Tuesday, August 2, 2016

THE OLD MAN AND THE SEA
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில் எஸ். சங்கரநாராயணன்
*
பகுதி ஆறு

••
“அட என்னடா இது
மீனுக்கு வந்த சோதனை!” என்றான்
அவன் மகிழ்ச்சியோடு
.••

கா, மீனுக்கும் எதாவது சாப்பிட என்று தரலாம், என்று திடீரென்று அவன் நினைத்துக் கொண்டான். யார் அது? எனக்கு அது, என் சகோதரன் மாதிரி, என்று தோன்றியது.
என்றாலும் இப்போது... ஆமாம். நான் அவனைக் கொல்ல வேண்டும். அதற்கு நான் சக்தி பெற்றாக வேண்டும். நிதானமாக அனுபவித்து அந்த அத்தனை முக்கோணத் துண்டு மீனையும் சாப்பிட்டுத் தீர்த்தான்.
முதுகை நிமிர்த்தி உட்கார்ந்தான். கையைக் கால்சராயிலேயே துடைத்துக் கொண்டான். “ம். இப்ப...” என்றான் சத்தமாய். “இடது கையே, நீ இனிமே கயிற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டியதில்லை. என் வலக்கை, ஒரு கையாலேயே நான் சமாளிக்கிறேன்... நீயா இந்த மாதிரி மடத்தனமாக நடந்துக்கறதை நிறுத்து. அப்பறம் பாக்கலாம்...”
இடது கையால் பிடித்திருந்த கயிறை இப்போது இடது காலால் அழுத்திக் கொண்டான். அப்படியே மல்லாக்க முதுகுக்கு இதமாகப் படுத்துக் கொண்டான்.
“இந்த மரத்துப்போன கை படுத்தற பாடு... ஆண்டவரே, இதை சொஸ்தப்படுத்தும். ஏன்னால், இந்த மீன்... அடுத்து என்ன காரியம் பண்ணும்னு எனக்கு ஒண்ணுந் தெரியாது. நான் எதற்கும் தயாரா இருக்கணும். இந்நேரம் இடது கை பயன்படாமல் போனால்... நான் என்ன செய்வது?”
ஆனால் மீன், அது அமைதியாகத் தான் இருக்கு, என நினைத்தான். அது ஏதோ ஒரு திட்டத்தில் செயல் படுகிறது. என்ன திட்டம்? அவனுக்குத் தெரியவில்லை. அது சரி. நான்? என் திட்டம்தான் என்ன?
அது மகா பெரிய மீன். நான் அதன் முன் பலவீனமானவன். கிழவன். அதன் திட்டத்தை விட அதிக சாதுர்யமான திட்டத்தை நான் தீட்டியாக வேண்டும்.
அது ஒரு துள்ளல் துள்ளட்டும். நான் அதைக் கொல்வேன்! ஆனால், அதற்கு மேலேவர யோசனையே இல்லை. அதுபாட்டுக்கு கீழேயே தங்கிக் கொண்டிருக்கிறது. ஆக, நானும் இங்கியே இப்பிடியே அதற்காக கால காலத்துக்கும்... காத்திருக்கிறேன்.
சொரணையற்றுக் கிடக்கிற கையை கால்சராயில் போட்டு சொர சொரவென்று சூடு பறக்கத் தேய்த்தான். கை விரல்களை மெல்ல நீவி விரித்து விட்டான். என்றாலும் அது உயிர்ப்புடன் தயாராகவில்லை.
ம். ஒருவேளை, சூரிய கதகதப்புக்கு மெல்ல சொரணை மீளும், என நினைத்துக் கொண்டான். இப்ப சாப்பிட்டோமே, கொழுத்த பச்சை மீன், அது செரிக்கவும் உடம்பில் தெம்பு ஊறி கை பயன்பாட்டுக்கு வந்துவிடலாம் ஒருவேளை, என நினைத்தான். அந்தக் கை பயன்பாட்டுக்கு அவசியம் என்றாகிற பட்சத்தில், எப்பாடு பட்டாவது நான் அதை சொஸ்தமாக்கி விடுவேன்.
ஆனால் அதை அப்படி இப்போது கடும் பாடுகளால் கொண்டுவர வேண்டாம், என்று இருந்தது அவனுக்கு. அதுபாட்டுக்கு வழிக்கு வரட்டும். வரும்போது வரட்டும். ச். பாவம் அது. அந்த ராத்திரி மத்த தூண்டிலை யெல்லாம் அறுத்து விடவும், எல்லா கண்டையும் ஒண்ணா ஒரே முடிச்சா சேர்த்துக்கவும், நிறைய வேலை இருந்தபோது, அதை நான் அப்பிடியொரு வசை பாடியிருக்கேன்!
கடல் பரப்பைச் சுற்றிலும் பார்த்தான். ஹா. பரந்து விரிந்த கடல் வளாகம். திசை அடையாளங்கள் அற்ற பெருவெளி. தனியே தான் மட்டுமாய் அவன். ஆனால், ஆழங்காறப்ட்ட கடலின் கருக்கிருட்டான பளிங்கு ஒளிர்வுகளைக் கண்டான் அவன்.
படகில் இருந்து தூண்டில் நீளமாய் முன்சாய்ந்து, சர்ரென்று நீரில் சரிந்து இறங்குகிறது. மகா தனிமை. மகா அமைதி. படகில் ஊஞ்சலாட்டப் பயணம். அமைதியும் ஊஞ்சலாடுகிறாப் போல. உள்ளே ஒரு விநோதமான புரட்டு புரட்டியது அந்தத் தனிமை.
குவியல் குவியலாய் மேகங்கள் பருவக் காற்று கிளம்பி வந்து கலைக்கக் காத்திருக்கின்றன. பார்வை எட்டும் மட்டும் பார்த்தான். தூரத்தில் கடலுக்கு சற்று உயர தொடுவான விளிம்பில் சில காட்டு வாத்துகள் பறப்பதை அவனால் பார்க்க முடிந்தது. மேகக் கூட்டங்களில் அவை மறைந்தும் வெளிப்பட்டும் திரிந்தன. தெரிந்தன.
ஆ, கடலில் நிசமாக யாரும் தனிமையில் இருக்க வாய்ப்பே இல்லை. அதிலும் கண் உள்ளவன் ஆசிர்வதிக்கப் பட்டவன்!
சில சமயங்களில் குட்டிப் படகை எடுத்துக்கொண்டு சில பேர் கடலின் உள்ளே கரைகாணாத் தூரத்துக்கு வந்து விடுவார்கள். கரையைக் கண்ணால் காணாத அந்த தூரமே அவர்களைக் கலவரப் படுத்திவிடும்.
புயல் கியல் கிளம்பும் அபாய மாதங்களில் அப்படி அவர்கள் தனியே மாட்டிக் கொள்ள நேர்ந்தால் அந்த பயம் நியாயமும் கூட. இப்ப நான் போயிட்டிருக்கேனே, இந்த மாசமே புயல் வீசும் மாதம் தான். இதுல என்ன ஒரு விசயம்னால், புயல் எதிர்பார்க்கப் படுகிற அந்த மாதங்களின் புயல் வீசா நாட்கள்... அற்புதமான சீதோஷ்ண காலங்கள் அவை. அந்த ஆண்டிலேயே அற்புதமான காலகட்டமாக அவை அமைஞ்சிருது!
அப்ப கூட, புயல் வர்றாப்ல இருந்தால், அது வரப் போகுதுன்றதை ஒண்ணு ரெண்டு நாள் முன்னாடியே வானத்தைப் பார்த்துச் சொல்லிறலாம். கடலில் இருக்கும் போது, அதை நீ உணர்ந்து கொள்ள முடியும். கரையில் இருந்தால் அப்படித் தெரிகிறது இல்லை தான். ஒருவேளை புயலின் அறிகுறி என்று எதை கவனிப்பது என்பதில் அவர்கள் இன்னும் தெளிவு பெறவில்லை, என்றுதான் தோன்றியது அவனுக்கு.
கரையின்னாலும் அந்த வித்தியாத்தை அது காட்டாமல் இருக்காது. மேகங்களின் திரட்சி, இப்படி எதாவது குறிப்புகள் தராமல் இராது. ம். அவன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். இப்பசத்திக்கு புயல் வர வாய்ப்பு இல்லை. அதன் அடையாளங்கள் இலலை.
முகில் குவியல்கள் ரொம்ப சாத்விகமான சிநேகத்துடன் ஐஸ் க்ரீம் மேடுகளாய்க் கண்டன. செப்டம்பர் மாத உச்சி வானம். மேகங்களின் உச்சிகளும் பசிறு பிசிறாய் பனித் தூவல்களின் மினுக்கம் காட்டின.
“ஒளிப் பஞ்சுகளால் ஆன மஞ்சுகள்!” என்று கூவினான். “மீனே, இந்த அருமையான பருவ நிலை, உனக்கு சாதகமானது அல்ல, எனக்கு தான்!”
அந்த இடது கை, இன்னும் அப்படியே உணர்ச்சியற்றுக் கிடக்கிறது. என்றாலும் அதை மெல்ல சரிபண்ணி வருகிறாப் போலத்தான் இருந்தது. தானறியாமல் கை விரல்களை அவன் மூடி திறந்து முயன்று கொண்டிருந்தான்.
என்ன இழவுடா இது, இந்த விறைப்பு, என நினைத்துக்கொண்டான். ஒருத்தரோட தேகத்துக்கு அது ஒரு நம்பிக்கைத் துரோகம். என்னத்தையோ தின்னு அஜீரணக் கோளாறு ஆகி வயித்துப்போக்கு கண்ட மாதிரி... அல்லது அதனால் வாந்தி எடுக்கிற மாதிரி, கை விறைத்த ஒரு ஆளைப் பார்க்க அருவருப்பு தட்டுகிறது. குறிப்பா தனியா இருக்கறபோது இப்பிடி கை கால் பிடிச்சிக்கிட்டால், அவனுக்கே அவன் மீது வெறுப்பாகிப் போகும்.
கூட உதவின்னு பையன் இருந்தான்னு வெய்யி, கையை அவன் தேய்ச்சிக் கீய்ச்சி விடுவான். முழங்கையில் இருந்து இழுத்து நீவித் தடவி விடுவான்.
ம். அது தானாகவே திரும்ப தளர ஆரம்பிக்கும், என்று நினைத்துக்கொண்டான்.
பிறகு தனது வலது கையால் நூலின் உள் இழுப்பின் கனத்தை ஒருமுறை கணித்துக் கொண்டான். அப்போது தண்ணீரில் சின்ன அளவு அந்தத் தூண்டிலின் சரிவு மாறுவதை கவனித்து, உஷாரானான்.
அந்தத் தூண்டில்இழைப் பக்கமாக முன்குனிந்து கொண்டான். இந்தக் கை, இடது கை, சண்டித்தனம் செய்யாதே கையே. இப்போது இது தேவைப்படலாம்! இடது கையால் தொடையில் சடார் சடாரென்று அறைந்து கொண்டான்.
தூண்டில் இழை தளர்வு காட்டி மெல்ல மேலே நோக்கி மிதந்து வர ஆரம்பித்தது.
“மீன் மேல வந்திட்டிருக்குடா!” என்று கத்தினான். “கையே, சீக்கிரம் நீ பயன்பாட்டுக்கு வா. சீக்கிரம்!”
அந்த இழை மெல்ல நிதானமாக மேலே மேலே எழும்பியது. பிறகு படகின் முன்பக்கமாக கடல்மட்டம் பொம்மென்று வீக்கம் காட்டியது.
மீன் வெளியே வந்தது! ஒரு பதட்டமும் காட்டாத, பயமே இல்லாத மீன்... சர்வ நிதானத்துடன் அது மேல்மட்டத்தை நோக்கி முன்னேறி வந்தது. அதன் இரண்டு பக்கம் இருந்தும் தண்ணீர் வழிய வழிய நீரைக் கிழித்தபடி மேலேறி வந்தது மீன்.
அந்த சூரிய வெளிச்சத்தில் பளீரென்று வெளியே வந்தது மீன். தலையும் உடலும் கருநீல நிறம். பக்கவாட்டு செதில்களை இள நீல நிறங் காட்டி விரித்தபடி சூரியனின் கதகதப்பில் தகதகவென மினுங்கியது மீன்.
கழிப் பந்தாட்டத்தின் கழி போல, நீளமான வாள் போன்ற பக்க செதிள்கள். அதன் ஓரங்கள் குத்தீட்டிகளாய் ஒடுங்கியிருந்தன.
முழுசாய்க் கடலுக்கு வெளியே துள்ளியது மீன். மீண்டும் தண்ணீருக்குள் சர்வ நிதானமாய் தலைகுப்புற டைவ் அடித்து முங்கியது. புல் கத்திரிக்கோலாய்த் திறந்த நிலையில் அதன் வால். அத்தோடு தூண்டில் கயிறும் தளர்ந்து உள்ளே சரிந்தது.
“படகைக் காட்டிலும் ரெண்டடி நீளம் பெரிய மீன் அது” என்றான் கிழவன். சரசரவென்று கயிறு நீருக்குள் போகிறது. ஆனால் நிதானமான வேகம் தான். ஆனால் அந்த மீன், அது துளிக்கூட திகில் அடையவில்லை. வெலவெலக்கவில்லை.
தூண்டில் இழை அறுந்துற கிறுந்துறக் கூடாது, என ரெண்டு கையாலும் அதை லாவகமாய்ப் பிடித்துக் கொண்டான் கிழவன்.
மீன் இபப உள்முகமாக நீந்தி, கடலின் அடியாழத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இப்ப அது அப்டியே போனால் இருக்கிற அத்தனை கயிறையும் அது உள்ளிழுத்துக் கொண்டு விடும். கயிறை அது அறுத்தும் விடலாம். அவனால் அதைத் திரும்ப மேலே இழுக்க முடியாமல் போகலாம்...
அற்புதமான மீன் அது. அதை நான் சமாதானப் படுத்த வேண்டும். சாத்விக நிலையிலேயே அதை வைத்திருக்க வேண்டும் நான், என நினைத்தான். அதற்கு தன்பலம் என்ன என்று அறிய நான் வாய்ப்பு அளிக்கக் .கூடாது. அது தப்பிச்சி ஓட முடிவு செஞ்சிட்டால், என் நிலை என்ன,.. அந்த விளைவுகளைப் பற்றி அது அறியக் கூடாது...
நான் அந்த மீனாக இருந்தால், சல்ல்னு உள்ளே போயி, இந்த இழையை அறுத்துக்கிட முடியுமான்னு ஒரு கை பார்ப்பேன். ஆனால் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். அவை மனுசாளைப் போல அத்தனை புத்திசாலி இல்லை... நாம் அவற்றைக் கொன்று விடுகிறோம் சுலபமாக!
ஆனாலும் அவை, நம்மை விட அதிகப் புனிதாத்மாக்கள். அதிக ஆற்றல் மிக்கவை அவை.
பல அரிதான மீன்களைக் பெரியவர் பார்த்திருக்கிறார். ஆயிரம் பவுண்டுக்கும் மேல் அதிக எடையுள்ள மீன்களைப் பார்த்திருக்கிறார். அவற்றில் இரண்டை தன் வாழ்நாளிலேயே பிடித்தும் இருக்கிறார்.
ஆனால் அப்போது எல்லாம் தனியே இருந்தது இல்லை அவர். கூட சகாயத்துக்கு ஆள் இருந்தார்கள். இப்போது தான் முதன்முறையாக அவர் தனி ஆள். கரை காணாத வெகு தூரம் உள் கடலில் இருக்கிறார். உதவி தேடினாலும் கிடைக்க வாய்ப்பே இல்லை.
அவர் துரிதகதியில் தான் செயல்பட்டார். இத்தனை பெரிய மீனை அவர் தன் வாழ்நாளில் கேள்விப்பட்டது கூட இல்லை.
ச். அந்த இடது கை விரல்கள்... ஒரு கழுகின் உள்மடிந்த நகங்கள் போல இறுகி விறைத்துக் கிடந்தன இன்னும்.
அதெல்லாம் சரியாகிரும், என்று ஆறுதல் படுத்திக் கொண்டான். கூடிய விரைவிலேயே எனது வலது கைக்கு உதவியா இதுவும தயாராயிரும். மூணு விஷயங்கள் ஒண்ணுக்கொண்ணு சகோதர வாஞ்சை கொண்டவை இங்கே. இந்த மீன், மற்றும் இந்த ரெண்டு கைகள்! இடது கை, அது சரியாகித்தான் ஆகணும். இப்பிடியே யாருக்கும் பயன் இல்லாமல் அது இருப்பது சரி கிடையாது.
நல்ல விஷயம். மீன் இப்போது வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனது இயல்பான வேகத்தில் அது நீந்த ஆரம்பித்து விட்டது.
அப்படி யென்றால், அது ஏன் மேலே வந்து ஒரு துள்ளல் துள்ள வேண்டும்? என்ன நினைத்தது அது, என யோசித்தான் அவன். ஏய் நான் யாரு, என் ஆகிருதி என்ன, பாக்கறியா?... என்று எனக்குக் காட்டணும்னு அது நினைச்சதா? அது எப்பிடியோ, இப்ப எனக்கு அதைப் பத்தித் தெரிஞ்சிட்டது!
இப்ப என் முறை. அந்த மீனுக்கு, நான் என்ன மாதிரியான ஆள்னு காட்டணும்!
இப்ப முடியுமா? இப்ப நான் செயல்பட்டால் எனது கை லாயக்கில்லாம ஆயிட்டதுன்னு அது தெரிஞ்சிக்கும். இப்பசத்திக்கு என் சக்திக்கு மேலே என்னை அது நினைச்சி வெச்சிருக்கு. அது அப்படியே இருக்கட்டும்.
நானும் தான் அப்படி நடந்து காட்டுவேன்!
ஹா. என்னைவிட பலசாலியானது அது. நான் இந்தக் கட்டத்தில் மீனாக இருந்திருக்கலாம், என திரும்பவும் நினைத்தான்!
அது பலசாலி என்னைவிட. எனது தாக்கு பிடிக்கிற தீவிரம், ஞானம். அந்த விஷயம் தான் என் பலம்.
ஆசுவாசமாக படகின் மரச் சுவரில் சாய்ந்து கொண்டான். இருக்கிற கஷ்டங்களை வந்த அளவில் அனுபவிப்போம், என்றிருந்தது.
மீன் தன் வேகத்தில் நீரைத் துழாவி அவனையும் இழுத்துக்கொண்டு போனது. படகு தன்பாட்டுக்கு மீன்காட்டிய பாதையில் கருமை காட்டிய கடலில் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. கிழக்குப் புறமாக காற்று கடலை அசைத்து அலைத்துக் கொண்டிருந்தது.
இப்போது வரையிலான கதகதப்புக்கு, ஆகா, கிழவனின் இடது கை... இரத்த ஓட்டம் அதிகரித்து மெல்ல சுதாரிப்புக்கு வந்தது!
“அட என்னடா இது மீனுக்கு வந்த சோதனை!” என்றான் அவன் மகிழ்ச்சியோடு. தோள்ப்பட்டையில் சாக்குக்கு அடியில் முட்டுக் கொடுத்து தாங்கிக் கொண்டிருந்த தூண்டில் பாரத்தை மறு தோளுக்கு மாற்றிக் கொண்டான்.
முன்னைக்கு இப்போது வேலை லகு போலப் பட்டது. ஆனால் உடம்பு சுணக்கம் கண்டிருந்தது. ச். உடம்பு வலி, அதை அவன் அலட்சியப் படுத்தியே வந்தான்.
“நான் ரொம்ப பக்திமான் எல்லாம் இல்லை. இன்னாலும் என் தேவ தந்தையையும், அம்மையான கன்னி மேரியையும் பத்து முறை ஸ்தோத்தரிப்பேன். இந்த மீனை நான் பிடிக்க அவர்களிடம் மன்றாடுவேன். வேண்டி விண்ணப்பம் வைப்பேன். கோப்ரே நகர தேவதையே, என் ஆத்திரத்துக்கு உதவு. உன் ஷேத்திரத்துக்கு வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுவேன். இது சத்தியம். எங்கம்மா உன் மேல் ஆணை.
தன்னியல்பாய் தானறியாமல் பிரார்த்தனைகள் உதடுகளில் உலா வர ஆரம்பித்திருந்தன. மகா அலுப்பாய் இருந்தான் அவன். உடம்பில் தெம்பே இல்லை. சில சமயம் ஹா என்ற மூச்செடுப்பில் பிரார்த்தனையே மறந்து ஒரு திகைப்பு அப்பியது அவனை. எங்கே விட்டேன், என்று தெரியாமல் மருட்டியது. பின்பு கடகடவென்று வேகமாக, அது மறக்கு முன் சொல்லிவிடும் அவசரத்துடன் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தான். மேரிக்கு ஸ்தோத்திரம் என்று முணுமுணுப்பது, சான்றோரே, முன்னோரே என்று வேண்டிக் கொள்வதை விட சுலபமாய்ப் பட்டது.
“கருணை மிக்க கன்னி மேரிக்கு ஸ்தோத்திரம். பரிசுத்த ஆவியானவர் என்கிற கருணைக்கடல் என்னுடன் இருக்கட்டும். பெண்களில் நீ வரமானவள். உன் கருப்பையின் கிருபைக் கனியாகிய ஆண்டவர், ஆண்களில் அவர் புனிதமானவர். புனித மேரி அன்னையே, என் ஆண்டவரின் அன்னை நீ. பாவிகள் நாங்கள், எங்களுக்காக நீ ஜெபம் பண்ணுவாயா? இப்பவும், எப்பவும், எங்கள் சாவு வரும் வேளையிலும்... எங்களுக்காக ஜெபிப்பாயா? ஆமென்” என்றான்.
பிறகு சேர்த்துக் கொண்டான். 'தேவ கன்னிகா, மீனின் மரணத்துக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும் நீ. ஆனாலும் எத்தனை அற்புதமான மீன் அது!”
பிரார்த்தனைகள் நிறைவு பெற்றன. இப்போது சிறிது தெம்பு திரும்ப வந்தாப் போலிருந்தது. உடம்பு வலியும், அலுப்பும் சற்றும் குறையத்தான் இல்லை. ம், ஒருவேளை வலி அதிகமாகக் கூட இருக்கலாம் இப்போது. கோச்சுப் பெட்டியின் தளத்தில் சாய்ந்து படுத்துக் கொண்டான்.
தன்னிச்சையாய் இடது கை விரல்களை அசைத்து அசைத்துப் பார்த்துக் கொண்டான்.
கடல் காற்று மெலல வளைய வர ஆரம்பித்திருந்தது. என்றாலும் சூரியனின் தகிப்பு குறையாமல் இருந்தது.
“திரும்ப காலித் தூண்டிலில் இரை வைத்து கடலில் விட்டால் கூட நல்லா இருக்கும்” என்றான் கிழவன். “மீன் இன்னொரு ராத்திரி இப்படியே இருக்க முயலக் கூடும், என்றால் நான் இன்னொரு தரம் உணவு எடுக்க வேண்டியிருக்கும். என் உணவுக்காக சிறு மீன் எதும் சிக்குதா என்று பார்க்க வேண்டும். போத்தல் தண்ணியும் கொறஞ்சிட்டது.
கடலின் இந்தப் பகுதியில், டால்ஃபின் தான் கிடைக்கும். வேற மீன் கிடைக்காதுன்னு தோணுது. அதை அப்படியே சாப்பிட்டால் தெம்புக்கு மோசமில்லை தான்.
இன்னிக்கு ராத்திரிக்கு எதும் பறக்கும் மீன் மேலுக்கு வந்தாலும் தேவலை. இங்க விளக்கு வெளிச்சம் கிளிச்சம் எதுவும் இல்லையே. வெளிச்சம் இருந்தாலும் அந்த வெளிச்சத்துக்கு அவை வரும். இல்லாமல் அவை எப்படி வரும்? பறக்கும் மீன்களை கத்தி வெச்சி வெட்டி கூறு போட்டு... அந்தச் சோலியே வேணாம். சின்ன மீன். அப்டியே வாயில் போட்டுக்கலாம்.
இப்ப நான் அத்தனை பலத்தையும் சேத்து வெச்சிக்கணும். அடுத்த போராட்டம், இதோ காத்திருக்கிறது. யேசுவே, இது... இந்த மீன், இத்தாம் பெரிசுன்னு நான் கண்டனா?”
“இருக்கட்டும்.. நான் அதைக் கொல்வேன். வெல்வேன்!” என்றான் கிழவன். “என் ஆண்டவரின் பராக்கிரமும் பெருமையும் என்னுடன் துணை இருக்கும்!”
ஆனாலும், அதைக் கொல்வது, நியாயம்னு சொல்ல முடியாது, என நினைத்துக் கொண்டான். அதுக்கு மனுசாளைப் பத்தி நான் எடுத்துச் சொல்வேன். மனுசன் எதையும் தாக்குப் பிடித்து சமாளிப்பான், அதை அதற்குக் காட்டித் தருவேன் நான்!
“ஏய் நான் ஓர் விசித்திரத் தனிப்பிறவி பாத்துக்க! அப்படித்தானே பையனிடம் நான் சொன்னேன்?” என்றான் கிழவன்.
“இதோ அதை நிரூபிக்கும் சந்தர்ப்பம் வந்தது!”
அட இதுக்கு முன்னாடி நீ ஆயிரம் வாட்டி அதை நிரூபித்தும் இருக்கலாம். அதெல்லாம் விஷயமே கிடையாது. திரும்ப இப்போது அவன் அதை நிரூபணம் செய்வான்.
ஒவ்வொரு கால கட்டமும் ஒரு புதிய கால கட்டம் தான். அந்தந்த நேரத்தை அவ்வப்போது யோசித்து சவாலை எதிர்கொண்டு செயல்படு. செயல்படுகிற அந்த நேரத்தில், பழசை நினைத்துக்கொள்ள வேண்டாம். அவன் அப்போது பழைய காலங்களை யெல்லாம் போட்டு உழப்பிக் கொள்ள மாட்டான்.
மீன் கூட சிறிது தூக்கமும் ஓய்வும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கும் ஒய்வு தேவை. சிங்கங்கள் பற்றி கனவு காணலாம் நான், என யோசித்தான். மனசில் சிங்கங்கள், அவைமாத்திரம் எப்படி நினைவில் தங்கி விட்டன?
அந்த யோசனையெல்லாம் இப்ப வேணாம், பெருசு,  என சொல்லிக்கொண்டான் மனசில். அப்பிடியே பலகையில் மல்லாக்கப் படுத்து உடலைக் கிடத்து. சாய்வு கொள். கொஞ்சம் ஓய்வு கொள். மனசை யோசனையே இல்லாமல் துப்புரவா வெச்சிக்க. அது என்னவோ யோசித்துக் கொண்டிருக்கிறது. நீ பாட்டுக்கு அசையாமல் கொள்ளாமல் முடங்கு. அடங்கு சிறிது நேரம்.
நண்பகல் தாண்டி மதிய வேளை ஆகியிருந்தது. என்றாலும் படகு அதுபாட்டுக்கு நிதானமாக மெதுவாகப் பயணப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. கிழக்குப்புறக் காற்று கிளம்பி அதுவும் படகைத் தள்ளிக் கொடுத்தது. பெரிதும் ஆர்ப்பாட்டங் காட்டாத அமைதிக் கடல். தோள்ப் பக்க இழுப்போடு அவன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான்.
*
ஒருமுறை மதிய வேளையில் திரும்ப அந்தத் தூண்டில் இழையில் ஒரு விறைப்பு தெரிந்தது. என்றாலும் பெரிதாய் எதுவும் நிகழவில்லை. மீன் கொஞ்சம் மேல் பக்கமாக வந்து நீந்த ஆரம்பித்திருந்தது. சூரிய வெளிச்சம் கிழவனின் இடது கை தோள் முதுகு என்று வெக்கையாய் விழுந்து கொண்டிருந்தது. ஆமாம், அவனுக்குத் தெரிந்து. வடது வாடையில் கிழக்கு வசமாக மீன் திரும்பி விட்டது இப்போது.
இப்ப என்ன விஷயம் என்றால், அவனோ ஒருவாட்டி அந்த மீனைப் பார்த்தாகி விட்டது. கடலில் ஆழத்தில் அது தன் கருநீல வண்ண பின்துடுப்புகளை அகல விரித்தபடி எப்படி நீந்துகிறது, என அவனால் கற்பனை செய்ய முடிந்தது. வாலை செங்குத்தாகத் தூக்கி அந்த இருளில் துழாவிப் போகிறது
அந்த ஆழ இருளில் அதனால் எவ்வளவு பார்க்க முடியும், என யோசித்தான். அதன் கண்கள் கொட்டையானவை. ஆனால் அதைவிட சிறிய கண்கள் கொண்ட குதிரை இருளில் நன்றாகப் பார்க்க வல்லது.
ஒருகாலத்தில் நானும், இருளிலும் எனக்கு கண் தெரிந்தது. கும்மிருட்டுக் காலங்களில் அல்ல. ஒருமாதிரி கரைந்த வெளிச்ச இருள். ஒரு பூனை அளவுக்கு நான் பார்ப்பேன்னு சொல்லலாம்.
சூரிய வெக்கையும் கையைத் திரும்பத் திரும்ப அசைத்த அவன் முயற்சியும் சேர்ந்து இடது கையை முழுவதுமாக வழிக்குக் கொண்டு வந்துவிட்டன. இப்போது தனது பாடுகளை அதிகம் இடது பக்கத்துக்குக் கொடுத்துக் கொள்ள முடிந்தது. முதுகுச் சதையை அசைத்து அதை அப்படி சிறிது நகர்த்திக் கொண்டான்.
“இத்தனைக்கும் நீ அலுப்படையவில்லைன்னால்... மீனே!” என்றான் அவன். “நீயே ஒரு ஆச்சர்யமான பிறவி தான்.”
அவனோ மகா அலுப்பாய்த் தான் இருந்தான் அப்போது. அவனுக்குத் தெரிகிறது. இதோ அடுத்த ராத்திரி வந்திரும்.
வேற என்னமாவது யோசிக்கலாமாய் இருந்தது. கழிப் பந்தாட்டங்கள். பெரிய போட்டிகளைப் பத்தி யோசித்தான். கழிப் பந்தாட்டத்தில் கிரான் லிகாஸ் கோப்பை பெரிதாய் இருக்கலாம். அவனைப் பொறுத்த மட்டில், நியூ யார்க் யாங்க்கிகளுக்கும், டெட்ராய்ட் புலிகளுக்குமான ஆட்டம், அதுவே அத்தனை முக்கியமானது தான்.
ரெண்டு நாள் ஓடிட்டது. ரெண்டு போட்டிகள் நடந்திருக்கும். ஜுகோஸ் ஆட்டம் என்னாச்சி தெரியவில்லை, என நினைத்துக் கொண்டான். டேய் நம்புடா. சூரன் டிமாகியோ போல நானும் உயரணும். அவன் எல்லா வேலையும் கச்சிதமாச் செய்யறான் ஆட்டத்தில். அவன் கரண்டைக் காலில் ஒரு எலும்பு வலிகொடுத்து அவனைப் படுத்தியது. அப்போது கூட அவன் ஆட்டத்தில் குறை வைக்கவில்லை.
கரண்டைக் கால் வலி எப்படி இருக்கும்? எலும்பு துருத்தி முள் குத்தலா வலிக்குமா? நமக்கு அதெல்லாம் வருவது இல்லை. அதனால் அதுபற்றித் தெரியவில்லை. ஒரு காலில் அடிபட்டும் கூட வீராவேசமாய்ச் சண்டை போடும் சண்டைச் சேவல் பார்த்திருக்கிறான். அது மாதிரியா இவன்? டிமாகியோ?... என நினைத்தான்.
ஐயோ சண்டைச் சேவலின் போராட்டம் அபாரமானது. அவை ஒரு கண், ஏன் ரெண்டு கண்ணும் போனலுங் கூட ஆக்ரோஷத்தை, எதிர்ப்பை விடுவதே இல்லை. எதிராளியோடு கடைசிவரை சரிக்கு சமமாய்ப் பொருதுகின்றன. சூரத்தனம் காட்டும் பறவைகள், மற்றும் காட்டு விலங்குகள், அவற்றின் போராட்ட வலிமைக்கு முன் மனுசன் அத்தனை பெரிய போராளி என்று சொல்ல முடியாது. அவன் உடம்பிலும் அத்தனை சக்தி இல்லை...
என்றாலும் கடலின் அடி இருளில் இந்த மீன், இதற்கு சமமாக... நான், சமாளிப்பேன்!
“ஆமாம். சுறாக்கள் ஊடே வரக் கூடாது” என்றான் சத்தமாய். “சுறாக்கள் வந்தால், ஆண்டவரே, எனக்கும் விமோசனம் இல்லை. மீனுக்கும் இல்லை. எங்களிடம் நீரே இரக்கம் காட்ட வேண்டும்!”
*
தொ ட ர் கி ற து

storysankar@gmail.com 91 97899 87842

No comments:

Post a Comment