Friday, August 12, 2016

THE OLD MAN AND THE SEA

பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் எஹெமிங்வே

தமிழில் எஸ். சங்கரநாராயணன்

பகுதி ஒன்பது

••
சரி. வா. நீயே என்னைக் கொல்.
யார் யாரைக் கொன்னாலும்
எனக்கு அக்கறை இல்லை!
••

லது கையை நன்றாகவே கடல் தண்ணியில் முக்கி வைத்திருந்தான். போதும் என்கிற அளவு பட்டதும், கையை வெளியே எடுத்துப் பார்த்தான்.
“ம். இப்ப தேவலை” என்றான் கையைப் பார்த்தவாறே. “வலி... ஒரு மனிதன் அதைப் பத்தியெல்லாம் அலட்டிக்கறதா?”
தூண்டிலை கவனமாக இப்போது பிடித்தான். புதிய இந்தக் காயம் எதிலும் திரும்ப உரசிறப்டாத கவனம். பாரத்தை இடம் மாற்றிக் கொண்டான். படகின் மத்த பக்கத்தில் இப்ப இடது கையை இப்பிடி முக்கிக் கொள்ளலாம், என்றிருந்தது.
“அட வேட்டை நல்ல வேட்டை இல்லியா? எதோ ஏப்ப சாப்பையான காரியத்துக்கு இத்தனை பாடு படவில்லை நீ” என்றான் இடது கையைப் பார்த்தபடியே. ”ஆனா இருந்தாப்ல இருந்து தேவைப்பட்ட சில சமயங்கள்ல நீ மக்கர் பண்ணிப்பிடுவே.”
இடதுகை வலதுகை, ரெண்டு கைகளுமே பக்காவா நினைச்ச வேலையப் பார்க்கிறா மாதிரி எனக்கு அமைஞ்சிருக்கப்டாதா, என நினைத்தான். எல்லாக் கையும் நல்ல கைதான். வலக்கை என்ன பீச்சாங்கை என்ன? அட நீ உன் தேவைக்குப் பழக்கணும். அதான் முக்கியம். நீ இடதுகையை வலதுகையைப் போல பழக்கவில்லை. அதான் விஷயம். அதுக்கெல்லாம் வேளை வரணும், சமய சந்தர்ப்பங்களும் அமையணும், அவனுக்கு அமைந்ததா கடவுளே அறிவார். ஒரு தடவை இடது கை மரத்துப் போயாச்சி. ஆனாலும் ராத்தரி சரியாத்தானே அது வேலை செய்தது? இன்னொரு வாட்டி மரத்தால்?.. சனியன் இந்தத் தூண்டிலோடு கையும் அறுத்துக்கிட்டு போய்த் தொலையட்டும்!
உடம்பு கொஞ்சம் கிறுகிறுன்னு வந்தாலும், நீ இன்னும் கொஞ்சம் அந்த டால்ஃபினைச் சாப்பிட்டு விட வேண்டும், என்று எண்ணிக் கொண்டான். ரொம்ப சாப்பிட்டு ஒத்துக்காமப் போயி அவஸ்தைப் படவும் கூடாது. அதைவிட சாப்பிடாமல் சமாளிப்பது மேல். தலையும் அத்தனை கிர்ருங்காது. குப்புற விழுந்தபோது முகத்தில் வைத்து அழுத்திய அந்த சதையை சாப்பிட்டால் குமட்டல் வரத்தான் செய்யும். உப்பு சப்பில்லாத சதைக் கதுப்பு. இப்ப சாப்பிடாமல் அவசரம் ஆத்திரம்னா பாத்துக்கலாம். அல்லது, அது கெட்டுப் போகிறவரை அதைச் சாப்பிடுவதைப் பத்தி யோசிக்கத் தேவை இல்லை. நாம இப்ப இருக்கும் நிலைமைக்கு, இனிமே தெம்பு, ஊட்டச்சத்துன்னு அலட்டிக்க முடியாது.
“அட முட்டாப் பயலே,” என்றான் தனக்குள்..“மத்த பறக்கும் மீனைத் தின்னு.”
அதோ காத்திருக்கிறது மீன். சாப்பாடு தயார். சுத்தம் செய்தாகி விட்டது. இடது கையால் அதை எடுத்தான். எலும்பையும் கடித்துச் சுவைத்து கறுக் மொறுக் என்று கவனமாய்ச் சாப்பிட்டான். முழுசாய் அதன் வால் வரை வாய்க்குள் தள்ளிக்கொண்டான்.
இந்த பறக்கும் மீன் இருக்கே, மத்த எந்த மீனைக் காட்டிலும் அது சத்தானதாக்கும், என யோசனையில் வந்தது. குறைந்தபட்சம் எனக்கு இப்ப தேவையான பலத்தை அது தர வல்லது. இப்ப இந்த சூழலில் உடம்பில் தெம்பு ஊற என்னால என்ன செய்ய முடிஞ்சிதோ அதைச் செஞ்சாச்சி.
அந்த மீன் சுழல ஆரம்பிக்கட்டும். யுத்தம் துவங்கட்டும்! நான் தயார்.
அவன் கடலில் இறங்கிய கணக்கில் மூணாவது முறையாக சூரியன் உதித்தெழுகிறான். மீன் வட்டம்போட ஆரம்பித்தது.
கயிறின் சரிவை வைத்து மீன் வட்டமடிப்பதை கணிக்க இயலவில்லை. அத்தனை சீக்கிரமே அது தெரிந்து விடாது. தூண்டில் இழையின் அழுத்தத்தில் சின்னதாய் ஒரு துடிப்பு. வலதுகையால் மெல்ல தன்பக்கமாக இறைக்க ஆரம்பித்தான். எப்போதும் மாதிரி சட்டென கயிறு சிறு விரைப்பு கொடுத்தது. புட்டுக்கும்னு இருந்த தேய்ந்த கம்பியை எட்டி அவன் பிடித்தபோது கம்பிக்கயிறு இழுத்த இழுப்புக்கு மேலே வந்தது. தலையையும் தோளையும் வைத்து அதுவரை தாங்கிக் கொண்டிருந்தவன், அவற்றை விடுவித்தான். கையால் அதைக் கையாள ஆரம்பித்தான் இப்போது. நிதானமாய்க் கயிறை மேல்நோக்கி இழுத்தான். இரண்டு கையாலும் தயிர் கடைந்தாப் போல இழுத்தான். முன்குனிந்து காலை அகட்டி வைத்துக்கொண்டு கயிறு வர வர காலால் அதை அழுத்தி பின்தள்ளி இழுத்தான். கிழட்டுக் கால்கள், தளர்ந்த தோள்கள் மாறி மாறி அசைந்து வட்டமாய் இயங்கின.
“மகா வட்டம்டா இது” என்றான். “ஆனால் அது சுத்த ஆரம்பிச்சிட்டது!”
மேலும் இழுக்க என்று கயிறு இல்லாமல் ஆன நிலையில் அப்படியே கயிறைப் பிடித்துப் பார்வையிட்டான். மேலே வந்த கயிறில் இருந்து தண்ணி துள்ளி உதிர்வதைக் காண முடிந்தது. இப்போது அந்த இழை திரும்ப உள்ளே கடலில் இறங்க ஆரம்பித்தது. கிழவன் மண்டியிட்டான். கயிறு வேண்டா வெறுப்பாகப் போல நீரில் மெல்ல மீண்டும் புகுந்தது.
“சுத்திச் சுத்தி அடியாழத்தின் ஆகப் பெரிய வட்டம் போடுது மீன் இப்போது” என்றான் அவன். இப்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கிப் பிடிக்கணும், என நினைத்தான். நாம இறுக்கிப் பிடிக்கப் பிடிக்க அந்த வட்டம் சுருங்கிட்டே சின்னதாயிட்டே வரும்.
ஆக இன்னும் ஒரு ஒருமணிப் போதில் நான் மீனைப் பார்க்கலாம், என்றிருந்தது. இப்போதைக்கு நான் அதை அமர்த்தி சௌகர்யப் படுத்துவேன்.
அப்புறம், கொல்வேன்!
ஆனால் மீன் நிதானமான வட்டங்களில் நீந்திக் கொண்டிருந்தது. கிழவனுக்கு உடம்பே வியர்வையில் நனைந்து வழிவதாய் இருந்தது. இரண்டு மணி நேரமாக எந்த மாற்றமும் நிகழவில்லை. கிழவன் எலும்பே வலிக்கும் அளவு தளர்ந்து போனான்.
மீன் மேலே வந்தபாடில்லை. என்றாலும் வட்டத்தின் விட்ட அளவு கணிசமான அளவு சுருங்கி யிருந்தது. இழைகளின் சாய்வில் தெரிந்தது. மீன் கொஞ்சம் கொஞ்சமாக தானே அறியாமல் மேல்மட்டத்துக்கு வந்து நீந்துகிறது.
இருந்த மகா அசதியில் அடுத்த ஒருமணி நேரம் கண்ணே இருட்டி வெறும் கரும் புள்ளிகளாய் எல்லாம் தெரிந்தன. வியர்வை குப்பென்று பொங்கி கண்ணில் உப்பு கரித்து எரிச்சல் தந்தது. கண்ணுக்கு மேல் பட்ட காயத்தின் கீறல் அதனுள் வியர்வை புகுந்து காந்தியது. நெற்றியில் வழிந்தது வியர்வையின் உப்புநதி.
பார்வைக் கிறுகிறுப்புக்கோ கருப்பு தட்டுவதற்கோ அவன் பயப்படவில்லை. இருந்த பிரச்னைத் தீவிரத்தில் அப்பிடி கண் மருட்டத்தான் செய்யும். சர் சர் சர்னு வேகமா தூண்டில் இழைகளை இப்பிடி அப்பிடி இழுக்கும் போது அப்பிடி கண் திகைப்பு சகஜந்தான். இருந்த வேகப் பரபரப்பில் ரெண்டு வாட்டி மயங்கி விட்டதாகவே நினைத்து விட்டான். தலை தட்டாமாலை ஆடியது. அதுதான் பிரச்னை. தானறியாமல் அப்பிடியே சாய்ஞ்சிட்டால்? மீனைச் சமாளிப்பது எப்பிடி?
“இந்த மாதிரி ஒரு மீன் சிக்கும் போது, வெறிதே கீழ விழுந்து உசிரை இழந்துற முடியுமா? அதுவும் இந்நேரம், அம்சமா மாப்ள மேல வந்திட்டிருக்கிறார். ஆண்டவரே எனக்குத் தாக்கு பிடிக்கிற வலிமை தாரும். தாக்குகிற வலிமை தாரும். நூறு நூறு முறை தந்தைக்கும், புனித மேரி அம்மைக்கும் ஜெபம் செய்வேன். ஆனால் இப்ப இல்லை, இப்ப கைவேலையா இருக்கேனே...”
சொன்னாப்ல நினைச்சிக்கணும் நீங்க, என நினைத்தான். நான் ஸ்தோத்திரம் பிறகு சொல்வேன்.
அப்பதான் ஆஹ்ஹா, அந்த இழையில் ஒரு பெரும் அதிர்வு. மகா உதறல். ரெண்டு கையாலும் இழையைப் பற்றிக் கொண்டான். சுரீரென்று இருந்தது. கடுமையான சுண்டு. கனமான கனம்.
கம்பிக் கயிறை மூக்கு எனும் கூரிய ஈட்டிகொண்டு அறுத்து விடலாம் என்று மீன் முயற்சிக்கிறது டோய், என நினைத்துக் கொண்டான். அது எதிர்பார்த்தது தான். அது அப்பிடிச் செய்து பார்த்தாகணும்.
உடனே அது துள்ளவும் செய்யலாம். அதைத் திரும்ப சுழல ஆரம்பிக்க வைக்க முடிஞ்சா நல்லது.
ஆனால் துள்ளறதும் நல்லது தான். மேலே காத்துக்கு வந்தால் செதிள்களில் காத்து சேர்ந்துக்கும். அதால ரொம்ப ஆழம் கடலுள்ளே போக ஏலாது. காத்து மெத்தையாட்டம் தூக்கிக் கொடுக்கும்.
அதே சமயம் இன்னொண்ணு. மீன் துள்ளற சமயத்தில் வாய்க் கொக்கியைத் துப்பத் தான் பார்க்கும். ஒவ்வொரு துள்ளலிலும் அதன் வாய் அதிகம் கிழிந்து தூண்டியின் கொக்கி முள், சதையில் இருந்து பிய்ந்து வெளியே வர ஆரம்பிக்கும். அது நல்லது இல்லை. அது கொக்கியை வெளியே துப்பி விடலாம்.
“ஏ துள்ளாதப்பா மீன்” என்றான். “ரொம்பத் துள்ளறே நீ. வேண்டாம்!”
மீன் கம்பியிழையை அநேகத் தரம் வந்து மோது மோதென்று மோதிப் பார்த்தது. அதன் தலை ஆட்டப்படும் ஒவ்வொரு முறையும் கிழவன் தன் கைக் கயிறைத் தளரக் கொடுத்தான்.
வலிக்கிறது அதற்கு. அதன் வாய் மேலும் கிழியாமல் ஒரே இடத்தில் வலியை உணர்வது நல்லது. என் வலியைப் பத்தி, அது பரவாயில்லை. என் வலியை நான் சமாளிச்சிக்குவேன்.
ஆனால் அதன் வலி அதைக் கிறுக்குத்தனமா எதாவது செய்ய வெச்சிரும்!
சிறிது நேரத்தில் அந்த மீன் கம்பிக் கயிறைத் தாக்குவதை விட்டுவிட்டது. அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டு திரும்ப சோர்வாய் வலம் வர ஆரம்பித்து விட்டது.
இழைகளைப் பற்றி மெல்ல மிக மெதுவாக மேல்நோக்கி வலிக்க ஆரம்பித்தான். திரும்பவும் கிறுகிறுப்பாய் மயக்கமாய் இருந்தது. இடது கையால் கடல் தண்ணீரை அள்ளி தன் தலையில் கொட்டிக் கொண்டான். உடம்பில் வழிந்தது தண்ணி. பின்கழுத்துப் பக்கம் சொறிந்து தேய்த்துவிட்டுக் கொண்டான்.

“என் உடம்பு நல்லா யிருக்கு. சுளுக்கு சுணக்கம் எதுவுங் கிடையாது” என்றான். “மீன் இப்ப கூடியசீக்கிரம் வெளிய வந்திரும். நான் சமாளிப்பேன்! ஏ நீ சமாளிச்சி ஆகணும்டா. எல்லாத்தையும் ஓட்டவாய்க்காரனா வெளிய கூவித் திரியாதே!”
கோச்சுப் பெட்டியைப் பார்க்க மண்டியிட்டான். கம்பிக் கயிறை கொஞ்ச நேரம் முதுகில் மாற்றிக் கொண்டான். அது சுத்திக்கிட்டிருக்கிற போதே நான் சிறிது ஆசுவாசப் படுத்திக்கறேன். அப்புறமாக அது மேலே வரும்போது எழுந்து நின்று வேலையைப் பார்ப்பேன், என முடிவு செய்தான்.
அப்படியே பலகை மேல் கண்மூடிக் கிடப்பது மகா தேவை போல் இருந்தது. உடம்பு தூக்கத்துக்கு ஆளைத் தள்ளியது. மீன் ஓரு சுற்று வந்தாலும், கயிறு முன்னே பின்னே அதற்குத் தேவைப்படாமல், அவனை அது தொந்தரவு செய்யாமல் தூங்க விட்டுவிட வேண்டும், என்பது எத்தனை பேரவா!
ஆனால் இழையின் துடிப்பு சொல்லியது துப்பு, மீன் படகை நோக்கி வருகிறது!
பெரியவர் திரும்ப எழுந்து நின்றார். கயிறை மேலே இழுத்தார், சரசரவென்று மேலே அத்தனை கயிறும் வந்தாப் போல. மளமளவென்று நடந்தன எல்லாம்.
இத்தனை பேரலுப்பாய் நான் உணர்ந்ததே இல்லை, என நினைத்தார். உடம்பில் தெம்பே வற்றிவிட்டாப் போல இருந்தது. இப்போது காற்று உய்யிட்டுக் கிளம்பி யிருந்தது. காற்று அடிக்க ஆரம்பித்தால் நல்லதுதான். சோலி முடிந்து நான் பாய்மரத்தை ஏத்திக்கிட்டு கரை சேரலாம் அல்லவா? காத்து அப்ப ரொம்ப அவசியப்படும்...
அதன் அடுத்த சுற்றில் இன்னும் அது கீழே போகையில் நான் ஓய்வு கொள்ளலாம், என யோசித்தார். “உடம்பு பரவாயில்லை. தெம்பு திரும்ப ஊறுது. இன்னும் ரெண்டு சுத்து மூணு சுத்து அது வரடடும். அப்புறம் நான் அதை நேருக்குநேர் சந்திப்பேன்!”
காற்று நார்த்தொப்பியை முதுகுவரை பின்னால் சரித்து விட்டிருந்தது. மீன் திரும்பியபோது பலகையைப் பார்க்க ஆளே முன் சரிய வேண்டியிருந்தது.
சுத்து. சுத்து நீயி. திரும்பி வரும்போது நான் உன்னை மேலே இழுக்கிறேன்...
கடல் மட்டம் நல்ல அளவில் இப்போது உயர்ந்திருந்தது. ஓரளவு நல்ல சீதோஷ்ண அம்சத்தின் காற்றே அது. அது வேணும். வீடடைய அது ஒத்தாசை செய்யும்.
“தெற்கு மற்றும் மேற்குப் பக்கமாக நான் படகை ஓட்டிப் போக வேண்டியிருக்கும்” என்றான் கிழவன். “ஒரு ஆத்மா கடலில் தொலைந்து விட்மாட்டான். கடல், அவனுக்கு அது ஒரு பெரிய தீவு போலத்தான்!”
*
ஒண்ணு. ரெண்டு. மூணாவது சுத்தில் தான் கிழவன் மீனைப் பார்த்தான்.
ஒரு கரிய பெரிய நிழல் படகை மெதுவாகக் கடந்தாப் போல... அதுபாட்டுக்கு முடிவே யில்லாமல் போய்க் கொண்டே யிருந்தாப் போலிருந்தது. அத்தனை நீளம். அவனால் நம்பவே முடியாத நீளம்.
“ஐயோ!” என்று கத்தினான். “இத்தனை பெரிய மீனா? இருக்கவே முடியாது1”
ஆனால் அது இருந்தது. ஒரு மேல்வட்டம், சக்கரவட்டம் அடித்துத் திரும்பியது. ஒரு முப்பது கஜம், அவ்வளவே தூரத்தில் தண்ணீருக்கு மேலே அதன் வாலைப் பார்த்தான்.
பெரிய பாய்மரத்தின் பட்டையை விட அதிக உயரமாய் இருந்தது அது. வெளிறிய கருநீல நிறம். கருஞ் சாந்தாய் இருட்டிக் கிடந்த தண்ணீருக்குமேலே படம் எடுத்திருந்த வால் திரும்ப உள்ளமுங்கிக் கொண்டது.
மேல்மட்டத்தில் சற்று முங்கிய அளவில அது நீந்தியது. பருமனான மகா பெரிய மொத்தை உருவம். ஊதா நிறத்தில் வரிகளைக் காண முடிந்தது. முதுகுச் செதிள்கள் அசையாமல் சூம்பிக் கிடந்தன. பக்கச் சிறகுகளை நன்கு பரத்தி விரித்திருந்தது மீன்.
இந்த முறை அது சுற்றி வந்தபோது அதன் கண்ணைப் பார்க்க வாய்த்தது. அந்தப் பெரிய மீனுடன், உறிஞ்சுவாய் திறந்தபடி ரெண்டு வெளிறிய சாம்பல் மீன்களும் நீந்தின. சில சமயம் அவை அதன் கூட இழைந்து ஈஷித் திரிந்தன. சிலபோது விலகிப் போயின. பெரிய மீனின் நிழல்பரப்புக்குள் இன்னும் பாதுகாப்பாக நீந்துவதாக அவை நினைத்தனவோ என்னவோ. அவை ஒண்ணொண்ணுமே மூணு அடி நீளம். அவை வேகமாக நீந்தும் போது முழு உடம்புமே நெளிந்து ஒடுங்கியது, விலாங்குமீன்கள் போல.
வியர்வை அப்பியது. அது சூரிய வெக்கையால் மாத்திரம் அல்ல. திடீரென்று இப்படி குப்பென வியர்க்கிறது. கலவரம்.
அமைதியாக அது ஒரு ரவுண்டு போய் வர அவன் கம்பி இழைகளை வாங்கிக் கொண்டான். நிச்சயமாய், அடுத்த ரெண்டே ரவுண்டில்... இந்த மீன் என் குத்தீட்டியால் செருகப்படும்!
ஆனால் அது இன்னும் இன்னும் கிட்டத்தில், அருகில், நெருக்கத்தில் வரணும், என நினைத்தான். அதன் தலைக்கு நான் குறி பார்க்கக் கூடாது. அதன் இதயம்! அதைத் தான் என் இலக்காகக் கொள்ள வேண்டும்.
“பதட்டம் வேணாம். அமைதியா சுய பலத்தோட காரியம் பண்ணணும் ஐயா!” என்று பெரியவர் சொல்லிக் கொண்டார்.
அடுத்த சுற்று. இப்போது மீன் நன்றாக வெளியே வந்திருந்தது. ஆனால் படகுக்கு ரொம்ப தள்ளி இருந்தது அது. அதற்கு அடுத்த சுற்றிலும் கொஞ்சம் தூரத்தில் தான் இருந்தது, என்றாலும் முன்னைவிட நீர் மட்டத்துக்கு நல்ல அளவில் மேலே வந்திருந்தது.
நிச்சயமா, இப்ப இன்னும் கயிறை நான் சுருக்கினால் படகுக்குப் பக்கமாக அந்த மீனை வரவழைத்து விட முடியும்!
முன்பே தயாராய் ஈட்டியை வைத்துக் கொண்டாயிற்று. ஒரு வட்டக் கூடையில் அதனோடு கூட கட்டப்பட்டு கனமில்லாத கயிறுச் சுருள். கயிறை கோச்சுப்பெட்டியின் கம்பத்தில் கட்டியிருந்தார்.
சுற்றியடித்தபடி மீன் நீந்திக் கொண்டிருந்தது. சாந்தசொரூபியாக, அழகாக இருந்தது அது. மகா பெரிய வால் மாத்திரம் தான் இப்போது அசைவு கொடுத்துக் கொண்டிருந்தது.
பெரியவர் மீனை, இருந்த பலத்தை எல்லாம் திரட்டி தன் பக்கமாய் இழுத்தார். ஒரு சிறு விநாடி அந்த மீன் அவர் பக்கமாகத் திரும்பியது. என்றாலும் திரும்ப தன் வழி தன் பாதை என்று அடுத்த சுற்றில் இறங்கியது.
“ஏ நீ அதையே அசைச்சிட்டியே, கில்லாடிதான்” என்றார் அவர். “நான் அதையே அசைச்சிட்டேன்!“
கிர்ரென்று திரும்ப மயக்கத் தள்ளாட்டமாய் இருந்தது. என்றாலும் அந்த மீனை இறுக்கமாய் தன்னால் முடிந்த பிரயத்தனத்துடன் பிடித்திருந்தார். நான் ஏற்கனவே அதை அசைச்சிருக்கேன், என உற்சாகப் படுத்திக் கொண்டார். ம். ஒருவேளை இப்ப அதை என் பக்கமாக் கொண்டு வந்திருவேன்...
இழுங்க கைகளே, என நினைத்தார். கால்களே விரைச்சி நில்லுங்க. ஒரே ஒருதரம், தலையே. கோளாறு பண்ணிறாதே. இந்த ஒரே ஒருதரம். நீ இதுவரை தப்பாக நடந்துக்கவே இல்லை. இப்ப பார். இழு!
அவர் தன் முழு பலத்தையும் தம் கட்டியபோது, அதை செயல்படுத்து முன்னால் மீன் அவருக்கு பக்கவாட்டில் அதுவே வந்தது. தன் பலம் அனைத்தாலும் அதை இழுத்தார். அது அதுபாட்டுக்கு வலது பக்கமாக, அவரைவிட்டு தூரமாய் நீந்திப் போய்விட்டது.
“மீனே?” என்று கூப்பிட்டார். “மீனே, எப்பிடியும் உன் சாவு நிச்சயமாகி விட்டது. நீ என்னையும் கொல்லணுமா?”
இந்த மாதிரித் திட்டங்கள் வேலைக்காகவில்லை, என நினைத்தார். தொண்டை உலர்ந்து கம்மிவிட்டது. அவரால் பேசவே முடியவில்லை. போத்தல் தண்ணீரை இப்ப போயி எட்டி எடுக்க அவரால் முடியாது.
அத்த விடு. இப்ப திரும்ப நான் மீனை என் பக்கவாட்டுக்கு வர வைப்பேன், என நினைவை ஒழுங்குபடுத்தினார். அது பாட்டுக்கு சுத்திகிட்டே இருக்கு. என்னால நிக்கவே, தாக்கு பிடிக்கவே முடியுமா தெரியல்ல. நிலைமை கட்டுப்பாட்டுல இருக்கணும் எனக்கு.
அதெல்லாம் இல்ல, நீ தெளிவா தெம்பா தான் இருக்கே. எப்பவும் எப்பிடி இருப்பே? இப்பவும் அப்படியே!
அடுத்த சுற்றில் கிட்டத்தட்ட மீனை அடைந்து விட்டாப் போலிருந்தது. என்றாலும் மீன் அவரை வலது பக்கமாக மெதுவாக ஊர்ந்து கடந்து போய்விட்டது.
ஐயோ, இது என்னைக் கொன்னுட்டிருக்கு, என நினைத்துக் கொண்டார். ஆனால், உன்னைப் பொறுத்தவரை அது சரியான காரியம் தான்.
இதுமாதிரியான ஒரு மகா பெரிய மீனை, மகா அழகான மீனை, சாந்தமோ சாந்தமான, உன்னதமான மீனை நான் பார்த்ததே கிடையாது. சகோதரா! சரி. வா. நீயே என்னைக் கொல். யார் யாரைக் கொன்னாலும் எனக்கு அக்கறை இல்லை!
ஏ உனக்கு என்னாச்சி, மூளை குழப்பியடிக்குது உன்னை, என நினைத்துக் கொண்டார். குழம்ப விடாதே அப்பா. மனசைத் தெளிவா வெச்சிக்கோ. ஒரு மனிதனின் பாடுகள் இவை, என இவற்றை எடுத்துக்கோ. அப்படித்தான் அனுபவிக்கணும் நீ. அல்லது, ஒரு மீன், இதைப்போல, என நினைத்தார்.
“தலையே தெளிவா இரு. கிறுகிறுக்காதே” என்று சொன்னது அவருக்கே கேட்கவில்லை. “சுதாரிக்கணும் நீ.”
அடுத்த ரெண்டு ரவுண்டும் கழிந்தது.
எனக்குத் தெரியல்ல, என நினைத்தார். ஒவ்வொரு வாட்டி அது எனக்கு டேக்கா கொடுக்கிற போதும், இவ்ளதான், இனி நமக்குத் தாளாது, என்றே திண்டாடுகிறது எனக்கு. எனக்கு என்ன நடக்குதுன்னே விளங்கல்ல... ம். இந்த வாட்டி பார்ப்பம்.
அடுத்த முறை முயற்சி செய்தார். மீனை அவரால் திருப்ப முடிந்தது. என்றாலும் அப்படியே தள்ளாடியது அவருக்கு. மீன் அதுபாட்டுக்கு அவருக்கு வலது வாட்டத்தில் மெல்ல நீந்தியது. பெரிய வாலை காற்றில் ஆட்டியசைத்துப் போனது.
இப்ப, இன்னொரு வாட்டி, தனக்குள் உறுதியளித்துக் கொண்டார். அவர் கைகள் கன்றிச் சிவந்து நடுங்கியபடி யிருந்தன. பார்வை மின்னல் போல தெறித்துத் தெரிந்தது.
மீண்டும் முயன்றார். இப்பவும் அதே விளைவுதான். ம்... என நினைத்துக் கொண்டார். இன்னொரு தடவை, என நினைக்கு முன் முன்பக்கமாகத் தள்ளாடினார்.
இருந்த வலி அத்தனையுடனும், இருந்த மிச்ச சொச்ச தெம்பை எல்லாம் திரட்டி, ஊப் என்று தம் பிடித்து, இழந்த தற்பெருமையைத் திரும்ப மனசுக்குள் திரட்டிக் கொண்டுவந்து, எல்லாமாக மீனின் துயரத்தின் முன் சமர்ப்பித்தார்.
மீன் அவர்பக்கமாக நெருங்கி வந்தது இப்போது. அவர் பக்கமாகவே அழகாக மெதுவாக நீந்தியது. அதன் உடம்பே படகை மெல்ல உரசினாப் போலக் கூட இருந்தது. மெல்ல படகைத் தாண்டிப் போக ஆரம்பித்தது.
நீளமோ நீளம். ஆழமான, அகலமான, வெள்ளி ஜ்வலிப்பான, கம்பியிழைகளைப் போல ஊதா வரிகளும், என்வென்னவோ வண்ணங்களும் நீரில் நீந்திப் போவதைக் கண் கொள்ளாமல் பார்த்தார்.
தூண்டில் இழைகளைக் கீழே விட்டார். காலால் அதை அழுத்திப் பிடித்துக் கொண்டார். ஈட்டியை தன்னால் முடிந்த அளவு அதிக உயரத்தில் ஏந்திக் கொண்டார்.
தன் வலிமை அனைத்தையும், அதற்கும் மேலேயே என்று தோன்றியது அவருக்கு, மீனின் பக்கவாட்டில் மார்புப் பக்கமான செதிள், காற்றில் மகா உயரமாய் எழும்பியிருந்தது செதிள், செதிளின் அடியில் பாய்ச்சினார். மனித மார்பு அளவான உயரம் அது படுத்த நிலையில். அந்த இரும்பு உள்ளே நுழைகிறதை உணர முடிந்தது கைகளில். முன்னே குனிந்து கொடுத்தபடி மேலும் அதை உள்ளே பாய்ச்சினார். தனது அத்தனை கனத்தையும் அதன் மேல் பிரயோகித்தார்.
மீன் இப்போது துடிதுடித்தது, சாவு, அதன் வலி, சட்டென தண்ணீரில் பெரும் எடுப்பாய் எழும்பியது. அதன் நீளம் அகலம் என தன் முழு ஆகுருதி காட்டி எழும்பியது. என்ன ஆற்றல், என்ன அழகு!
காற்றில் அப்படியே அவருக்கு முன்னால் விஸ்வரூப தரிசனம் தந்தாப் போல. அப்படியே தண்ணீருக்குள் அமிழ்ந்தது. பெரியவரின் முகத்தில் உடம்பில் என்று நீர் பீய்ச்சி யடித்தது. முழு படகிலும் நீர் சிதறியது.
உடம்பே நோய் வந்தாப் போல சுணங்கி மயக்க நிலையில் இருந்தார் பெரியவர். பார்வையே தெளிவற்றுப் போனது. ஈட்டியைக் கட்டியிருந்த இழையைக் கையில் பிடித்தார். சொரசெரவென்று அவர் கைக்குள் வழுகிப் போனது கயிறு.
பார்வையில் தெளிவு மீண்டபோது மீன் மல்லாக்க மிதந்து கொண்டிருந்தது கடலில். வெள்ளிப் பாங்கான வயிறு. மீனின் தோள் பக்கம் இருந்து ஈட்டியின் காம்பு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
மீனின் இதயத்தில் இருந்து ரத்தம் பீரிட்டு கடலில் செவ செவவென்று கலந்தது. முதலில் அது கெட்டிச்சாயமாக நீலத் தண்ணீரில் ஒரு மைல் ஆழத்துக்கு ஒரு சிவப்பு மீன் மந்தை போலக் கண்டது. பிறகு மெல்ல தளர்ந்து ஒரு மேகம் போலப் பரவியது. மீனோ வெள்ளிமயம். அதனிடம் அசைவே இல்லாமல் ஆயிற்று. அலையுடன் அது ஆடிக் கொண்டிருந்தது.
*
தொ ட ர் கி ற து

storysankar@gmail.com 91 97899 87842

No comments:

Post a Comment