைத்தியம் இல்லை. நான் அவங்களை சட்டை பண்ணப்போறது இல்லை!
துட்டு வசதி உள்ளாட்கள் படகில் ரேடியோப் பெட்டி எடுத்துட்டுப் போறாங்க. அதுவே நல்ல பேச்சுத் துணையா ஆயிருது. கழிப் பந்தாட்டம் பத்தி சேதிகள் அங்கருந்தே கேட்டுக்கலாம்.
ஆனால்... இது நாம கழிப் பந்தாட்டம் பத்தி யோசிக்கிற நேரமா?..., என நினைத்தான் கிழவன். ஹ்ம். இப்ப... நான் நினைச்சிப் பார்க்க வேண்டியது, ஒரே ஒரு விஷயம்தான். என் பிறப்பு பத்தி. எதுக்காக நான் பிறந்திருக்கிறேன். நம்ம தேவை, நம்ம பிழைப்பு... அதைப் பத்தி யோசிக்கலாம்.
அதோ ஒரு மீன் மந்தை! அங்கே ஒரு பெரிய மீன் இருக்கலாம், என நினைத்தான் அவன்.
உணவு கொள்ள மேல் மட்டம் வரை வந்த மந்தை மீன்களில் வழி தப்பிப்போன ஒன்றைத்தான் நான் பிடித்தேன். ஆனால் இதுகள் சட்டென விலகி தூரமாய்ப் போய்விடுகின்றன. என்ன வேகம்!
இன்னிக்கு எனக்கு கடலின் மேல் மட்டத்தில் கிடைக்கிற மீன்கள் எல்லாமே அப்படி விரைவு காட்டி வெகுதூரம்... வட கிழக்குப் புறமாக நகர்ந்து விடுகின்றன.
இது தான் எனக்கான நேரம், என்பதா? எனக்குத் தெரியாமல் எதோ நடக்கப் போகிறதோ ஒருவேளை?
இங்கே யிருந்து இப்போது கரையின் பசுமை தெரியவில்லை. நீல மலைச் சிகரங்கள் தான், ஆனால் வெண்மையாய்க் கண்டன. பனித் தொப்பி அணிந்தாப் போல. அதற்கும் மேலே வெண்மை மலைக் குவியல்களாய் முகில்கள்.
கடல் நிறம் இன்னும் ஆழப்பட்டிருந்தது. சூரிய ரச்மிகள் கண்ணாடி போல் தண்ணீரில் மினுக்கங் காட்டின. ஒளி தண்ணீர் மட்டத்தில் பட்டு வண்ணத் தெறிப்புகளாய்ச் சிதறினாப் போலிருந்தது.
சூரியன் நன்கு மேலேறி வந்திருந்தான். கடலில் கொத்துக் கொத்தாய்க் கிடக்கும் தாவர முடிச்சுகளே தெரியவில்லை இப்போது.
இப்போது வெறும் ஒளி சிதறும் தண்ணீர். நீலக் கடல்.
தூண்டில்களை இப்போது நேரே கடலின் அடியாழத்துக்கு, ஒருமைல் ஆழத்துக்கு, கோணாமல் சாயாமல் விட்டு வைத்திருந்தான்.
அந்த டூனா...
எல்லா மீன் வகைகளையும் மீன்வர்கள் டூனா என்றே அழைத்தார்கள். எது என்னசாதி மீன், என்பதையே அவர்கள் அதை விற்பனை செய்ய, அல்லது தூண்டில் இரை என்று கேட்டு வரும் போதுதான், படகில் இருந்து கரைக்கு வந்து சேர்ந்த பின்புதான் பேசிக் கொண்டார்கள்.
சூரியன் தகிக்க ஆரம்பித்திருந்தது. அவன் பின்கழுத்தில் எரிச்சல் எடுத்து அரிப்பு கண்டது இப்போது. துடுப்பு வலிக்க என்று குனிய நிமிர முதுகில் வியர்வை நதிகள் ஓடின.
கொஞ்ச நேரம் துடுப்பு போடாமல் அப்படியே மிதக்கலாம், என நினைத்தான். கால் கட்டை விரலில் தூண்டில் கயிற்றினால் ஒரு முடிச்சு போட்டுக் கொண்டு சிறிது கண்ணயரலாம் என்று கூட இருந்தது. தூண்டிலில் எதுவும் சலனம் வந்தால் அதுவே என்னை உசுப்பி விட்டுரும்...
என்ன இருந்தாலும், இன்னிக்கோட இது எண்பத்தி ஐந்தாவது நாளாக்கும். நாம இன்னிக்கு நல்லபடியா சுணக்கம் இல்லாமல் வேலை செய்யணும்.
அட அப்போதுதான், நீருக்கு மேலே உயரத்தில் நீட்டி தூண்டிலைக் காட்டிக் கொண்டிருந்த பச்சை மூங்கில் குச்சிகளில் ஒன்று தண்ணீருக்குள் நல்லா உள்ளமுங்க ஆரம்பித்தது!
“ஆமாம்!” கிழவன் பரபரப்பானான். “அட ஆமாங்கறேன்!”
துடுப்புகளை அதிராமல் இயக்க ஆரம்பித்தான் கிழவன். அந்தத் தூண்டிலை எட்டி மிருதுவாய்ப் பற்றினான். வலது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இரண்டினாலும் பிடித்தான் அதை. அதில் கயிற்றின் விரைப்போ, கனமோ தட்டினாப் போல இல்லை.
அப்படியே லேசான லகுவில் வைத்துக் கொண்டான் அதை. ஆ, திரும்ப அந்த உதறல். இப்போது ஒரு சுண்டு சுண்டப்பட்டது கயிறு. அதைத் தெளிவாக உ ணர முடிந்தது.
அழுத்தமான இழுப்பு அல்ல. கனமும் தட்டாத இழுப்பு தான் அது.
ஆனால்... என்ன அது... அவனுக்கு அது என்ன என்று தெரிந்து விட்டது!
ஒரு நூறு ஃபாதம் ஆழம் இருக்கும். ஒரு மார்லின் உணவு எடுக்கிறது. சார்தைன் மீன்கள் ருசிக்கப் படுகின்றன. கொண்டி கொக்கியை மூடி மறைத்து மேலேசுற்றி மூடிக் கட்டப் பட்டிருக்கிற சார்தைன் மீன்கள் அவை. சார்தைன் மீனின் தலைக்குள் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு காத்திருக்கிறது முள் கொக்கி.
கிழவன் அந்தத் தூண்டிலை மிருதுவாக, மென்மையாக, செல்லமாக இடது கையினால் பிடித்திருந்தான்.
இனி தூண்டில் வேணாம்... என அதை மூங்கில் குச்சியில் இருந்து உருவி தன் கைக்கு மாற்றிக் கொண்டான். மீன் இப்போது சௌகரியமாக இரை எடுக்கலாம். மேலே இருந்து தூண்டில் அதை மேல் பக்கமாக இழுத்து இடைஞ்சல் கொடுக்காது.
கடலின் இத்தனை உள்ளே இருக்கிறது இந்த மீன். கரைக்கு இத்தனை தூரத்தில். இந்த மாசக் கணக்குக்கு, பெரிய மீன் என்றுதான் தோணியது அவனுக்கு.
சாப்பிடு மீனே. உனக்குதான் அவை. சாப்பிடு. தயவு செய்து சாப்பிடு!
அந்த சார்தைன் புத்தம் புதுசு. ருசிக்குப் பஞ்சமில்லை. நீ பாரு... கடல்ல அந்த அறுநூறு அடி ஆழத்துல, மகா இருட்டுல இருக்கே. சிறு கடி. போய் ஒரு ரவுண்டு சுத்தி வா. திரும்ப வா. திரும்ப இன்னும் சாப்பிடு. வா.
அந்த மீனின் கடியில் சிறு சுண்டல் கையில் தெரிந்தது. திடுமென்று அந்த சுண்டலில் இன்னும் விசை. சார்தைனின் தலையை நறுக்கென்று கடிக்கிறதோ? அதைக் கொக்கியில் இருந்து கடித்து இழுக்க வரவில்லையோ?...
பிறகு அசைவே இல்லை உள்ளே.
”என்னாச்சி? வா மாப்ளே!” என்று சத்தமாய்க் கத்தினான் கிழவன். “ஒரு ரவுண்டு போய் வா. திரும்ப வா. வந்து வாசனை... எப்பிடி இருக்கு? அருமையா இல்லே? இப்ப பெருங் கடியாய் ஒரு கடி, கடி பார்க்கலாம்.
ஆ... வந்திட்டது. டூனா! கெட்டியான மீன். குளிர்ந்து கெடக்கு அது. அருமையான மீன்... சங்கோஜப் படாதே. உனக்குதான். எடுத்துக்கோ. சாப்பிடு!”
கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே பிடித்திருந்தான் தூண்டிலை. அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே மத்த தூண்டில்களின் மீதும் ஒரு கண் இருந்தது. ஒருவேளை மீன் மேலோ, கீழே நீந்தி வரலாம் அல்லவா?
என்றாலும் அதேபோல ஒரு செல்லச் சுண்டல் இதே கயிறில் உணர்ந்தான் அவன்.
“அதுக்கு இந்த உணவு பிடிச்சிப் போச்சு” என்றான் அவன். “வாய் வைப்பா நல்லா...” என்று கத்திச் சொன்னான். “யேசுவே, அந்த மீனுக்கு உதவி பண்ணு. அதை இரையை உண்ணப் பண்ணு!”
என்றாலும் அப்போது மீன் இரையைச் சீண்டியதாகத் தெரியவில்லை. விலகிப் போயிருந்தது அது. தூண்டில் மௌனம் காத்தது. அசைவே இல்லை. அவனுக்கு, கைக்கு சலனமே தெரியவில்லை.
“அது போயிருக்காது” என்று சொல்லிக் கொண்டான் அவன். “யேசுவே! அது விலகிப் போய்விடாது. அட போகுது. போயி ஒர் ரவுண்டடிக்கும். பின்னே திரும்ப வரும்.
சிலப்ப என்னாயிரும், இப்பிடி முன்னே ஒருவாட்டி எதோ துண்டில் கீண்டில்ல மாட்டியிருக்கும். மாட்டி தப்பிச்சிருக்கும். அதை நினைக்குதோ என்னவோ?
ஆ... இப்போது திரும்பவும் தூண்டில் துடித்தது. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“அப்டியே சல்லுனு ஒரு ரவுண்டு அடிச்சார் வாத்தியார். திரும்பிட்டார்” என்றான் கிழவன். “இப்ப பார். வந்து இரையை லபக் என கவ்விக் கொள்வார்.”
லேசாய் மிக மென்மையாய் ஒரு இழுப்பு. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
உடனே அந்த இழுப்பில் ஒரு கடுமை.. நம்ப முடியாத மகா கனம். அது அந்த மீனின் எடைதான்.
சட்டென கயிறுகளை நழுவ விட்டான். மேலும் மேலும் தளர விட்டான். கண்டில் இருந்து உருவிக்கொண்டு தண்ணீருக்குள் இறங்கியது கயிறு. அவனது விரல்களின் வழியே சுறுசுறுவென்று கயிறு தண்ணீருக்குள் இறங்கியது.
முதல் இரண்டு கண்டுகளின் கயிறும் முழுவதுமாக அவிழ்ந்து துண்ணீருக்குள் போய்விட்டன. கயிறு தளரத் தளர விரல் வழியே அது உள்ளே இறங்க இறங்க, அப்பவும் கூட அவனுக்கு உள்ளே இருக்கிற மீனின் எடையை உணர முடிந்தது. சரியான கனங் கனத்தது மீன்.
கையில் கயிறைப் பிடிக்காத மாதிரி அத்தனை மெனமையாகப் பற்றியிருந்தான். என்றாலும் அதை உணர்ந்தான் அவன்.
“யம்மாடி, என்ன மாதிரியான மீனப்போவ்!” என்றான் அவன். “விஷயம் என்னன்னால்... மீன் அந்த உணவைக் கடித்தாகி விட்டது. முள் கொக்கியும் அதன் வாயில் இப்போது. ஆனால்... கொக்கி இப்போது அதன் வாயில் பக்கவாட்டில் போல மாட்டிக் கொண்டிருக்கிறது! மீன் இப்ப அந்தக் கொக்கியோடவே மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது!”
போகட்டும், என நினைத்தான். ஒரு தூரம் போகும் அது. மெல்ல திரும்பும். மெல்ல அந்த இரையை விழுங்கும் அது.
ஆனால் நினைத்தானே யொழிய சத்தமாய் அதை வெளியே பேசவில்லை அவன். சில நல்ல காரியங்கள், போட்டு உடைச்சாப்ல அவற்றைப் பேசிறக் கூடாது. அப்பறம் அது நடக்காமல் போயிரும்!
நல்ல வசம்மான பெரிய மீன். அது தெரியும் அவனுக்கு. படகை விட்டு தள்ளிப் போகிறது அந்த இருளில், இரைமீன் வாய்க்குள் குறுக்கு வசத்தில் அதக்கப் பட்டு இருக்கிறது.
அந்த விநாடியில் மீன் சட்டென நீந்துவதை நிறுத்தியது.
என்றாலும் அவன் கையில் உணரப்பட்ட அந்த எடை, அதை இப்போது மீண்டும் உணர முடிந்தது.
இப்போது அந்த எடை இன்னும் அதிகமானது. இன்னுமாய்க் கயிறைத் தளர விட்டான் அவன். ஆனால் கை விரல்களின் பிடியை இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
இப்போது கயிறு நேராய்த் தண்ணீரில் நிற்கிறதை உணர முடிந்தது.
“இரை எடுத்துவிட்டது!” இப்போது வெளிப்படையாய்ச் சொன்னான் அவன். “இப்ப... நான்... அது திருப்தியா இரையெடுக்க வைப்பேன்!”
திருமப விரல்கள் வழியே கயிறை நழுவ விட்டான். குனிந்து இடது கையால் அடுத்த தூண்டிலின் இரு கண்டுகளில் இருந்து மேலும் கயிறை இதனோடு சேர்த்து உள்ளே இறக்குகிற அளவில் வகை பண்ணிக் கொண்டான்.
இப்ப அவன் தயார்! இப்ப அவனிடம் முந்நூத்தி நாற்பது ஃபாதம் ஆழம் வரை உள்ளே செலுத்த கயிறு இருக்கிறது. இந்தக் கணக்கு தவிர இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கயிறு... அதுவும் கை கொடுக்கிறது.
“இன்னுங் கொஞ்சம் சாப்பிடு. கடி!” என்றான் அவன். “நல்லா இஷ்டப்படி சாப்பிடு.”
அதை நீ கடிக்கற கடியில்... முள்ளின் கொக்கி நல்லா உள்ளே, உன் இதயம் வரை போகிறாப் போல கடி, அத்தோடு உன் சமாச்சாரம் முடியணு1ம். அந்த மாதிரி ஒரு கடி... கடி பார்க்கலாம்... என சொல்லவில்லை. நினைத்தான்!
வா. சும்மா மேலே வா நீ. ஈட்டி தயாராய் வெச்சிருக்கிறேன். உன் மேல் பாய்ச்ச நான் தயார். நான் காத்திருக்கிறேன். ம். நீ? நீ தயாரா?
என்ன நீ, சோத்துத் தட்டை வைத்துக்கொண்டு சாப்பாட்டு மேசையில் இத்தனை நேரமா உட்கார்ந்திருக்கிறாய்!
“இப்போ!” என்றான் சத்தமாய். ரெண்டு கையாலும் அந்தத் தூண்டிலை ஒரு கஜ அளவுக்கு மேலே வலித்தான். முழு பலத்துடன் இன்னும் அசைத்து மேலே இழுத்தான். இந்தக் கையாலும் அந்தக் கையாலும் மாற்றி மாற்றி மேலே இறைத்தான்
கயிறை. மேல் ராட்டினத்தில் இருந்து இறைத்தான். தன் முழு பலத்தையும் பிரயோகித்து உடம்பை விரைப்புடன் பின் சாய்த்து இழுத்துக் கொண்டிருந்தான் அவன்.
ஒண்ணுமே ஆகவில்லை.
மீன் மெதுவாக வெளியே நகர்ந்தது ஆழத்தில்.
அவன் ஆட்டிய ஆட்டத்தில் அதை ஒரேயொரு இன்ச் கூட மேலே இழுக்க முடியாது போயிற்று.
அவன் பயன்படுத்தும் வடக் கயிறு ரொம்ப உறுதியானது. பெரிய மீன்களை அது தாக்கு பிடிக்கும்.
என்ன கனம் இருக்குது இது... அதை, மீனை மேலே இருந்து பிடிக்கவே அவனுக்குத் திணறலாய் இருந்தது. அவன் பிடித்த கயிற்றில் இருந்து தண்ணீர் முத்துக் கோர்த்து வரிசையிட்டுச் சொட்டியது. இபபோது
கடல் அடியில் சின்ன ரகசியச் சத்தம். அவன் அப்படியே இறுக்கிப் பிடித்து நின்றிருந்தான். படகின் குறுக்குக் கட்டையில் முன்பக்கமாக மல்லாக்கப் படுத்துக் கொண்டு முழு தம் பிடித்து நின்றான்.
படகு இப்போது தன்னைப் போல வடமேற்கு திசையில் நகர ஆரம்பித்திருந்தது.
மீன் நல்ல நிதானத்துடன் நகர்ந்து கொண்டிருந்தது. கூடவே அவனும் நகர்ந்து கொண்டிருந்தான். நீர்ப்பரப்பு அமைதியாய்க் கிடந்தது. மீதித் தூண்டில்களின் மீதி இரைகள். அவை கடலில் கூட வந்தன. அவனால் இப்போது செய்யக் கூடியது எதுவும் இல்லை.
“ஹ்ம். இப்ப என்கூட அந்தப் பையன் இருந்திருக்கலாம்!” என்றான் கிழவன் சத்தமாய்.
“ஒரு மீன்... அது என்னை இழுத்துக்கிட்டுப் போகுது இப்போ. ஒரு கட்டைபோல நான், அது என்னை இழுக்க, என்னால் எதுவும் செய்ய முடியாமல் அதன் இழுப்புக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
இந்தக் கயிறை எங்காவது கட்டி விடலாம். ஆனால் பெரிய மீன் இது. கயிற்றை சுலபமாக அறுத்துக் கொண்டு தப்பித்து ஓடி விடும் அது.
நான் பிடியை விட்டுவிடக் கூடாது. தேவைப் பட்டால் அது உள்ளே இழுக்கும் போது மேலும் கயிறை தேவைப்படி அதன் வசத்துக்குத் தளர விடுவேன்.
இதுல ஒரு நல்ல விஷயம். கடவுளுக்கு நன்றி. அது அதுபாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. சட்டுனு உள்ளே என்று போய்விட அது நினைக்கவில்லை!
அதுபாட்டுக்கு தீடீர்னு கிழே அடியாழம் நோக்கி நீந்த ஆரம்பிச்சால்... நான் என்ன பண்ணுவேன், எனக்கே தெரியாது. ஆது ஆக்ரோஷப் பட்டால்? இப்படியே இழுத்துக் கொண்டு ஓட முடியாமல் இறந்து போனால்? நான்... என்னால் என்ன செய்ய முடியும்? ஒண்ணுமே புரியவில்லை எனக்கு.
ம். ஆனால்... நான் எதாவது செய்ய வேண்டும். செய்வேன். என்னால் முடியும். என்னால் நிறைய விஷயங்கள் முடியும். செய்வேன்!
அப்படியே மல்லாந்த நிலையில் அந்தக் கயிற்றை இறுக்கமாய்ப் பிடித்திருந்தான் அவன். தூண்டில் கழி சாய்ந்த வாக்கில் தண்ணீரில் உள்ளே நுழைவதைப் பார்த்தபடி யிருந்தான்.
படகு தன் போக்கில் வடமேற்காக ஒரு பிரயாணம்.
இப்படியே வாய்க்குள் கொக்கியுடன் அது இழுத்துக் கிட்டேபோயிட்டிருந்தால் அதுவே அதைக் கொன்னுருமே, என நினைத்தான். சும்மாங் காட்டியும் இப்படியே அதுபாட்டுக்கு என்னை இழுத்திட்டுப் போயிட்டிருக்க முடியாது, என நினைத்தான்.

-     தொடர்கிறது

-     91 97899 87842 storysankar@gmail.com

No comments:

Post a Comment