Tuesday, July 19, 2016

பெரியவர்
மற்றும்
கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
*
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
2
••
கடல் பிரியமானது தான்.
மகா அழகு கடல். அதெல்லாம் சரி.
ஆனால் சில சமயங்களில்...
••

டகின் உள் கொக்கிகளில் துடுப்புகளோடு கயிறுகளைப் பிணைத்துக் கொண்டார் அவர். பிறகு முன்குனிந்து துடுப்புகளை விசையுடன் பின்தள்ளி படகைச் செலுத்தி அந்த இருளில் கடலுக்குள் கிளம்பினார். வேறு படித்துறைகளில் இருந்தும் பிற படகுகள் கடலுக்குள் கிளம்பி வந்து கொண்டிருந்தன.
நிலா மேலும் இறங்கி மலைகளுக்குள் மறைந்துவிட்ட வேளை. மற்ற படகுகள் கண்ணில் படவில்லை. என்றாலும் பிற படகுகளில் இருந்து துடுப்புகள் தண்ணீரில் மூழ்கும், வெளியே வரும் சளப் சளப் ஒலிகள். அவரால் கேட்க முடிந்தது.
எப்பவாவது அந்த இருளில் படகுக்காரர்களில் யாராவது சத்தங் கொடுப்பார்கள். என்றாலும் பெரும்பாலும் அமைதியாய்க் கிடந்தது வெளி. துடுப்புகளின் துழாவல் ஓசை மாத்திரம் மெலிதாய்க் கேட்டவண்ணம் இருந்தது.
அந்தப் படகுகள் துறைமுக முகத்துவாரம் தாண்டியதும் பெருங் கடலின் பல்வேறு திசைகளில் சிதறிப் பரவின. கடலின் எந்தப் பகுதியில் மீன் சிக்கும் என ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு யோசனை.
பெரியவர் ரொம்ப தள்ளி உள்ளே போகிற முடிவில் இருந்தார். கரை அடையாளங்களுடனான வாடையைத் தாண்டி வெகுதூரம் உள்ளே, புதிய காலையின் மணத்தை கடலுடன் நுகர்ந்து கொண்டே துடுப்புகளைச் செலுத்திப் போனார். கல்ஃப் வளைகுடாவின் பாசிகள் நெடுகப் படர்ந்து கிடந்தன வழியெங்கிலும். அதன் மேல் படகை ஓட்டிப் போனார்.
அந்தப் பகுதியை மீனவமார் பெருங் கிணறு என்று அழைத்தார்கள். அந்தப் பகுதியில் சட்டென பூமி பள்ளமாகி, ஒரு எழுநூறு ஃபாதம்**** அளவு ஆழப்பட்டது. (**ஒரு ஃபாதம் ஆறு அடி.) அந்தக் குழியினால் அதைச் சுற்றியுள்ள கடல் சுவர்போல் எழும்பி நின்றது. அதனால் சுழல் ஒன்று அந்தப் பகுதியில் உற்பத்தியாகி, ஏராளமான மீன்களை அங்கே சரித்துக் குவித்துக் கொண்டுசேர்ப்பதாய் இருந்தது அந்த இடம்.
அந்தப் பகுதிகளில் பெரிய மீன்களுக்கு நல்ல இரை என்கிற மாதிரியான மெலிந்த சிறு மீன்களும் கடல் பிராணிகளும் கிடைத்தன. கடலின் உள் பகுதிகளின் துளைபோன்ற இருளில் பெருங் கூட்டமான சிறு உயிர்கள் நடமாடித் திரிந்தன. ராத்திரி நேரம் இப்படி இரைகள் கடலின் மேல் மட்டத்துக்கு வர பெரிய மீன்கள் அவற்றை இரையெடுத்தன.
அந்த இருட்டிலும் அவருக்கு விடியலின் ரேகையிழைகள் தெரிந்தன. அவர் படகோட்டிப் போனார். சர்ர்ரென்று சிறு நடுக்கத்துடன் நீருக்கு வெளியே துள்ளி யடங்கும் 'பறவை மீன்கள்'. செதில்களை அவை அசைச்கிற கிசுகிசுத்த ஓசையை அவர் கேட்டார்.
பறக்கும் மீன்களை ரசிக்க அவருக்குப் பிடிக்கும். கடலில் அந்த இருளில் அவைகள் தாம் அவருக்கு சிநேகிதக் கூட்டம்.
மீனை இரையாய்த் தேடி வரும் பறவைகளை யிட்டு கிழவனுக்கு வருத்தம் உண்டு. குறிப்பாக சின்ன கரிக் குருவிகள். வெறுமனே வானத்தில் பறந்து திரிந்து அவை வேவு பார்க்கத்தான் செய்கின்றன. என்றாலும் அதுகள் லாயக்கில்லை. அதுகளுக்கு மீனைப் பிடிக்க துப்பு கிடையாது. அதுகளிடம் மீன்கள் சிக்குவது துர்லபம் தான்.
ச். பாவம். பறவைகள், நம்மை விட அவைகளின் வாழ்க்கைப்பாடு சிரமமானது தான், என நினைத்துக் கொண்டான் கிழவன். ஆனால் அவற்றிலும் திருட்டுப் பறவைகள், நல்ல கொழுத்த பறவைகள், என சில ஓகோவென வாழத்தான் செய்கின்றன.
ஏன் இப்படி மிருதுவான பறவைகள் படைக்கப் பட வேண்டும், என்று இருந்தது அவனுக்கு. கடல் மிகக் குரூரமானது. அவற்றை அப்படியே கடல் எக்கிப் பிடித்து கபளீகரம் செய்து விடும். கடல் பிரியமானது தான். மகா அழகு கடல். அதெல்லாம் சரி. ஆனால் சில சமயங்களில்... எத்தனை விகார அகோர வடிவம் எடுத்து விடுகிறது.
அந்தச் சின்ன பறவைகள்... மீனைக் கவ்வுகிற பிரயத்தனத்தில் அந்தச் சிறு பறவைகள் கடலில் மாட்டிக் கொள்கையில், ஹ்ம், என அவற்றின் சின்ன முனகல்கள். மரண அறிவித்தல். கடலின் பிரம்மாண்டத்தில் அது சிற்றொலி தான். ஆனால் பறவைகள் பாவம் இறந்து படுகின்றன.
கடலை 'லா மார்' என்றே அவன் நினைவு கூர்ந்தான். கடல் அல்ல கடல் கன்னி அவள். ஸ்பானிய மொழி அது. சனங்கள் கடல் மீதான நேசத்தில் இப்படித்தான் கடலை விளிக்கிறார்கள். அப்படி கடலை நேசிக்கிறாட்கள் கூட சில சமயம் அதைப் பற்றி கேடு கெட்டவள் என அவதூறு பேசவும் தவறுவது இல்லை. ஆனால் கடல் அவர்களுக்கு எப்பவும் பெண் உரு தான்.
சில இளந்தாரிகள். திடீரென்று சுறா ஈரல்களுக்கு ஊரில் மவுசு வந்தபோது அவர்கள் மிதவைகளும் மோட்டார் படகுகளும் வாங்கி மீன் பிடிக்கக் கிளம்பினார்கள். அவர்கள் கடலை 'எல் மார்,' என அழைத்தார்கள். கடல் அவர்களுக்கு ஆண் சென்மமாகி விட்டது. அவர்களுக்கு கடல் ஒரு களம். அது சவால்களின் களம். அல்லது அது நம் எதிரியின் சந்திப்பு இடம்.
கிழவனுக்கு கடல் பெண் உரு எனவே இருந்தது. கடல் அவனுக்கு எதாவது தன் பொதிவில் இருந்து பிரித்து அளித்தபடியே இருந்தது. கடல் ரொம்ப உபகாரமானது. அப்படியே கடல் எதாவது காட்டுத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ, கேடு விளைவித்தாலோ, அது வேறு வழியில்லாமல் செய்வதாகவே கிழவன் நினைத்தான்.
சந்திரன், அதைத் தொந்தரவு செய்கிறான்... பெண்களையும் தானே?... என நினைத்துக் கொண்டான்.
துடுப்பு அசைத்தபடி நிதானமாய் அவன் போய்க் கொண்டிருந்தான். ரொம்ப அலட்டல் இல்லாமல் போனான். கைகள் இயங்கிக் கொண்டிருந்தன அவ்வளவே. கடலின் மேல்மட்டம் சமபாகமாய்க் கிடந்தது. சிற்சில இடங்களில் சிறு பொங்கல்களாய் மேடுகள் எழும்பி அடங்கின.
அலை அசையும் திசையிலேயே ஓட்டத்தின் போக்கோடு அவன் போனான். இரண்டு துடுப்புகளோடு அலைகளும் அவன் படகை மூணாவது கை எனத் தள்ளிக் கொடுத்தன.
வெளிச்சம் மெல்ல பரவ ஆரம்பித்திருந்த போதில் அவன் எட்ட நினைத்திருந்ததை விட அதிகதூரம் கடந்து வந்திருந்தான்.
கடலின் பெருங் கிணறுகளில் போன வாரம் நான் துழாவினேன். எந்தப் பயனும் இல்லாமல் ஆயிற்று. இன்னிக்கு போனிதோ மற்றும் அல்பகோர் வகை மீன் மந்தைகள் திரியும் பகுதிகளில் வேட்டையாடுவேன். அவைகளை இரையெடுக்க என்று வருகிற பெரிய மீன் எதுவும் என்னிடம் மாட்டக் கூடும்.
வெளிச்சம் தெளிவு அடையுமுன்னே அவன் தூண்டில்களை வெளியே இறக்கி நீரோட்டத்தில் துழாவ ஆரம்பித்திருந்தான். ஒரு தூண்டில் நாற்பது ஃபாதம் வரை கீழிறங்கி யிருந்தது. இரண்டாவது இன்னும் கீழே. எழுபத்தி ஐந்து. மூணாவது நாலாவது தூண்டில்கள், கடலின் நீலம் இன்னும் இருள்கிற அடியாழத்தில் நூறு மற்றும் நூற்று இருபத்துஐந்து பாதம் கீழே இருந்தது.
தூண்டில்களின் ஒவ்வொரு இரையும் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் உள்ளே இரும்புக் கொக்கிகள் குத்தி யிருந்தன. இறுக்கமாகக் கட்டி தைக்கபபட்ட இரைகள். அந்தக் கொக்கிகளின் கொண்டி மற்றும் முள் யாவும் புதிய சார்தைன்களால் பொதியப் பட்டிருந்தன. ஒவ்வொரு சார்தைனும் ரெண்டு கண்ணிலும் கம்பியால் குத்துண்டு ஊடுருவப் பட்டிருந்தன.
நீட்டிக் கொண்டிருக்கும் கொக்கியை மறைத்த வண்ணம் அவை ஒரு பாதி மாலை போல் இருந்தன. மீன் இரையெடுக்க என்று வந்தால் கொக்கியின் எல்லாப் பகுதியுமே அதற்கு நல்ல வாசனையாகவும், ருசியாகவும் தட்டும் என்று கச்சிதமாய் அமைந்திருந்தன ஏற்பாடுகள்.
பையன் கிழவனுக்கு ரெண்டு சிறிய டூனா வகை, அல்பகோர் வகை மீன்களைக் கொடுத்திருந்தான். அவைதான் ஆக ஆழத்தில் இப்போது மீன் வர தொங்கட்டான்களாய்க் காத்திருக்கின்றன. நீல வகையிலும் மஞ்சள் வகையிலுமான மீன்கள் போனமுறை வந்தபோது மீன் இரையாக வைத்திருந்தது இன்னும் கடிக்கப் படாமல் அப்படியே இருந்தது.
உள்பக்கமாக மறைந்திருந்தன அவை. ஒருமாதிரி அழுகிய வாடை அடிக்க ஆரம்பித்திருந்தன அவை. என்றாலும் வெளிப்பக்கமாக புதியதும் வாசனை மிக்கதுமான சார்தைன் கட்டி மறைக்கப் பட்டிருந்தன. அதுவே மீனை இழுத்துக் கொண்டுவந்து விடும் என்று இருந்தது.
படகின் பக்கவாட்டில் ஒவ்வொரு தூண்டிலும் ஒரு பென்சிலின் அளவு உருண்டு திரண்டு இருந்தது. மூங்கில் கழிகளில் கொக்கிகள் கட்டப்பட்டு தொங்கின. எதாவது மீன் உள் கொக்கிகளில் மாட்டிக் கொண்டால் அந்த மூங்கில் மெல்ல உள்ளே கடலுக்குள் அமுங்கும்.
ஒவ்வொரு தூண்டிலிலும் இருநூற்று நாற்பது ஃபாதம் வரை கயிறுக் கண்டுகளோடு இணைக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் தூண்டிலின் கயிறுகளையும் மத்த தூண்டிலுக்கு என்று அவசரம் என்றால் உடனே பயன்படுத்த வகை இருக்கிறது. ஆக மீன், அடியில் ஒரு முந்நூறு ஃபாதம் வரை இருந்தாலும் கயிற்றால் அதை எட்ட முடிந்தது.
படகின் பக்கவாட்டில் தூண்டில்களில் மூணு, மூங்கில் குச்சியில் மெல்ல உள்ளமுங்கியதைக் கிழவன் கண்டான். பரந்து கிடந்த தூண்டில் பிரிகள் நேராக, மேலே அல்லது தாழ, அதனதன் சரியான ஆழத்தில் வரும்படி படகை நகர்த்தினான். இப்போது பொழுது பிரகாசப் பட்டிருந்தது. எந்நேரமும் சூரியன் உதித்து விடும்!
கடல் மட்டத்தில் இருந்து வெளிறலாய் மேலே ஏறியது சூரியன். இப்போது தள்ளித் தள்ளி படகுகள் அவன் கண்ணுக்குத் தட்டுப்பட்டன. இங்கிருந்து பார்க்க கரைப் பக்கமாக சில படகுகள். சில தண்ணீரின் தளும்பலில் உள்ளமுங்கித் தெரிந்தன.
சூரிய்ன் மெல்ல பிரகாசப்பட்டது. நீரில் அந்த ஒளி சிதறி கண்களைக் கூச வைத்தது. சூரியன் மேலே உயர வெளிச்சம் வெளேரென்று வர ஆரம்பித்தது. அதன் ரச்மிகள் அப்படியே தண்ணீரில் விழுந்து திரும்ப கிழவனின் கண்ணை கூரிய கத்தி போல பதம் பார்த்தன. சூரிய கத்தி! அதைப் பார்க்காமல் படகை ஓட்டிப் போனான் கிழவன்.
குனிந்த வாக்கில் அவன் தூண்டில்களை கவனித்தான். மேலும் குனிந்து கடலின் ஆழத்தைப் பார்த்தான். தூண்டில்களை மத்தவர்களை விட விரைப்புடன் சாயாமல் கோணாமல் வைத்திருந்தான். அப்போது தான் எல்லா இரைகளும் அவன் சொன்ன அந்தந்த ஆழங்களில், தங்கள் மீன் வரும் என கச்சிதமாய்க் காத்திருக்கும், என்பது அவன் கணக்கு.
மத்தாட்கள் தூண்டிலை அதன் கடைசி ஆழம் வரை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுவார்கள். தூண்டில்கள் கடல் அலையடிப்பில் அப்படியே கிடக்காமல் மிதந்தாப் போல நீந்தும். எத்தனை ஆழத்தில் அவை கிடக்கின்றன என்பதே மீன்காரனுக்குத் தெரியாது. அது அறுபது ஃபாத ஆழத்தில் கிடக்கும். அவனுக்கு நினைப்போ நூறு ஃபாதத்தில் அது கிடக்கிறதாக இருக்கும். குளறுபடிகள்.
ஆனால் நான்... என நினைத்தான். என் தூண்டில்களைக் கச்சிதமாக வேலை வாங்குகிறேன். ஆனால்... அவனுக்கு வருத்தமாய்த்தான் இருந்தது. எனக்கு இப்பல்லாம் அதிர்ஷ்டமே இல்லாம ஆயிட்டது. ம். யாருக்குத் தெரியும்? ஒருவேளை இன்று... இன்று நிலைமை மாறலாம் அல்லவா? ஒவ்வொரு நாளும் புதிய நாள் தானே? எனக்கு அதிர்ஷ்டமும் துணை வந்தால் நல்லா தான் இருக்கும். ச். அதைவிட... என்ன நிலைமைன்னாலும் நான் இப்படியே இருப்பேன். அதான் நல்லது.
நான் எப்போதும் தயாராய் இருப்பேன். அதிர்ஷ்டம் வந்தடையும் நாள்... அதற்கு நான் தயாராய் இருப்பேன். அந்த நாளை நான் முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்வேன்.
ஒரு இரண்டு மணி நேரம் ஆகி யிருந்தது. சூரியன் இன்னும் உயரப் போயிருந்தான். கண் இப்போது முன்னைப் போல எரிச்சல் தரவில்லை.
கிழக்கு வசம் பார்த்தான் கிழவன். இப்போது அந்தவாடையில் மூணு படகுகள் மாத்திரமே கண்ணில் தட்டுப்பட்டன. அவையும் சின்னதாய் தூரமாய் கரைப் பக்கமாய்த் தெரிந்தன. அவற்றை விட்டு அவன் வெகுதூரம் கடல் உள்ளே இருந்தான்.
என் ஆயுசு பூராவுமே இந்தக் காலைக் கதிர்கள் என் கண்ணை இம்சைப் படுத்திட்டுதான் இருக்கு, என அவன் நினைத்தான். என்றாலும் அந்தக் கண்கள் அவை ஆரோக்கியமாகவே, பார்வைப் பிரச்னை தராமலேயே இருக்கின்றன. மாலை நேரமானால் சூரியனையே நான் நேர்ப்பார்வையாய், கண் இருளாமல் பார்ப்பேன். காலை வெயில்தான் கண்ணைச் சுருங்க வைக்கிறது. மாலையில் கண்ணுக்கு இருக்கிற அந்த தீட்சண்யம் காலையில் எனக்கு இல்லை.
அப்போது அவனுக்கு முன்பக்கமாக வானில் ஒரு முரட்டுப் பறவை கரிய தன் சிறகுகளை விரித்து கடலில் எதையோ தேடி வட்டமிடுவதைப் பார்த்தான். சட்டென அப்படியே தாழ இறங்கி சரிந்த வாக்கில் சிறகுகளை முதுகுப் பக்கம் பின் தள்ளியது அந்தப் போராளிப் பறவை. திரும்ப வட்டமிட ஆரம்பித்தது.
“அது எதையோ கண்டுக்கிட்டதுடா!” கிழவன் சத்தமாய்க் கத்தினான். “சும்மா எதையோ வெத்துப் பார்வை பார்க்கல்ல அது!”
மெல்ல நிதானமாய் பறவை வட்டமிட்ட அந்தப் பகுதிக்கு படகைச் செலுத்தினான். அவசரமோ பரபரப்போ காட்டவில்லை. தூண்டில்களை மாத்திரம் சாயாமல் நெளியாமல் நேராய் மேலே கீழே என சீராய் வைத்துக் கொண்டான்.
என்றாலும் அந்தப் பகுதியில் கடல் சிறிது கலங்கியது. அவன் தன் பழக்கப்படி அப்படித்தான் செய்வான். இப்போது அவன் வழக்கத்தை விட சிறிது வேகம் பெற்றான். மேலே பறவையின் வேவுப்படி அவன் அந்தப் பக்கம் வந்தபோதும் தன இயல்பான மோஸ்தரில் அவன் இயங்கினான்.
பறவை இப்போது விலுக்கென்று வானேறியது. இப்போது அதன் வட்டம் இன்னும் பெரிதாய் இருந்தது. அதன் சிறகு அசையவே இல்லை. பிறகு சட்டென அது தலைகீழாய் ஒரு பாய்ச்சல். பறக்கும் மீன்கள் குபீரென கடல் பரப்பில் இருந்து பதறிப் பாய்ந்து காற்றில் எகிறின.
“டால்ஃபின்தான்...” கிழவன் கத்தினான். “பெரிய டால்ஃபின் அது!”
துடுப்புகளைத் தளர விட்டான். படகின் கோஸ்பெட்டி அடியில் இருந்து கம்பித் தூண்டில் ஒன்றை எடுத்தான். அதன் கொக்கியில் சார்தைன் இரையை மாட்டிக் கொண்டான். தனியே பக்கவாட்டில் இதை வீசிக் கொண்டான். ஒரு முடிச்சு போல அதைப் பக்கவாட்டில் படகில் கட்டிக் கொண்டான். இன்னொரு தூண்டில் சுருளையும் இரை வைத்துத் தயாராக்கி பெட்டியின் நிழலில் சுருட்டி வைத்துக் கொண்டான்.
திரும்ப துடுப்பு போட ஆரம்பித்தான். திரும்ப அந்த போராளிப் பறவையில் பார்வையைப் பதித்தான்.
பறவை இப்போது தாழ்ந்து இறங்கி வேட்டையில் கூர்த்திருந்தது.
பறவை திரும்ப சரிந்து ஒரு டைவ் அடிக்க இறங்கியதைப் பார்த்தான். இறகைச் சரித்தபடி அவற்றை பரத்தி விரித்தது அது. பதறிப் பறக்கும் சிறு மீன்களை அது அப்படியே விரட்டிப் போகிறாப் போல இருந்தது.
கிழவன் பார்த்தபோது கடல் மட்டத்தில் சிறு வீக்கம் தட்டுப்பட்டது. பெரிய டால்ஃபின் பறக்கும் மீன்களுக்குப் பாய்ந்த போது துள்ளிச் சிதறிய அலைகளே அவை. டால்ஃபின்கள் நீரைக் கிழித்துக்கொண்டு சீறி மேலே வர, பறக்கும் மீன்கள் அதைவிட உயரம் எகிறின.
ஆனால் டால்ஃபின்கள் கூட்டமாய் அப்படியே காத்திருந்தன. மேலே எகிறிய மீன்கள் திரும்ப தண்ணீருக்குள் வரத்தானே வேண்டும்? டால்ஃபின்கள் வாயைப் பிளந்து காத்திருந்தன.
ஒரு டால்ஃபின் படையே வந்திருக்கிறது, என நினைத்தான் கிழவன். ஒரு வட்டம் போல அவை சுற்றி வளைத்திருந்தன. பறக்கும் மீன்களுக்கு விமோசனம் இல்லை தான். மேலே காற்றில் காத்திருக்கும் போராளி ராஜாளி. அதற்கும் மீன்கள் கிடைக்கப் போவது இல்லை. பறக்கும் மீன்கள் அதன் அலகுக்கு மிகப் பெரியவை. அது தண்ணீருக்கு வெளியே பாயும் வேகமும் அபாரமானது.
பறக்கும் மீன்கள் திரும்பத் திரும்ப நீர் மட்டத்தில் இருந்து துள்ளுகிறதை அவன் பார்த்தான். பறவை அதில் எதையாவது கொத்தி லபக் என்று பிடித்துவிட திரும்பத் திரும்ப முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.
டால்ஃபின் கூட்டம் விலகித் தூரப் போய்விட்டாப் போல இருந்தது இப்போது. அவற்றின் வேகம் அதிகம். சட்டென அவை தூர தூரத்துக்குப் போய்விடுகின்றன. ஹ்ம். ஒருவேளை அந்தக் கூட்டத்தில் விலகிய தனியான எதும் எனக்குச் சிக்கக் கூடும். ஒருவேளை அதை இரையெடுக்க என்று எனக்காக பெத்தம் பெரிய மீன் ஒன்றும் அந்தப் பக்கம் இருக்கலாம் அல்லவா?
எனக்கான மகா மச்சம்... அது எங்கோ இருக்கிறது. எங்கே?
கரைப் பக்கம் பார்க்க அங்கே மேகங்கள் மலைபோல் வெண்மைப்பாடாய் எழுந்து தெரிந்தன. கடற்கரை ஒரு நீள பச்சைக் கோடாய்க் கண்டது. வெளிறிய நீல மற்றும் சாம்பல் வண்ண மலைகளின் பின்னணி கரைப்பக்கத்தில் நிழலாய்த் தெரிந்தது. வெயிலின் ஏற்றத்தில் கடல் நீலம் இப்போது இன்னும் இருட்டு கொடுத்திருந்தது. உருண்டு திரண்ட இருட்டு. ஒருவித மினுக்கமான கருஞ்சிவப்புச் சாந்து என்று தோன்றியது கடல்.
நீரில் மிதந்தபடி ஒரு செடிக்கொத்து. குடல் சிவப்பில் அதன் தண்டுகளைப் பார்த்தான். சூரியனின் ஒளி படுத்தும் விநோத ஒளிச் சிதறல்கள். தனது தூண்டில்களைக் கோணாமல் சாயாமல் நேராக கடலுக்குள் கண்ணுக்கு அப்பாலான ஆழத்தில் செலுத்திக்கொண்டான்.
அந்தப் பக்கம் நிறைய கடல் தாவரங்கள், மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. தாவரங்கள் வளரும் பகுதிகளில் சிறு மீன்கள் இஷ்டமாய்த் திரியும். அவற்றைத் தேடி பெரிய மீன்கள் விசிட் அடிப்பதும் உண்டு.
சூரியன் கடல் தண்ணீரில் காட்டும் விசித்திர வண்ணக் குழைவுகள். இப்போது சூரியன் மேலும் உயரத்துக்குப் போய்விட்டான். தட்ப வெட்கம் நல்ல மாதிரியாய் இருக்கிறது. கரைப்பக்க மேகங்கள் கூட ஒரு நிதானத்தில் கூடுவதைக் கண்டான்.
ஆனால் அந்தப் பறவை... எங்கே போய்விட்டது? அவன் கண்ணில் தட்டுப்படவே இல்லை அது.
கடல் பரப்பும் நல்லமைதி காத்தது. மஞ்சள் பாகமான, சூரிய வாட்டத்துடனான சர்காசோ வகைப் பாசிகள் மிதந்து கொண்டிருந்தன. தண்ணீரில் முங்கியதில் அடர் வண்ணம் பெற்ற ஒரு போர்த்துக்கீசியப் போராளிப் பறவையின் சடலம் படகுக்குப் பக்கத்திலேயே மிதந்து வந்தது. குடலே அமில நெடியுடன் அங்கங்கே சிதைந்து வெளிறி கொளகொளத்துக் கிடந்தது. படகை லேசாய் ஒடித்து வலப்பக்கமாகத் திருப்பினான். படகு சிறு துள்ளல் ஆட்டங்களுடன் ஒரு நீர்க்குமிழியின் உற்சாகத்துடன் போய்க் கொண்டிருந்தது.
பழுப்பு நிறத்தில் படகின் பின்பக்கமாக ரெண்டு மூணடி பின்னால் பறவையின் சிதைந்த உடல் நார் நாராய் இழை இழையாய் மிதந்து வந்தது.
“ஏ அகுவா மாலா...” என்று பின் பக்கம் பார்த்துவிட்டுக் கத்தினான் கிழவன். “அடியே தேவிடியாச் சிறுக்கி!”
துடுப்புகளோடு அப்படியே குனிந்த வாக்கில் அவன் நோட்டம் விட்டான். நீரில்  மிதக்கும் இழைகளூடே சின்ன மீன் ஒன்று. அடையாளங் காட்டாமல் கூடவே வந்தது. அவ்வப்போது அது சிறிது புரள்கையில் அந்தப் பறவைச் சடலத்தில் இருந்து நொதித்து நுரை கிளம்பிப் பரவியது. அந்த நொதி விஷத்தன்மை கொண்டது. இழைகளூடே உலவும் மீன்களை அவை பாதிப்பதில்லை. என்றாலும் மனிதனுக்கு அது ஒத்துக் கொள்ளாது. அந்த நொதி இழைகளின் மேல் மெல்லிய நீர்க்காவிப் படலமாகப் படிந்திருக்கும்.
எதாவது மீன் கிடைக்கையில் அந்த இழைகளை அவன் தொட நேர்ந்தால் அந்த நொதியமிலம் சுரீர் என்று அவன் கையில் விரல்களில் இறங்கும். அரிக்கும் அது. கையில் பொரி பொரியாய்ப் புண்ணாகி விடும். ஐவி அல்லது ஓக் விஷம் பட்டால் வலி தருகிறதைப் போன்ற தீவிர உபாதை அது. அந்த விஷம் போல இது மெல்ல உள்ளே ஏறாது, அகுவா மாலா விஷம் ஒரு சாட்டையைச் சொடுக்கினாப் போல மூளைக்குள் அறையும்.
கொடுக்கு சொடுக்கு!
முத்துமணிகளாட்டம் இந்த நுரைக் குமிழிகள் பார்க்க அழகாய்த்தான் இருக்குது, என நினைத்துக் கொண்டான். என்றாலும் அந்தப் பளபளப்பு போலியானது. உள்ளே ஒண்ணுமே அற்ற வெற்று ஜாலம் அது. அவற்றை, அந்த விஷச் சுரப்புகளை உண்ண என்று மகா கடல்ஆமைகள் வருகின்றன. அவனுக்கு சந்தோஷமான விஷயம் அது.
ஆமைகள் அந்த நுரை நொதிகளைப் பார்த்துவிட்டு அவனுக்கு முன் பக்கம் போல நீந்தி வந்தன. உண்ணும் போது அவைகள் கண்ணை மூடிக் கொண்டன. வெறும் ஓடுகள் போலத் தெரிந்தன அவை இப்போது. அந்த இழைகளையும் நொதிநுரைகளையும் எல்லாத்தையும் அப்படியே உறிஞ்சிக்கொண்டன அவை. ஆமைகள் அப்படியொரு சாவதானத்துடன் நிதானத்துடன் இரையெடுப்பதைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கும்.
புயல் அடித்து ஓய்ந்த கடற்கரைகளில் ஆமைகள் ஒதுங்கி அடங்கிக் கிடக்கும். அவைகளைப் பார்த்ததும் அவனுக்கு உற்சாகமாகி விடும். வேணுமென்றே ஷூ அணிந்த காலுடன் அவற்றை மேலேறி மிதிப்பான். பாப் என்கிற விநோத சப்தத்துடன் அவை துள்ளியடங்கும்.
பச்சை நிற ஆமைகள் அற்புதமானவை. அதேபோல கழுகு மண்டை ஆமைகள். அவற்றின் அழகு. பாயும் வேகம். சந்தையில் அவற்றுக்கு நல்ல கிராக்கி எப்போதும். அவற்றின் அறிவற்ற மஞ்சள் மேலோடுபோட்ட பெரிய தலைகள். அதுகள் காதல் செய்கிற லெட்சணத்தை நினைத்து சிரிப்பு வரும் அவனுக்கு. வந்து தேமே என்று கண்ணை மூடியவாக்கில், செத்த அந்த போர்த்துக்கீசியப் பறவையின் சடலத்தைத் தின்கின்றன அவை.
ஆமைகளையிட்டு ஊரில் எத்தனையோ நம்பிக்கைகள். ஐதிகங்கள். அதெல்லாம் அவன் நம்பவில்லை. பல வருடங்கள் அவன் ஆமைவேட்டை என்று போய் வந்திருக்கிறான். பாவம். ஆமைகள் சாதுப் பிராணிகள். அவைகளையிட்டு அவனுக்குப் பரிவும் பச்சாதாபமும் உண்டு. பெரும் பெரும் ஆமைகள், ஒரு படகாட்டம் பெரியவை, மகா ஓடுடன் எடை ஒரு டன் என்று கூட சிலது இருக்கும். எல்லாமே பாவப்பட்ட சென்மங்கள் தான்.
ஆமைகளிடம் இரக்கப் படுவோர் யாரும் இல்லை. ஆனால் ஆமைகளின் இதயம், ஆமை இறந்த பின்னும் பல மணி நேரம் துடிப்பதை நிறுத்தாது. ஆமை உடம்பையே வெட்டி கூறு போட்ட பின்னாலும் இதயம் மாத்திரம் தனியே துடித்துக் கொண்டிருக்கும்.
ஹா. நானும்! எனக்கும் அப்படியொரு இதயம், எதையும் தாங்கும் இதயம் இருக்கிறது, என்று நினைத்துக்கொண்டான் கிழவன். என் கைகள், பாதங்கள்... எல்லாமே ஆமையுடையதைப் போலத்தான்...
தினமும் அவன் ஆகாரம் வெள்ளை முட்டைகள். அவை அவனுக்கு சக்தி அளிக்கின்றன. மே மாதம் ஆகிவிட்டால் மாத முழுதும் தவறாமல் அவன் முட்டை எடுத்துக்கொள்கிறான். அப்பதான் நிஜமான மகா மீன் எதுவும் செப்டம்பர் அல்லது அக்டோபர் வாக்கில் சிக்கினால் அவனால் சமாளிக்கிற அளவு உடலில் சக்தி ஊறி உடம்பு முறுக்கேறும்.
தினமும் ஷார்க் லிவர் ஆயில் என்கிற மீன் எண்ணெய் ஒரு கோப்பை அருந்தவும் அவன் தவறுவது இல்லை. துடுப்புகளைப் போட்டுவைக்கும் கீழ்த்தள கோச்சுப் பெட்டியில் அவன் மீன் எண்ணெய் பெரிய டின் வாங்கி வைத்திருந்தான். மீன் எண்ணெய் அத்தனை உசத்தி. எல்லா மீனவரும் மீன் எண்ணெய் அருந்த வேண்டும். ஆளால் நிறைய மீனவர்கள் அதன் ருசியைக் குமட்டலாய் உணர்ந்தார்கள்.
ஏல மீன் பிடிக்கன்னு அந்த அரதக் காலையில் தூக்கத்தை முறிச்சிக்கிட்டு எழுந்துக்கல்லியா நீ? அதைவிடவா இது கஷ்டமான காரியம்? மீன் எண்ணெய் குடிக்கிறது? அந்த நேரத்தின் குளிருக்கு எத்தனை இதம் இது? குளிரும் சளியும் அண்டவே அண்டாது உன்னை. நல்ல எதிர்ப்பு சக்தி கொடுக்குமே அது. அத்தோட காங்கைக்குக் கைகண்ட மருந்தாச்சே அது.

கிழவன் தலை தூக்கிப் பார்த்தான். திரும்ப அந்தப் பறவை மேலே வட்டம் போட ஆரம்பித்திருந்தது.
தொ ட ர் கி ற து
--
storysankar@gmail.com
91 97899 87842

No comments:

Post a Comment