Friday, July 29, 2016

பெரியவர் மற்றும் கடல்

எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

பகுதி ஐந்து

••
நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை
மதிக்கிறேன் மீனே... ஆனால்...
••

னால் இப்ப இந்த நிமிஷம், உதவிக்கு பையன் இல்லை. கூட உதவிக்குன்னு உனக்கு, ஆள் அம்பு படை பரிவாரம், எதுவும் இல்லை. எல்லாம் நீயே. பேசாமல் நீயே... என்ன செய்யலாம்? அந்தக் கடைசித் தூண்டிலையும் இப்பவே இந்த இருட்டிலேயே அறுத்து எறிந்து விடலாம். அந்த ஒரு காரியத்தை முடிவு பண்ணியாச்சின்னால் அதைத் தள்ளிப் போடறது எதுக்கு? இருட்டிக் கிடக்கோ, வெளிச்சத்திலோ, அதைக் காலாகாலத்தில் செய்துறலாம் இல்லே? சடார்னு எடு கத்தியை. அந்த ரெண்டு தூண்டிலையும் தரித்துப் போடு. அந்த ரெண்டு கண்டுகளையும் இத்தோடு இப்பவே சேத்துக்கோ. தயாராய் இரு.
சரி என்று அந்தச் சோலியில் இறங்கினான் கிழவன். மகா இருட்டாய்க் கிடந்தது. வேலை செய்ய சுலபமாக இல்லை.
அவன் வேலை செய்து கொண்டிருக்கையில் திடுதிப்பென்று ஒருதடவை உள்ளேயிருந்து அந்த மீன் சிறிது அசங்கியது. அவன் எதிர்பார்க்காத சமயம் அவனை அப்படியே ஒரு சுண்டு சுண்டி தரையில் விழுத்தாட்டியது. குப்புறத் தட்டி விழுந்தான் அவன். கண்களின் கீழே சட்டென ஒரு கீறல் விழுந்து ரத்தங் கொட்டி கன்னம் வரை வழிந்தது. என்றாலும் அது நாடி வரை வழியுமுன் உலர்ந்தும் விட்டது. அதை சட்டை செய்யாமல் அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
மீனின் பிடி உள்ள கயிறை இன்னும் வசம் பார்த்து தோளில் பொருத்திக் கொண்டு வேலை செய்தான். தோளில் மீனின் கனம் தெரிந்தது. கையின் அழுத்தத்தில் படகின் நகர்ச்சியும் உணர முடிந்தது.
திடீர்னு அப்படி ஒரு குலுக்கு குலுக்கிட்டதே... எதுனால அப்பிடி நடந்துக்கிட்டதோ அது, தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கம்பிக்கயிறு சிறிது நழுவி அதன் முதுகுச் சிகரத்தில் உரசிச் சரிந்திருக்கலாம். அதுக்கு வலித்திருக்கலாம். இன்னாலும், என் தோள் வலி அதை விடவா உனக்கு வலிக்கப் போகிறது, என நினைத்துக் கொண்டான்.
தோள்ப்பட்டை கழண்டு விடுவது போல் வலி துவட்டி எடுத்தது.
ம். எது எப்பிடின்னாலும், இந்த மீன், இது இபபிடியே இந்தப் படகை இழுத்துக்கிடடே போய்க்கிட்டே இருக்க முடியுமா? முடியாது. அது பெரிய மீனா இருக்கலாம். ஆனாலும் எல்லாத்துக்கும் முடிவுன்னு ஒண்ணு வந்தாகணும்.
ம். நான் அதற்குத் தயார். என் சார்பில் நான் இந்த ஹோதாவுக்குத் தயார் ஆகிவிட்டேன். எனக்குப் பிரச்னை தரும் என்கிற மாதிரி விஷயங்களை நான் சரி செய்துகொண்டு விட்டேன். கையிருப்பில் நிறைய கம்பிக் கயிறுகள் இருக்கிறது. சேர்த்து விட்டேன். சேமித்து விட்டேன். என்னால் ஆன அத்தனை ஏற்பாடுகளையும் நான் செய்து கொண்டாகி விட்டது!
"மீனே!" சத்தமாய்ப் பேசினான். "நான் உன்னோடவே கூட வருவேன். இருப்பேன் உன் கூட. என் மரணம் வரை கூட இருப்பேனாக்கும்!"
அதுவும் என்னுடன் இருக்கும், என நினைக்கிறேன். அப்படி இருவருமாக இருக்க நேர்ந்தால், வெளிச்சம் இருந்தால் நல்லது. நான் வெளிச்சம் வர காத்திருப்பேன்.
விடியலின் ரேகைகள் நுழைய நேரம் இருந்தது. குளிராய்க் கிடந்தது வெளி. படகுச் சுவரில் முதுகைக் கிடத்திக் கொண்டான். மரம் ஓரளவு கதகதப்பு தரும்.
இந்த நாடகத்தை... நானும் தொடர்வேன். அது தொடர்ந்தால் நானும் அதைத் தொடர்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை...
தூண்டில் கயிறு. ஒரே தூண்டில்தான் இப்போது. அது தொங்கி மேலே போய் அப்படியே உள்ளே தண்ணீருக்குள் இறங்குவது, சாம்பல் வெளிச்சத்தில் அடையாளப் பட்டது. படகு நிதானமான பயணத்தில் இருந்தது.
சூரியனின் முதல் கிரணம் மெல்ல எழுந்தது. அவன் வலது தோள்ப் பக்கம் இருந்து. அவன் மேற்கே பார்த்தபடி பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.
"இப்போது அந்த மீன் வடபுலமாக புலம் பெயர்கிறது" என்றான் கிழவன். நீரோட்டம் எங்களை தூரமாய் கிழக்குமுகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது, என எண்ணிக் கொண்டான்.
ம். பார்க்கலாம். அது நீரோட்டத்தோடு பயணப் பட வேண்டும். அப்படி அது நீரோட்டத்தோடு ஒத்திசைவுக்கு மாறினால், அதற்கு உடல் அலுத்து வருகிறது, என்று தெரியும் எனக்கு.
சூரியன் இன்னும் மேலே நகர்ந்திருந்தது. அவனுக்கு இப்போது புரிந்தது. மீன் அயர்ச்சி காட்டவே இல்லை!
அவனுக்கு சாதகமான ஒரே அம்சம், அந்தத் தூண்டில் கம்பியிழைகளின் சாய்வில் தெரிந்தது... இப்போது மீன் கொஞ்சம் போல மேல் மட்டத்துக்கு வந்திருக்கிறது!
அப்படின்னால்? உடனே ஒரு துள்ளல். துள்ளப் போகிறது, என்று இல்லை.
ஆனாலும் அதுவும் சாத்தியமே!
"ஆண்டவரே, அதைத் துள்ளப் பண்ணும்" என்றான் கிழவன். "இப்போது அதைச் சமாளிக்க என்னிடம் போதுமான கம்பிக்கயிறுகள் இருக்கிறது."
ஒருவேளை, இந்தக் கயிறை இன்னும் நான் இறுக்கினால், அது மீனை இம்சைப்படுத்தி அதைத் துள்ளச் செய்யும்...
இப்ப நல்லா வெளிச்சம் வந்தாச்சி. வெளியே வரட்டும். துள்ளட்டும். முதுகு எலும்புப் பக்க செதிள்களில் முழுக்க காத்தை அது நிரப்பிக்கட்டும். அப்புறம் அதனால் ரொம்ப ஆழம் உள்ளே முங்க முடியாது. சாகணும்னால் கூட மேல்பகுதியில் தான் அது நிகழ வேண்டும் அதற்கு..
கயிறை தன் பக்கமாக வலித்துக்கொள்ள முயற்சி செய்தான். இழுத்த இழுப்பில் அந்தக் கயிறே அறுந்துவிடும் அளவுக்கு விரைத்திருந்தது. கீழே கொக்கியில் மீன் இருக்கிறது. அது மேலே அவனைத் தூக்க, இழுக்க விடவில்லை. இதற்குமேல் இழுத்தால் கயிறு முடி அறுந்துவிடும்.
இனிமேல் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் கயிறை, என நினைத்தான். இனி அதை இன்னொரு முறை அசக்கிவிடக் கூடாது.
இந்தக் கயிறின் இறுக்கத்தில் இனி நான சிறிது அசக்கினாலும் அதன் வாயில் கொக்கி இன்.னுமாய் அதன் உள்வாயைக் கீறும், என்று தோன்றியது. அது ஒருவேளை வாயில் இருந்து வெளியே வந்துவிடவும் கூடும். அது மேலே எழும்பித் துள்ளும்போது கொக்கியை அது வெளியே துப்பி விடுகிறாப் போலவும் ஆகிவிடலாம் அல்லவா?
எத்தனை விதமான சிக்கலை யெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது... இருக்கட்டும். சமாளிக்கலாம்.
இப்போது சூரியன் எழுந்துவிட்ட நிலையில் எனக்கு புதிய தெம்பு ஊறியிருக்கிறது. இப்போது அது கண்ணைக் கூசச் செய்கிற நிலை தாண்டி மேலேறி விட்டது. ஆக அந்தத் தொந்தரவும் இல்லை.
ஒரு மஞ்சள் கொடி தூண்டிலோடு சேர்ந்து இழுபட்டு கூடவே வந்தது. அது ஒண்ணும் ரொம்ப எடை இல்லை. அதனால் பரவாயில்லை, என்று இருந்தது. இருக்கட்டும். ராத்திரியில் கல்ஃப் வளைகுடாவில் மிதக்கிற அந்த மஞ்சள் கொடிகள் பளபளவென்று ஒளிரும். இருட்டுக்கு ஊடே அது நல்ல விஷயம் தான்.
"மீனே!" என்று கூப்பிட்டான் அவன். "நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை மதிக்கிறேன் மீனே... ஆனால்... ம்... இன்றைக்கு பொழுது அடையுமுன்னால்... நான் உன்னைக் கொல்வேன்!"
அது முடியும்னு நம்பலாம், என நினைத்துக் கொண்டான் தனக்குள்.
*
வலது வாட்டத்தில் இருந்து படகை நோக்கி சின்னப் பறவை ஒன்று வந்தது. இசைக் குரல் கொண்ட பறவை அது. படகுப் பக்கமாக நீரின் மட்டத்துக்கு அருகிலேயே தாழப் பறந்தது.
பறவையைப் பார்த்தான். அதுவே ரொம்ப களைத்திருந்தது.
பறவை மெல்ல வந்து படகின் விளிம்பில் அமர்ந்து கொண்டது. சிறு ஓய்வு. பிறகு திரும்ப அவன் தலையைச் சுற்றி வடடமிட்டது. அப்படியே போய்த் தூண்டில் கழியில், அந்த இடம் வசதியாய்ப் பட்டதோ என்னவோ, அங்கே பறந்து போய் அமர்ந்து கொண்டது.
"எத்தினி வயசாவுது உனக்கு பறவையே?" என்று கேட்டான் கிழவன். "இப்பதான் முத முதலா கடல்பக்கம் இவ்வளவு தூரம் பறக்கறியா?"
அவன் பேசும் குரல் ஒலியில் அவனையே பார்த்தது பறவை. அந்தத் தூண்டில், அதைக் கொத்தி அலகால் நோண்டிப் பார்க்கக் கூட அதனிடம் தெம்பு இல்லை. மகா அலுப்பாய் இருந்தது அது. அந்த மூங்கில் குச்சியின் மேல் அது தத்தித் தத்திப் போய் வந்தது. மென்மையான பாதங்களால் அந்தக் கயிறைப் பற்றிக் கொண்டது பறவை.
"தூண்டில் அசங்காமல் கொள்ளாமல் அப்பிடியே தான் இருக்கு" என்றான் கிழவன் பறவையைப் பார்த்து. "அதெல்லாம் கெட்டியாத் தான் இருக்கு. பிடிச்சிக்க. என்ன நீ? நேத்தி கூட காத்து எதுவுங் கிடையாது. ராத்திரி நல்லா ஓய்வடுத்திருக்கலாம் இல்ல? இப்பிடி காலையிலேயே இத்தனை களைப்பா இருக்கே நீ? இந்தப் பறவைகள், அதுகளுக்கே தெம்பு அவ்வளவு தான் போல..." என்றான் அவன்.
இப்படி நீ பாட்டுக்கு இத்தனை தூரம் கடலுக்கு உள்ளே வந்திட்டே? கழுகுகள் உன்னைப் பார்த்தால் உடனே துரத்தி வந்துரும், என நினைத்துக் கொண்டான். ஆனால் அதனிடம் சொல்லவில்லை. எப்படியும் நான் பேசுவது அதற்கு புரியப் போவது ஒண்ணும் இல்லை.
நான் என்ன சொல்றது. கூடிய சீக்கிரம் கழுகுன்னா என்ன, வானத்தில் அதற்கான ஆபத்துகள் என்னென்ன, அதுவே கத்துக்கும்.
"இங்கியே நல்லா ஓய்வு எடுத்துக் கொள் சின்னப் பறவையே" என்றான் அவன். "அப்பறமாட்டு உன் வேட்டையை ஆரம்பி. ஒரு பறவையைப் போல. ஒரு மனிதனைப் போல. அல்லது ஒரு மீனைப் போல...."
நேற்றைய இரவின் குளிருக்கு அவனுக்கு முதுகு பிடித்துக் கொண்டிருந்தது. பறவையோடு பேசுவது சிறிது இதமாய் இருந்தது.
"இங்கியே, இதான் என் வீடு, இங்கியே கூட இருந்துக்கலாம் நீ பறவையே" என்றான். "என்ன ஒண்ணுன்னால், இப்ப என்னால பாய்மரத்தை ஏத்த முடியாது. பாய்மரம் இருந்தால் நீ அதில் ஒண்டிக்கலாம். அந்த உயரத்தில் நல்ல காத்து கிடைக்கும் உனக்கு. இப்ப எனக்கு வேறொரு சோலி கெடக்கு. என் கூட வேறொரு சிநேகிதக்காரன்..."
அதேநேரம் மீன் திரும்பவும் ஒரு குலுக்கு குலுக்கியது தூண்டில் கயிறை. கிழவன் நிலைதடுமாறி அப்படியே தூண்டில் மூங்கில் பக்கமாகக் குப்புறத் தள்ளாட்டப் பட்டான். படகின் சுவரோடு உரசினாப் போல அவன் சரிந்து விழுந்ததில் தப்பித்தான். தூண்டிலிலும் கொஞ்சம் கயிறு தழைய விட்டிருந்ததால் பிழைத்தான்... நேரே அவனைக் கடலுக்குள் தூக்கி வீசத் தெரிந்தது மீன்.
தூண்டிலில் அந்தச் சுண்டு சுண்டப்படு முன்பே பாடும் பறவை எழும்பிப் பறந்திருந்தது. அது எப்ப கிளம்பிப் போனது என்பதையே அவன் கவனிக்கவில்லை. இப்போது இன்னும் கவனமாய் அந்தக் கயிறை வலது கையால் அழுத்திப் பிடித்து வசம் பார்த்துக் கொண்டான். அப்போது தான் அவனது கையில் ரத்தத்தையே உணர்ந்தான்.
"கீழே, அதுக்கு என்னவோ காயம் கீயம் மாதிரி வலி வந்திருக்கும்" என்று சத்தமாய்க் கத்தினான் கிழவன். பேசிக் கொண்டே கயிறைப் பின் பக்கமாக இழுத்தான். மீனின் போக்கைக் கொஞ்சம் திருப்பி விடலாம், என நினைத்தான்.
கயிறு இழையிழையாய் நைந்து அறுந்துபோகிற இடத்தில் இழுக்கையில் இன்னும் எச்சரிக்கைப் பட்டு நிதானமாய் இழுக்க வேண்டி வந்தது. அப்படியே அந்த விரைப்பை வைத்துக் கொண்டான் இப்போது.
"இப்ப இந்தக் கயிறை... மேலே உன்னை இழுக்கிறதை, உணர முடியுதா மீனே?" என்றான் அவன். "வலிக்குது இல்லே? யேசுவே, எனக்கும் தான்."
அப்படியே வானத்தில் அந்தப் பாடும் பறவைக்குத் தேடினான். தனியே இந்நேரம் இப்படி இருப்பதே அவனுக்கு ஏக்கமாய் இருந்தது. பறவை, கூட இருந்திருக்கலாம், என்று இருந்தது.
பறவையே, நீ இங்க அதிகம் தங்கவில்லை. கிளம்பிப் போய் விட்டாய். போகிற வழி, கரையை எட்டுகிற வரை உன் பாடு அத்தனை சுலபம் கிடையாது. அது, உனக்குத் தெரிகிறதோ இல்லையோ, எனக்குத் தெரியும்.
ச். ஒரு க்ஷணம். அசந்தேன். அந்த மீன் என்னை வாரி விட்டுட்டது. உடம்பில் கீறி விட்டுட்டது. நான், என்ன இப்பிடி கிறுக்கன் மாதிரி நடந்துக்க ஆரம்பிச்...சிருக்கன்.
ஆமாம். அந்தப் பறவை, அது பத்தி ஒரு யோசனை. கவலை... தேவையா அது?
திரும்ப இனிமே நம்ம சோலியப் பாக்கணும்.
அத்தோட... அந்த டூனா. அதை இன்னும் நான் சாப்பிடவே இல்லை. உடம்பில் தெம்பு வத்திறப்டாது. அதுக்குமுன்னால அதைத் தின்னு தெம்பைத் தேத்திக்கணும்...
"சே பையன் இந்த சமயம் பார்த்து கூட இல்லாமல் ஆச்சே! இப்ப இந்த மீன், இதுகூட சேர்த்துக்க துளி உப்பு கூட இல்லை." சத்தமாய் கையறு நிலையில் கத்தினான்.
தோள் கனத்தது. தூண்டிலை வலது தோளில் இருந்து இடது தோளுக்கு மாற்றிக் கொண்டான். முன் நோக்கி குனிந்து மண்டியிட்டு கடல் தண்ணீரிலேயே கையைக் கழுவிக் கொண்டான்.
அப்படியே கடலில் முங்கியவசத்தில் கையை ஒரு நிமிஷம் போல அப்படியே வைத்திருந்தான். விரலில் பட்ட காயத்தில் இருந்து வழிந்த ரத்தம் ஒழுகி அடங்கியது.
நீரில் சிவப்பு கலந்து மெல்ல அந்த வண்ணமும் மறைந்து தெளிவான தண்ணீர். படகு ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீரும் தெளிவாக மாறி விட்டது. இரத்தக் கசிவு இப்போது இல்லை.
"மீனின் வேகம் கணிசமான அளவு குறைஞ்சிட்டது!" என்றான் அவன்.
இதமாய் இருந்தது காயத்துக்கு. அப்படியே இன்னுங் கொஞ்சம் வைத்திருக்கலாம் போல இருந்தது. ஆனாலும் இன்னொரு முறை மீன் குலுக்கினால்?... மீண்டும் விபரீதங்களுக்கு அவன் தயாராய் இல்லை.
திரும்ப எழுந்துகொண்டான். படகில் சிறிது சாய்ந்தாப் போல நின்றான். காயம் பட்ட விரலை சூரியனுக்குக் காட்டி உலர வைத்தான்.
கம்பிக் கயிறு, அதன் பிசிறு கீறிய வீரல் தான் விரலில். சதையைக் கிழித்து விட்டது கொஞ்சம். ஆள்காட்டி விரலில் காயம். வேலை செய்கையில் சிரமப் படுத்தும். அந்த விரலைத் தவிர்த்துவிட்டு மத்த விரலால் வேலை செய்ய முடியாது.
அவனது விரல்களுக்கு இன்னும் தேவை இருக்கிறது. வேலை இருக்கிறது. காத்திருக்கிறது. பெரிய காரியம் அது. அது இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் காயம்... நல்ல விஷயம் அல்ல. அவனுக்கு கட்டுப்படி ஆகாது இது.
"ம். சரி. இப்ப..." என்றான் அவன். கை உலர்ந்து விட்டது. "இது... நான் அந்தச் சின்ன டூனாவைச் சாப்பிடும் நேரம்" என்றான். "இங்கேயே இப்படியே வசதியாச் சாப்பிடலாம். டூனாவை துடுப்பால் எட்டி பக்கமாய் இழுத்துக் கொண்டால் ஆச்சு."
அப்படியே முன் மடிந்தான். துடுப்புத் தண்டின் அடியில் டூனா, தன் பக்கம் இழுத்தான் அதை. இடையே கயிறு சுருட்டிக் கிடக்கிறது. அதை அனுசரித்து மெல்ல தன் பக்கம் நகர்த்தி வர வேண்டியிருந்தது.
திரும்ப இடது தோளில் அந்தத் தூண்டிலைப் போட்டுக் கொண்டான். இடது கையாலும் விரல்களாலும் தரையைத் தடவி அந்த மீனை இழுத்துக் கொண்டான். துடுப்பின் கொக்கியில் இருந்து அதை விடுவிக்க வேண்டி யிருந்தது. திருமப துடுப்பை அதன் இடத்தில் வைத்தான்.
முட்டியில் மீனை வைத்துக் கொண்டான். மீனைத் திருப்பி தலை முதல் வால் வரை, நீள வாக்கில் சிவப்பு கொப்பளிக்கிற அளவில் அதன் சதையை வகிர்ந்தான். பிறகு முதுகுத் தண்டில் இருந்து வயிற்றுப் பக்கம் வரை முக்கோண முக்கோணத் துண்டங்களாக விண்டான். ஆறு கறித் துண்டங்களை இப்படி அறுத்து படகின் வில்லில் சூரியன் பட வைத்தான். கால்சராயில் அந்தக் கத்தியை அப்படியே துடைத்துக் கொண்டான்.
அவனிடம் கையில் இப்போது அறுபட்ட மீனின் எலும்புக் கூடு. வாலைப் பிடித்து அதை கடலுக்குள்ளே வீசி யெறிந்தான்.
"ம்ஹும். என்னால இதை முழுசாத் தின்னு தீர்க்க முடியும்னு தோணல்ல.." பேசியபடியே ஒரு துண்டைக் கத்தியால் நிமிண்டினான்.
என்றாலும் கவனமாய் இருந்தான். அவன் முட்டுக் கொடுத்திருந்த தோள்ச் சுமை... அதை மனசு தன்னைப் போல உன்னித்துக் கொண்டிருந்தது. அவனது இடது கையில் இப்போது உணர்ச்சியே இல்லை. கம்பியில் அதை அழுத்தி இறுக்கினால் அதில் ஜீவனே இல்லை. ரொம்ப ஆயாசமாய் உணர்ந்தான் இப்போது.
"என்னடா இழவு கையி..." என்றான். "மரத்துப் போயிச் சாவு. சதையே நகமா மாறிப் போகணுமோ. போயித் தொலை. அப்பிடி ஆயி என்ன சாதிக்கப் போறியோ, போ..."
ஆ. தேவை யில்லாமல் நான் கலக்கம் கொள்கிறேன். வேண்டாம். எழுந்து வா, என தனக்குள் நினைத்துக் கொண்டான். தூரத்தில் தூண்டில் தண்ணீரில் இறங்கும் அந்த இருள் பக்கம் பார்த்தான்.
ஏ முதலில் சாப்பிடு. அது கையை மீட்டுத் தரும்... கை மரத்திட்டது. அதுக்கு அது காரணம் அல்ல. நீதான் காரணம். கொள்ளை நேரமா நீ இந்த மீனுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். உடம்பு அசதி காட்டத் தான் செய்யும்.
ஆனால் கால காலத்துக்கும் நான் இதைச் சமாளிப்பேன். என்னால் முடியும்! சரி. நீ முதலில் இந்த சதை விருந்தைச் சாப்பிடு.
ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். மெல்ல அதைச் சுவைத்தான். ருசி... மோசமில்லை.
நல்லா சுவைச்சிச் சாப்பிடு, என நினைத்தான். அப்படியே சாறா உள்ளே இறங்கட்டும், உனக்குள்ளே. வெறுன்ன இதைச் சாப்பிடறதை விட, ஒரு புளிப்போடவோ, எலுமிச்சம் சாறோடோ, துளி உப்போ சேர்த்தபடி இன்னும் ருசி தட்டும்.
"திருவாளர் கை? இப்ப எப்பிடி சௌக்கியம்?" மரத்திருந்த கையைப் பார்த்துக் கேட்டான் அவன். கை இப்ப கட்டையாட்டம் இறுகிக் கெட்டியாக விரைத்துப் போயிருந்தது. "இதோ இது உனக்கு, உனக்காக."
முதல் துண்டத்தை ரெண்டாக்கி ஒண்ணைச் சாப்பிட்டு முடித்திருந்தான். இப்போது அடுத்த துணுக்கை வாயில் போட்டுக் கொண்டான். கவனமாய் அதைச் சுவைத்துவிட்டு, வாய்க்குள்ளேயே தோலை ஒதுக்கிக் கொண்டு, சாப்பிட்டபின் த்தூ என்று வெளியே துப்பினான்.
"ம். இப்ப சரியா வருதா உனக்கு?" என்றான். "ஒருவேளை நான் ரொமப அவசரப் படறேனா?"
அடுத்த துண்டத்தை வெட்டாமல் முழுசாய் அப்படியே வாயில் அதக்கிச் சுவைத்தான்.
நல்ல கொழுத்த மீன். முழுசா ரத்தம் உப்பிக் கிடக்குது, என்று யோசித்தான். நல்லவேளை. என் அதிர்ஷ்டம் தான் இது. அல்பகோர். டால்ஃபின் சிக்காமல், இந்த டூனா சிக்கியது. ஐயய்ய. டால்ஃபின் ஒரேடியா இனிச்சிக் கிடக்கும். இதில் இனிப்பு தட்டவே இல்லை. நல்ல கொழுப்பு. முழுச் சத்தாக் கிடைக்குது எனக்கு...
என்னத்தையாவது செஞ்சி எப்பிடியாவது பொழுதைத் தள்ளறது சரிப்படாது. நிஜ உலகத்துக்கு, காரியத்துக்கு வரணும். இப்ப இத்தோட சேத்துக்க உப்பு இல்லை. அது உண்மைதான். வாய் உப்பை எதிர்பார்க்குது, என்பதே உண்மை.
எனக்குத் தெரியாது. மிச்சம் இருக்கிற இந்த மீன் துண்டங்கள். சூரியன் பட்டு இவை அழுகிப் போகுமோ, கருவாடாப் போகுமோ?... அதுனால, இருக்கிற மிச்ச சொச்சத்தையும், அட உனக்குப் பசிக்குதோ இல்லியோ... சாப்பிடு. சாப்பிட்டுர்றது நல்லது.
உள்ளே கடலுக்குள். அந்த மீன், அமைதி காக்கிறது. நிதானம் காக்கிறது. நான் மீதி உணவையும் தின்னுட்டு, தயாரா இருக்கலாம் இல்லியா?
"பொறுமை கையே... பொறுமை." அவன் கையைப் பார்த்தான். "இதோ உன் சக்திக்காக திரும்ப மீதியும் சாப்பிடப் போகிறேன்."
ம். மீனுக்கும் உணவு கொடுக்க வேண்டும்... என்று திடீரென்று தோன்றியது.
*
தொ ட ர் கி ற து
91 97899 87842

storysankar@gmail.com

No comments:

Post a Comment