Friday, August 5, 2016

THE OLD MAN AND THE SEA
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில் எஸ். சங்கரநாராயணன்

பகுதி ஏழு

**
உண்மையில் அதன் நீந்து வேகம்
மிக மிக அதிகம். அதை அது
பிரயோகிக்கவில்லை இன்னும்.
**

ங்க பார். உன்னோட ஆள் சூரன், டிமாகியோ... என் ஒருத்தனைப் போல இப்படி ஒரு மீனுடனேயே இத்தனை நாழிகை தாக்கு பிடிச்சி இருப்பானாங் காட்டியும்... என யோசிக்கலானான்.
ஏன் முடியாமல்? இளவட்டப் பயல் அவன். பலசாலி. அதைவிட, அவங்க ஐயா, அவரே மீனவர் தானே? இன்னாலும், இப்படி இந்தத் தனிமையில், கெண்டைச் சதை எலும்பு இன்னமும் குத்துவலி தரக் கூடும் அவனுக்கு.
“அதைப்பத்தித் தெரியல்ல” என்று சத்தமாய்ச் சொன்னான். “கரண்டைக் கால் வீங்கி நான் அவஸ்தைப் பட்டது கிடையாது.”
அஸ்தமனப் பொழுது வந்தது. நான் எனது நம்பிக்கையை உற்சாகத்தை அதிகப் படுத்திக் கொள்வேன், என யோசித்தான். கசாபிளான்கா மது விடுதியின் பந்தயங்களை அவன் நினைவு கூர்ந்தான். அங்கே சனங்களின் கைமடக்கு பந்தயங்கள். சியன்ஃப்யூகோஸ் பக்கம் இருந்து வந்தானே ஒரு நீக்ரோ, ஆள் சூரன்லா, அந்த நாளில் அப்போதைக்கு அவனைவிட பலசாலி யாருங் கிடையாது.
அவனோடு நான் கைமடக்கு பந்தயத்தில் பொருதினேன்!
ஒரு நாள். ஒரு இரவு... மேசையில் முஷ்டிகளால் அழுத்தியபடி ஒருவர் கையை ஒருவர் பற்றி யிருந்தோம். ஒரு சாக்கட்டியால் எங்கள் இரு கைகளைச் சுற்றி ஒரு வட்டம். முன்கைகள் நேராய் நிமிர்ந்து விரைத்திருந்தன. கைகள் இறுக்கமாக மூடி பற்றிக் கொண்டிருந்தன. ஒராள் மத்த ஆளின் கையை அப்படியே தாழ்த்தி மேசையோடு சரித்து அடக்கி விடப் போராடினோம.
எங்களையிட்டு சுத்தி வேடிக்கை பார்த்தவர்கள் கூட பந்தயங் கட்டினார்கள். மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் சனங்கள் எங்களைப் பார்த்துவிட்டு வெளியே போவதும் உள்ளே வருவதுமாகப் பரபரப்பாய் இருந்தார்கள். அந்த நீக்ரோவின் முழங்கை, முகம் என்று அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
முதல் எட்டு மணி நேரத்துக்கு ஒரு நடுவர் இருந்தார். அப்புறம் நாலு மணி நேரத்துக்கு ஒருவர் என்று நடுவர்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். நடுவர்களுக்கு ஓய்வும் தூக்கமும் வேண்டியிருந்தது!
நகக்கண்களே புண்ணாகி இரத்தம் வந்துவிட்டது! எனக்கும், அவனுக்கும்... என்றாலும் யாரும் சளைத்தாப் போலில்லை. ஒருத்தரை ஒருத்தர் கண்ணுக்குக் கண் எனப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே அந்தக் கைகளை, ஒருத்தர் கையை அடுத்தாள் வெறித்தாகிறது. சுத்திக் கூடிய கூட்டத்துக்கும் இருப்புக் கொள்ளாத தவிப்பு. அவனவன் வெளியே போறான், உள்ள வர்றான்... பந்தயத் தொகை எகிறுது. ஓரங்களில் சுவர்ப் பக்கமாய் உயரமான நாற்காலிகள், அங்க போய் சிறிது அமர்கிறார்கள். அங்கிருந்தே கண் கொட்டாமல் பார்க்கிறார்கள்.
பளிச்சென்ற நீல வண்ணத்தில் மரச் சுவர்கள். மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் அந்தச் சுவரில் மெலிந்த நீள நிழல்கள் விழுந்தன. அந்த நீக்ரோவின் நிழல் பெரியதாய்க் கண்டது. காத்தடிச்சி விளக்கு அசைய அந்த நிழலும் அசைந்து கொடுத்தது.
வேடிக்கை பார்க்கிற சனங்களில் அந்த ராத்திரிப் போதில், எனக்கா அந்த நீக்ரோவுக்கா, என்று ஆதரவு மாறிக் கொண்டே யிருந்தது. சிலர் எனக்கு சப்போர்ட். சிலர் அவனை ஆதரித்தார்கள். சிலர் அந்த நீக்ரோவுக்கு வாயில் ரம் ஊட்டி விட்டார்கள். அவனுக்கு வாயில் சிகெரெட் வைத்து பற்ற வைத்துக் கொடுத்தார்கள்.
ரம் உள்ளே போன ஜோரில் அந்த நீக்ரோ இன்னும் ஆக்ரோஷமா ஒரு எடுப்பு எடுக்கப் பார்த்தான். கிட்டத்தட்ட கிழவனை வீழ்த்திட்டாப் போல இருந்தது. ஆனால் இந்த அளவு அப்போது எனக்கு வயதாக வில்லையே. பலமும் அதிகம் இருந்தது எனக்கு. அப்ப நான சண்டியர் சாண்டியாகோ இல்லே? பின்னே?
கிட்டத்தட்ட ஒரு மூணு அங்குலம் அளவு என் கை தளர்ந்திட்டது அந்நேரம். சுதாரிச்சி திரும்ப என் கையை, கடைசித் தெம்பு வரை பயன்படுத்தி, நிமிர்த்தி விட்டேனே? அப்பவே அந்த நீக்ரோவை நான கெலிச்சிருவேன்னு ஒரு தெம்பு வந்தாச்சி எனக்கு. நல்ல மனுசனப்பா அவன். திறமையான ஆட்டக்காரன் தான். அவனை நான் ஜெயிப்பேன்!
அன்றைய இரவும் முடிந்து வெள்ளி முளைத்தது. பந்தயக்காரர்களே அசந்து போனார்கள். போட்டி 'டிரா', வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை, ரெண்டு பேருமே சம பலம், என்று சொல்ல முன்வந்தார்கள். அப்போதுதான் நடுவர் பரபரக்கிறார் தலையை இப்பிடிஅப்பிடி குலுக்குகிறார். சாண்டியாகோ சட்டென தன் வியூகத்தில் இருந்து தாக்குதலுக்கு வந்தான். முழு தம் பிடித்து, அந்த நீக்ரோவின் கையை, ஊப்பென கீழே கிழே இறக்கி... மேசையில் சாய்த்து விட்டான்!
ஞாயிறு காலை ஆரம்பிச்ச போட்டியாக்கும். திங்கள் காலையில் முடிந்தது! பந்தயங் கட்டிய நிறையப் பேர், 'டிரா' என எழுந்து கொண்டார்கள். ஏன் என்றால் அவர்கள் காலையில் வேலைக்குப் போக வேண்டாமா? அவர்கள் மூட்டை தூக்கிகள். சர்க்கரை, சாமான்கள் சாக்கு சாக்காக அவர்கள் படகுகளில் ஏற்றித் தர வேண்டி யிருந்தது. சிலர் ஹவானா கரி கம்பெனி வேலைக்காரர்கள். வேலைக்குப் போக வேண்டியிரா விட்டால், போட்டி முடியு மட்டும் அவர்கள் காத்திருந்திருப்பார்கள். ஆனால், சாண்டியாகோ, அவர்கள் வேலை கெடாதவாறு, அதற்கு முன்னமேயே விசயத்தை முடிச்சி வெச்சாச்சி! வெற்றி அவனுக்கு!
அதன்பின் ரொம்ப காலம் எல்லாரும் அவனை “ஏய் சூரன்” என்றே விளித்து வந்தார்கள். வசந்த காலம் வந்தால் மறு போட்டி என அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் பந்தயப் பணம் என்று குறைவாகவே இருந்தது. அதிலும் இவன் சுலபமாக ஜெயித்துவிட்டான். முதல் போட்டியில் ஏற்கனவே அந்த நீக்ரோ தோற்றுப் போனதில் அவனது தன்னம்பிக்கை தளர்ந்திருந்தது ஒரு காரணம்.
அற்கும் பின்னால் ஒரு சில போட்டிகள். அப்படியே அந்த வழக்கமே இல்லாமல் ஆயிற்று.
அவனுக்குள் ஒரு நினைப்பு. நிச்சயமா நான் ஜெயிக்கணும்னு ஆகிப் போனால், எப்பாடு பட்டாவது நான் அதைச் சாதிச்சிருவேன்!.
ஆனால் மேலும் போட்டிகளை அவன் தவிர்த்து விட்டான். வலது கையை ரொம்ப இப்படி வேலை வாங்க வேண்டாம். நான் மீனவன். என் தொழில் மீன் பிடிப்பது. வலது கையை அதற்கு ஒழுங்கா வெச்சிக்க வேணாமா?
அப்ப கூட, அந்த போட்டி லகரி, விடத்தான் இல்லை. சில 'பயிற்சிப் போட்டிகள்' இடது கையைப் பயன்படுத்தி அவன் முயற்சித்துப் பார்த்தான். ஐய அவன் இடது கை, அதை அத்தனை நம்ப முடியவில்லை. திடீர்னு அது சொன்ன வேலை செய்யாது. சண்டித்தனம் பண்ணிரும். அதை வெச்சிக்கிட்டு போட்டி கீட்டியெல்லாம், நடக்காது...
இடது கையை சூரியனுக்குக் காட்டினான். தேவையான சூடு இதற்கு சூரியன் அளிக்கட்டும். திரும்ப இப்பிடி அது செயலிழக்கக் கூடாது. ராத்திரிப் பொழுது ரொம்ப பனி கொட்டினால் ஒருவேளை அது மந்தித்துப் போகலாம். மத்தபடி சமாளிச்சிக்கும், என நினைத்தான்.
இந்த ராத்திரி, என்ன கதையாவுமோ தெரியவில்லை.
தலைக்கு மேலே ஒரு விமானம். மியாமி நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது அது. அதன் சத்தத்திலும் பெரு நிழலிலும் பறக்கும் மீன்கள் மிரண்டாப் போல எகிறித் தாவியதைப் பார்த்தான். எதும் பறவைன்னு நினைச்சிட்டதோ என்னவோ?
“எவ்வளவு பறக்கும் மீன்கள்! பக்கத்தில் டால்ஃபின் நடமாட்டம் இருக்கும் போலிருக்கே” என்று பேசிக் கொண்டான். முன் பக்கமாகக் குனிந்து படகில் இருந்து உன்னிப் பார்க்க முயன்றான். ஆனால் அவனது இந்த மீன், அவனை அசையக் கொள்ள விடவில்லை. அப்படியே இருந்த இருப்பாய்க் கட்டி வைத்திருந்தது அது. கடலில் இருந்து தூண்டில் இழைகளில் தெறித்த சிறு துளிகள் பொம்மென்று வீங்கி சிறிது பதறி உதறி வெடித்தாப் போல சிதறியது.
படகு மெல்ல நகர்ந்தபடி யிருந்தது. தலையை நிமிர்த்தி அந்த விமானம் பறப்பதையே, அது கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
விமானத்தில் இருந்து கடலைப் பார்ப்பது விநோதமான காட்சிதான், என நினைத்தான். அந்த உயரத்தில் இருந்து கடல் பார்த்தல். கொஞ்சம் தாழ அவர்கள் பறந்தால், என்னுடைய இந்த மீனைக் கூட அவர்களால் பார்க்க முடியும், என்று தோன்றியது.
ஒரு இருநூறு ஃபாத உயரத்தில் தாழ்வாகவே பறந்து நானும் இந்த மீனைப் பார்க்க முடிந்தால்!...
*
ஆமை பிடிக்கப் போகிற சமயம், படகில் பாய்மர உச்சியின் குறுக்குக் கட்டைகளில் நான் உயரத்தில் இருப்பேன். அத்தனை உசரத்தில் இருந்தாலும என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. உயரவசத்தில் டால்ஃபின்கள் மேலும் பச்சை வண்ணம் காட்டின. அதன் கோடுகள், கருநீலப் புள்ளிகள் எல்லாமே பார்க்க முடிந்தது அங்கேருந்து. திரியும் மீன்களை மந்தை முழுசுமாய்ப் பார்க்கலாம். கடலின் ஆழத்தில் சஞ்சாரம் செய்யும் மீன்கள் எல்லாத்துக்குமே கருநீல உடம்பு. அதில் கருநீல வரிகள், புள்ளிகள். ஏன் அப்பிடி?
டால்ஃபின் பச்சை நிறமாய்க் காண்கிறது. நிசத்தில் நல்வெளிச்த்தில் அது பொன்னிறமானது, வெளிச்ச மயக்கத்தில் அது பசு மஞ்சள் பொலிவு பெறுகிறது. நல்லா பசியெடுத்து அது மேல்மட்டம் வருகிறபோது, கருநீலக் கோடுகள் பக்கவாட்டில் முன்னெடுத்துத் தெரிகிறது. மார்லின் மீன்களைப் போல என்று சொல்லலாம். அவை ஏன் வெளியே தலைகாட்டுகின்றன? ஆத்திரம் உசுப்பப்பட்டிருக்குமா, அல்லது மேல்மட்டத்துக்கு வருசிற உந்து விசையில் சும்மா ஸ்வைங்கென்று கடலுக்கும் மேலே எகிறி விடுகிறதா? அவை மேலே வரும் அவசியம் என்ன தெரியவில்லை.
மெல்ல இருட்டு கவிகிற நேரமாகி யிருந்தது. சர்காசோ பாசிகளின் பெரும் பரப்பு ஒரு தீவே போல விரிந்து கிடந்ததைக் கடந்து போக வேண்டி யிருந்தது. பரந்த பாசிப் படலம் கடலசைவில் எழும்பி அமுங்கி... பெருங்கடல் தான் அந்த மஞ்சள் விரிப்பின் அடியே கெட்ட காரியம் எதுவும் செய்கிறதோ?
அவனது சின்னத் தூண்டிலை இப்போது டால்ஃபின் ஒன்று சுவிகரித்தது. அது கடல் மட்டத்துக்கு மேலே என்று துள்ளியபோது தான் அவனே அதை கவனித்தான். சூரியன் விடைபெறும் அந்தப் போதின் தகதகப்பு அதனிடமும் காண முடிந்தது. ஒருபக்கச் சாய்வுடன் துடுப்புகளை அசைத்தபடி காற்றில் அதைக் கண்டான்.
திரும்பவும் திரும்பவும் அது துள்ளிய வண்ணம் இருந்தது. நீர் விளையாட்டு அல்ல. பயத்தின் திகைப்பு அது. படகின் பின்பக்கமாக நகர்ந்து வந்து, குனிந்து அந்தப் பெரிய தூண்டில் கயிற்றை வலது கையால் கவனமாகப் பிடித்தபடி, அந்த டால்ஃபினை படகுக்குள் இடது கையால் இழுத்துப் போட்டான். டால்பினின் தூண்டிலின் மேல் இடது காலை ஊனி அழுத்திப் பிடித்திருந்தான். செருப்பு அணிந்திருக்கவில்லை.
படகுக்குள் அந்த மீன் துடிதுடித்தபடி இங்குமங்கும் அசைவு காட்டியது. அவன் முன்பக்கமாக அதை நோக்கிக் குனிந்தான். தகதகவென்று பொலிந்தது மீன். கருநீலப் புள்ளிகள் வேறு ஸ்பஷ்டமாய்த் தெரிந்தன. டால்ஃபினைத் தூக்கினான். அவன் தூக்கிய ஜோருக்கு மேலும் பயந்து அது தாடையை கோணாமாணா அசைத்தது. கொக்கி இன்னுமாய் வலித்திருக்கலாம்.
நீளமான ஒடுகலான வால் பகுதியால் அது படகைத் தட் தட் என்று தட்டியது. உடம்பே தலையே அதற்கு நடுங்கிப் பரபரத்தது. மினுங்கும் அதன் தங்கமய தலையை ஒரு கழியால் குறுக்கே ஒரு மொத்து மொத்தினான். கொஞ்சமாய் உதறி விட்டு மீன் அடங்கிப் போனது.
கொக்கியைக் கழட்டி மீனை விடுவித்தான். இன்னொரு சார்தைனை வைத்து அந்தத் தூண்டிலைத் திரும்ப தயார் செய்து கொண்டான். அதைத் திரும்ப கடலுக்குள் சுண்டினான். பிறகு கோச்சுப் பெட்டி பக்கமாய்த் தன் வேலைக்கு வந்தான்.
இடது கையை அலம்பி கால்சராயில் துடைத்துக் கொண்டான். தூண்டில் பாரத்தை வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டான். இப்போது வலது கையைக் கழுவிக் கொண்டான். சூரியன் கடலுக்குள் மெல்ல அமுங்கிக் கொண்டிருந்தைப் பார்த்தான். குறுக்கே இடைவழியில் அந்தக் கம்பிக் கயிறும் தூண்டிலும் சரிந்து  கடலில் இறங்கி யிருந்தது.
“நம்மாளு மீன், அது இன்னும் அசரவே இல்லையேப்பா” என்றார் பெரியவர். கையைத் தண்ணீரில் வைத்திருந்தார். படகின் வேகம் முன்னைக்கு மட்டுப் பட்டிருந்தாப் போலத்தான் இருந்தது.
“பார்க்கலாம். ராத்திரிக்கு நான் என்ன செய்யலாம், என்னுடைய துடுப்புகள் ரெண்டையும் கதலில் படகோடு வைத்துக் கட்டி விடலாம். அதுவேற மீனின் இழுவையைத் தடை செய்யும். மீன் இன்னும் வேகம் தளரும்!” என்றார் பெரியவர். “ராத்திரிக்கு அது சமத்தாய் இருக்கும். நானும் அதைத் தொந்தரவு செய்யப் போவது இல்லை!”
சாப்பாடு? டால்ஃபினை இப்ப அவசரமா நறுக்க வேணாம், என்றிருந்தது. கொஞ்சம் போவட்டும். இப்பவே நறுக்கி அதன் ரத்தத்தை வீணடிச்சிறப்டாது. கொஞ்சம் போனால் இரத்தமும் உள்ளேயே உறைஞ்சிரும். நமக்கும் சாப்பிட, அதிக சக்தி அது...
கொஞ்சம் போகட்டும். அப்பறமா அந்தச் சோலியைப் பாப்பம். துடுப்புகளையும் சித்த கழிச்சி தண்ணியில் விடலாம். படகோட துடுப்பும் சேர்ந்து இழுபடட்டும். மீன் ரெண்டையுமா இழுக்கையில் இன்னுமாய் தன் வேகத்தைக் குறைக்க வேண்டி வரும்.
இப்பசத்திக்கு நான் மீனை அமைதியாகவே வைத்திருக்க வேண்டும். அஸ்தமன வேளை. ரொம்ப அதைத் தொந்தரவு படுத்திறக் கூடாது. சூரிய அஸ்தமனம் என்பது எல்லா மீனுக்குமே சிரமந் தருவதான சமாச்சாரம் தான்.
அப்படியே கை காற்றில் காயட்டும் என்று விட்டுவிட்டான் கிழவன். பிறகு அந்தக் கையால் தூண்டிலைப் பற்றினான். அப்படியே உடம்பை அங்கே இங்கே உலுக்கிச் சடவு உதறிக் கொண்டான். படகைப் பார்க்க முன் சரிந்து குனிந்து பார்த்தான். இடுப்பை அசைத்து வளைத்து வேலை வாங்கினான். இந்த வசத்தில் படகுதான் அவன் அளவு, அல்லது அவனை விடவும் கூட தூண்டிலின் பாரத்தைச் சுமப்பதாக அமைந்தது.
மெல்ல கொஞ்ச கொஞ்சமா நான் எதை எப்பிடிக் கையாளணு1ம், செய்யணும்னு  அறிஞ்சிக்கிட்டு வரேன், என நினைத்தான். இதோ, இப்ப இந்தச் சுமையைப் பகிர்ந்து கிட்டது, அதைப் போல. அதோட... ஞாபகம் வெச்சிக்கணும். நம்மாள், மீன் ரெண்டு நாளா எதுவுமே சாப்பிடவில்லை. நம்ம தூண்டில் இரையை லபக்னிச்சே. அதும்பின்னால உணவு எடுக்கவே இல்லை. நல்ல பெரிய மீன். நிறைய உணவு வேணும் அதற்கு.
என் பாடு அப்படி அல்ல. நான் ஒரு மத்திம உருவ மீனின் முழுக் கதுப்பையும் சாப்பிட்டிருக்கிறேன். நாளைக்குத் தேவையான உணவு இருக்கு. இந்த தொராதோ! (** தொராதோ ஸ்பானிய மொழியில் டால்ஃபின்)
இதை முள்ளு கிள்ளு நீக்கி சுத்தம் செய்கையில் கொஞ்சம் சாப்பிடலாம். அந்த மீன், நேத்தி சாப்பிட்டமே, அதை விட இது கடுக்னு இருக்கும். இருக்கட்டும். இப்ப எதுதான் சுலபமா இருக்கு, இதைக் குறை சொல்லறதுக்கு?
“ம். எப்பிடி சௌக்கியம்லாம், மீனே?” உரக்கக் கத்திப் பேசினான் கிழவன். “நான் சௌக்கியம். என் இடது கை, அதுவும் இப்ப தேவலாம். இப்ப ராத்திரிக்கும், நாளைய பகலுக்கும் தேவையான உணவு, கைவசம் இருக்கிறது. நீ இழு படகை. இந்த மீன் வண்டியை!”
ம். ஆனால் அத்தனை சௌக்கியமாக உணர்ந்தானா என்ன? அவன் முதுகுப்பக்கம் அழுத்தியிருந்த கம்பிக் கயிறு, அந்தப் பக்கத்துச் சதை உறைந்து போய், உணர்ச்சியே மந்தமாகி விட்டிருந்தது. ம். இது நல்லதுக்கில்லை தான். அவனுக்கே அது உறுத்தியது.
இதைவிடவும் மோசமான காரியம்லாம் எனக்கு ஆயிருக்கே, என நினைத்தான். கை விரலில் ஒரு கீறல் இப்ப. ஆனால் இடது கை மரத்திருந்தது, மீண்டு விட்டது. கால்களுக்கு ஒரு குறைவும் இல்லை.
எல்லாத்தையும் விட, அந்த மீனைவிட நான் தாக்கு பிடிக்கிற அளவில் மேம்பட்டவனாகவே தானே இருக்கிறேன்?
நன்றாய் இருட்டிவிட்டது. செப்டம்பர் மாதம், சூரியன் மறைந்த ஜோரில் சட்டென இருட்டு கவிந்து விடுகிறது. படகுப் பலகை உளுத்து விட்டுப்போயிருந்தது. அதில் சாய்ந்து கொண்டான். முடிந்த அளவு ஓய்வு கொண்டான்.
முதல் நட்சத்திரங்கள் வெளிக் கிளம்பி யிருந்தன வானத்தில். ரைகல் என்பது அந்த நட்சத்திரத்தின் பெயர். பெயர் தெரியாது அவனுக்கு. என்றாலும் அதைப் பார்த்தான். அது கொஞ்சம் கிட்டத்து நட்சத்திரம். அவன் அறிவான். இன்னும் நேரம் ஆக ஆக, கிட்டத்து நட்சத்திரங்களே காணாமல் போயிரும். தூர நண்பர்களோடுதான் அவன் அந்த இரவைக் கழிக்க நேரிடும்.
“தூர சிநேகிதாளை விடு. இதோ, இந்த மீன், இதுவும் எனது சிநேகிதன் தானே?” என்றான் சத்தமாய். “இந்த மாதிரி ஒரு மீனை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை இதுவரை. ம். ஆனால், இதை நான் கொன்றாக வேண்டும். ஹா அந்த மட்டுக்கு தூரத்து சிநேகிதர்கள், நட்சத்திரங்களைக் கொல்ல வேண்டியதாக இல்லை நிலைமை!” என தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்ள முயன்றான்.
யோசியும் ஐயா. தினசரி ஒராள் நிலவைக் கொல்லணும்னு இருந்தால்?... என யோசித்தான். நிலா அதாம் பாரு, பயந்து ஒற்ற ஓட்டமா ஓடுது.
ஏய், இப்பிடி யோசி. தினசரி நாம சூரியனைக் கொல்லணும்னு இருந்திச்சின்னால்?
அப்பிடியெல்லாம் இல்லை இல்லே? நாம அதிர்ஷ்டக்கார ஆட்கள்னு அர்த்தம். விடு!
பாவம் அந்த மீன், என இப்போது நினைவு மாறியது. கடும் பட்டினி. அதுக்கு சாப்பிட என்று எதுவுமே கிடையாது. அதை நான் கொல்லப் போகிறேன், என்றாலும் வருந்தாமல் இருக்க முடியவில்லை என்னால்.
அட என்னிடம் பிடிபட்டால், அது எத்தனை பேருக்கு உணவாகும்? இல்லையா? திறமையான பலசாலியான மீன். அதைத் தின்கிறார்களே, அவர்களுக்கு இதைத் தின்னும் தகுதி இருக்கிறதா, என்று கேள்வி போட்டது மனது.
இல்லை. இல்லவே இல்லைன்னு தான் சொல்லவேண்டி யிருக்கிறது. அது நடந்துகொள்ளும் விதம், அதன் கௌரதை... இதெல்லாம் இல்லாமல், இதையெல்லாம் அறியாமல் இதைச் சாப்பிட அவர்களுக்கு யாதொரு தகுதியும் இல்லைதான்!
சில விஷயங்கள் எனக்குப் புரியறது இல்லை, என நினைத்துக் கொண்டான். நல்ல விஷயம், நாம சூரியனையோ, சந்திரனையோ, ம், நட்சத்திரங்களையோ அழிக்கணும்னு மெனக்கிடல்ல. இன்னும் அது வேறயா? நாம கடல்லியே வாழ்ந்து, நம்மளோட உண்மையான சகோதர ஜீவராசிகளைக் கொல்வோம். அந்த மட்டுக்குப் போதும்!
    
இப்ப, அவன் யோசித்தான். இந்த இழுவை. இதைப் பத்தி யோசிக்கணும் நான். மீன்பாட்டுக்கு என்னை இழுத்துட்டுப் போகுது. அதில் சாதகங்களும் இருக்கு. பாதகங்களும் இருக்கு.
என்னுடைய அத்தனை கயிறும் இதோட இருக்கு. இப்ப இந்த மீன் தப்பிச்சிட்டால், எனது அத்தனை கயிறும் போச்சு. துடுப்புகளைப் படகோடு இணைத்துவிட்டால், மீனின் ஓட்ட வேகம் குறையும். மீன் அத்துக்கிட்டால் படகு, இத்தனை லகுவாக இழுத்துப் போகிற தன்மையை இழந்து விடும். அதைத் துடுப்புடன் நான் செலுத்தினால் அதிக சிரமந் தரும் அது.
இப்போது அது சல்லென்று சவாரி விடுகிறது, என்றாலும் அது நல்ல விஷயமா என்ன? என் துயரத்தையும், இந்த மீனின் துயரத்தையும் அது அதிகரிக்கவே செய்கிறது. என்ன, இப்போதைக்கு நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நம்மாள் மித வேகத்தில் செயல்படுகிறார். உண்மையில் அதன் நீந்து வேகம் மிக மிக அதிகம். அதை அது பிரயோகிக்கவில்லை இன்னும்.
நடப்பது என்னவோ, எதுவானாலும், சீக்கிரம் நான் இந்த டால்ஃபினைத் துண்டு போட்டு வகிர்ந்து கொஞ்சத்தைச் சாப்பிட வேண்டும். கெட்டுப்கோக விட்டுறக் கூடாது. என் உடம்புக்குத் தெம்பு தேவை. சாப்பாடு தேவையாய்த் தான் இருக்கிறது.
ம். இப்ப, நான் ஒரு ஒருமணிப் போல ஓய்வு கொள்ள வேண்டும். அதற்குமுன் மீனின் நிலவரம் மாறாமல் அதே நிதானத்தில் இருக்கிறதா, என்று பார்த்துக் கொண்டு படகின் பின்பக்கமாய் என் வேலைக்குப் போக, அடுத்த வேலையை யோசிக்க வேண்டும். அதற்குள் மீன எப்பிடி செயல்படுகிறது, அதில் எதுவும் மாற்றம் தட்டுகிறதா, அதையும் கவனிச்சிக்கலாம்.
துடுப்பைக் கடலோடு போகிறாப் போல படகோடு கட்டறது, நல்ல கோளாறு தான். ஆனால் இப்பிடி அலட்டிக்காமல் அப்பிடியே போயிட்டிருக்கிற மீன், அதைத் தாண்டி கலவரப்பட வேண்டிய வேளை, கிட்ட வந்தாகி விட்டது.
இதுவரை ஒரு சாதாரண மீனாட்டம் தான் இருக்கிறது. நம்ம கொக்கி முள், அதன் வாயின் ஓரத்தில் குத்திப் பிடிச்சிட்டிருக்கு அதை. மீன் வாயை நல்லா இறுக்கமா மூடிக்கிட்டிருக்கு. கொக்கி முள்ளின் குத்தல், அதுக்கு அது ஒரு விஷயமே இல்லைன்னு தோணுது. ஆனால், இந்தக் கொலைப் பட்டினி. அத்தோட, அதுக்கே மர்மமாய் ஒரு சிக்கல்... அதன் பாடுதான் பெரிசா இப்ப அதன் தலைக்குள்ள ஓடிட்டிருக்கும்.
சரி. இப்ப ஓய்வு எடு தாத்தா, அதுவரை அது வேலை செய்திட்டிருக்கட்டும். நீ திரும்ப எழுந்து உன் அடுத்த கடமைக்கு வரணும். அதற்குமுன் தெம்பைத் திரும்ப ஊற வைத்துக் கொள். அதற்குத் தேவை ஓய்வு.
தொ ட ர் கி ற து

91 97899 87842

No comments:

Post a Comment