Tuesday, August 9, 2016

THE OLD MAN AND THE SEA
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
மிழில் எஸ். சங்கரநாராயணன்


பகுதி எட்டு
••
அவன் தனது கிராமத்தில் தனது
படுக்கையில் படுத்துக் கிடக்கிறதாக
ஒரு மயக்க யோசனை.
••

விழிப்பு தட்டியபோது, ஒரு ரெண்டு மணி நேரம் போலத் தூங்கியிருப்பேன், என்று நினைத்தான். செப்டம்பர் மாதம். சந்திரன் மேலே வர அவசரங் காட்டாது. அதனால் இப்போது மணி என்ன என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. தூக்கம்னு எதோ. ஆமாம். அது கூட ஓய்வு என்று எப்படிச் சொல்ல முடியும். சிறிது கண்ணயர்ச்சி, அவ்வளவே.
தோளில் இன்னும் அந்த மீனின் பாரம் இருந்தாப் போலிருந்தது. ஆனால் இடது கையை கோச்சுப் பெட்டியின் மேல் திண்டில் வைத்துக் கொண்டு மெல்ல பாரத்தை தன் உடம்பில் இருந்து அதிகம் படகுக்கு என மாற்றிக் கொடுத்தான்.
பேசாமல் இந்தக் கயிறை ஒரு கம்பம் பார்த்துக் கட்டிப்பிடலாம். சுலபமான வேலை. நமக்கும் இத்தனை உடல் வலி இராது... என ஒரு கணம் தோன்றியது.
ஆனால், ஒரு சின்ன உடல் உதறல், மீன் கயித்தையே அத்துட்டு ஓடிரும். நான் என்ன பண்றேன், என் உடம்பால் அந்தத் தூண்டில் இறுக்கத்தை விரைப்பை தளர்த்திக் கொடுக்கிறேன். அப்பிடி இந்தக் கயிறு மீனை வெடுக் என்று இழுக்காமல் நான் கயிறை ரெண்டு கையாலும் தளர்த்தி அதன் இயக்கத்துக்கு சௌகர்யம் பண்ணிவிடுவேன்... கட்டி வைத்தால் அது எப்படி சாத்தியம்?
“ம் நீ இன்னமும் தூங்கவே இல்லியேப்பா, ராசா?” சத்தமாய்ப் பேசிக் கொண்டான். பாதி பகல் தாண்டி ஒரு இராத்திரியும் ஆயாச்சி. இதோ அடுத்த நாள் வருது. நீ இன்னும் தூங்கவே இல்லை. எதாவது யுக்தி பண்ணி, கொஞ்சமாச்சும் தூங்கற வழியைக் கண்டுபிடிக்கணும். தூக்கம் அவசியம் மனுசாளுக்கு. அதாவது மீன் அமைதி காத்தால், நிதானமா போயிட்டிருந்தால், நீ கொஞ்சம் தூங்கறதை யோசிக்கலாம் இல்லே? சரியான தூக்கம் இலலாட்டி மண்டைக்குள்ள தெளிவு இல்லாமல் காரியங்கள் குழம்பித் திகைச்சிரும்.”
ஏன், நான் தெளிவாத்தான் இருக்கேன். ஒரு மூளைச் சூடும் இல்லை, என நினைத்தான். ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிறேன். அதோ அந்த நட்சத்திரங்கள், அவை என் சகோதரர்கள் ஆச்சே, அவற்றைப் போல நானும் தெள்ளத் தெளிவு!
இன்னாலும் தூக்கம், அது வேண்டும் தான். நட்சத்திரங்கள் தூங்கப் போகின்றன. நிலா, சூரியன் எல்லாமும் தூங்கப் போகின்றன. சமுத்திரம்? அதுவே சில நாட்கள் அமைதியாய் உறங்கி விடுகிறது. நீரோட்டம் அற்று சலனமற்ற அமைதிகாக்கும் கடல்.
ஆமாம். உறக்கம் கொள்ள வேண்டும், என்று நினைத்துக் கொண்டான். தூக்கமது கைவிடேல். அதுக்கான வழி வகை உத்தி உபாயம் எதாவது கண்டுபிடி அப்பா. தூண்டிலைப் பராமரிக்கிற, எளிய, ஆபத்து இல்லாத செயல்வகை எதாவது பார்.
ம். இப்ப போ. போயி அந்த டால்ஃபின் சமாச்சாரத்தை என்ன ஏதுன்னு பாரு. அதைத் தயார் பண்ணு.
அத்தோட, நாம தூங்கிட்டிருக்கையில் துடுப்புகளைப் படகோடு இணைத்துக் கடலில விடறது சரி கிடையாது. அதையும் ஞாபகம் வெச்சிக்கணும்.
ஹா. நான் தூங்கமலேயே சமாளிச்சுக்குவேன், தனக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் அப்படி நானே வலிய ஆபத்தை விலைக்கு வாங்கிக்கப்டாது, எனவும் ஒரு யோசனை மறித்தது.
படகின் பின் பக்கத்துக்கு முட்டி போட்டு தவழ்ந்த வாக்கில் போனான். கொஞ்சங் கூட மீனை அசைத்து விடாத கவனத்துடன் வந்தான். அதுவுங்கூட ஒரு தூக்கக் கிறக்கத்தில் இருக்கும், என்று தோன்றியது. ஆனால், அதுக்கு நான் ஓய்வு அளிக்க முடியாது. மாட்டேன். அது சாகும் வரை படகை இழுத்துக்கிட்டே இருக்கணும்!
இடது பக்கமாச் சிறிது திரும்பி தோளடியில் தூண்டில் கயிறை முட்டுக்கொடுத்தாப் போல அமைத்துக் கொண்டான். உறைக்குள்ளிருந்து கத்தியை வலது கையால் உருவி யெடுத்தான்.
நட்சத்திரங்கள் பிரகாசமான நல்லொளி தந்து கொண்டிருந்தன. டால்ஃபினைத் தெளிவாகவே அவனால் பார்க்க முடிந்தது. அதன் தலைக்குள் கத்தியைச் செலுத்தி மீனைத் தன்பக்கமாக வெளியே இழுத்தான்.
ஒரு காலால் மீனை மிதித்துக் கொண்டான். அதன் கால் பகுதியில் இருந்து கூர்மையாய்க் கீறிக்கொண்டே கீழ்த்தாடை வரை வந்தான். கத்தியைக் கீழே இறக்கினான். வலது கையால் மீனைப் பிதுக்கிக் கொடுத்தான். உள் சரக்குகளை உதறி மீனையே கூடாக்கினான். அதன் ஈரல்களை சுத்தப்படுத்தினான். அந்த மீன் கூடு மொத்தையாய் வழுக்கியது அவன் கையில். அதையும் கிழித்துப் பிரித்தான்.
இரைப் பையையும் கிழித்தான். அவன் எதிர்பார்த்தபடி, ரெண்டு பறக்கும் மீன்கள் உள்ளே இருந்தன! புதுப் பொலிவுடன், கெட்டியாக இருந்தன அவை. பக்கத்தில் ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டான். மத்தபடி உள்ளே யிருந்த தேவையற்ற கதுப்பை, ஈரலை எல்லாம் படகுக்கு வெளியே உதறினான். ஒருவித பாஸ்பரஸ் நெடியுடன் அவை ஒளிர்வுடன் தண்ணிக்குள் முங்கின.
டால்ஃபின் குளிர்ந்து சூம்பி வெளிறி மல்லாக்கக் கிடந்தது. அதன் ஒருபக்கத்தைத் தோலுரித்தான். வலது காலால் மீனின் தலையை அழுத்திக் கொண்டிருந்தான். பிறகு அதை மறுபக்கமாத் திருப்பிக் கொடுத்து அதையும் தோலுரித்துவிட்டு, தலை முதல் வால் வரை துண்டங்கள் செய்தான்.
கூட்டு உடலத்தை வழுக்கி வெளியே தள்ளினான். நீர்ப்பரப்பைப் பார்த்துக் கொண்டான். எதும் சுழி கிழி தட்டுகிறதா என்று ஒரு நோட்டம். வழவழன்று சரிகிற மீன் கூட்டின் பளபளப்பு. தண்ணிக்குள் போய்விட்டது அது.
அந்த ரெண்டு பறக்கும் மீன்கள், அவற்றை மத்த மீன் துண்டங்களுக்கு இடையே வைத்துக் கொண்டான். கத்தி திரும்ப உறைக்குள் போனது. திரும்ப படகின் முன்பகுதிக்கு வந்தான். குனிந்த முதுகில் மேலே அழுத்திக் கிடந்தது தூண்டில் கயிறு. வலது கையில் மீன் துண்டங்களை வைத்துக் கொண்டிருந்தான்.
முன்பகுதி மேடைப் பலகையில் மீனின் எலும்பற்ற சதையைப் போட்டான். பக்கத்திலேயே அந்த இரண்டு பறக்கும் மீன்களை வைத்தான்.
இப்போது திரும்ப தூண்டிலைத் தோளின் குறுக்கே இதுவரை அழுத்தாத பகுதியில் மாற்றிக் கொண்டான். கோச்சுப் பெட்டியின் மேல் மட்டப் பலகையில் இடது கையை ஊன்றித் தாங்கிக் கொண்டான் பழையபடி. பக்கவாட்டில் குனிந்து பறக்கும் மீன்களைக் கழுவினான். கையில் தண்ணீர் பட்டு நழுவும் வேகத்தை நோட்டம் பார்த்தான். மீனை வகிர்ந்ததில் கையே மினு மினுவென்று தண்ணீரில் தெரிந்தது. படகின் வேகம், மேலும் மட்டுப் பட்டிருந்தது போலத் தெரிந்தது.. படகின் கட்டையில் கையைத் தேய்த்தான். கையில் இருந்து மீனின் எண்ணெய் மினுங்கல் தண்ணீரில் நெளிந்து ஓடியது.
நம்மாள், அலுத்துப் போனான். ஓய்வெடுக்கிறாப் போல இருக்கு” என்றான் கிழவன். “இப்ப நம்ம சாப்பாட்டு விஷயத்தை கவனிப்பம். சிறிது ஓய்வு. முடிஞ்சா சின்னத் தூக்கம்.”
நட்சத்திர வெளிச்சத்தில் கடல்பரப்பில் பயணம் நடுக்குகிற குளிராய்க் கிடந்தது. ரெண்டு டால்ஃபின் சதைக்கூறுகளில் ஒன்றை சாப்பிட்டான் அவன்.
தலையைச் சீவிவிட்டு, எலும்பு நீக்கிவிட்டு, ரெண்டு பறக்கும் மீன்களில் ஒன்றைச் சாப்பிட்டான்.
“டால்ஃபினை சமைச்சிச் சாப்பிடோணும்டா. என்னமா இருக்கும்!” என்றான் உரக்க. “அதையே இப்பிடி பச்சையாச் சாப்பிட எவ்வளவு கேவலமான ருசி! இனிப்பட்டு பாத்துக்க, உப்போ புளிச்சமோ இல்லாம கடலில் படகேறவே கூடாது தெரிதா...”
அட ஆக்கங் கெட்ட கூகையே, பகல்ல நீ பாட்டுக்கு கடல் தண்ணியை பலகைமேல கோரிக்கோரி சிந்தச்சிந்த அதுவே வெயில்ல உலர்ந்து உப்பா கக்கியிருக்குமேடா. தோணாமப் போச்சே, என்று இப்போது தோணியது. இல்லல்ல, சூரியன் அஸ்தமனம் ஆகிற நேரத்தில் தான் நான் இந்த டால்ஃபினுக்குத் தூண்டிலையே போட்டேன். அதுவரை சாப்பாட்டு யோசனையே இலலியே என்கிட்ட?
அட ஆனாலும் முன்னேற்பாடுல கோளாறானது உண்மைதானே?
நல்லா சுவைச்சி முழுங்கிட்டேன். ஒண்ணும் வாந்தி மாதிரி எதுத்து வரவில்லை, அந்த மட்டுக்கு.
வானத்தில் கிழக்குப் பக்கமாக மேகங்கள் திரள ஆரம்பித்திருந்தன. மெல்ல அவனுக்கு அடையாளம் தெரிந்த நட்சத்திரங்கள் ஒண்ணொண்ணாய்ப் பார்வையில் இருந்து மறைந்து போயின.
ஒரு மேக மூட்டத்துக்குள் தானே பொதியப் படுவது போல இருந்தது. காற்றும் அடங்கி யிருந்தது.
“இன்னும் மூணு நாலு நாளில் பருவம் மோசமாகும்!” என்றான் அவன். “ஆனால் இந்த ராத்திரிக்கோ, நாளைக்கோ பழுதில்லை. மீன் நிதானம் விலகாமல் போகிறது, அமைதியாய். உன்னால் சிறிது தலையைச் சாய்க்க முடியுமா பார்...”
தூண்டிலை வலது கையில் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டான். தொடையை வலது கைக்கு முட்டுக் கொடுத்தான். அப்படியே குப்புற தனது அத்தனை பளுவையும் பலகையில் கிடத்தினான்.
பிறகு தூண்டிலைத் தோள் பக்கமாக இன்னும் சிறிது தாழ்த்திக்கொண்டான். இடது கையை அதன்மீது மூடிக் கொண்டான். இடது கை கயிறுநழுவினால் சொல்லும். வலது கை உடனே கயிறைப் பற்றிக் கொள்ளும்.
மீன் இப்போது சமாதானமாய்த் தான் இருக்கிறது. அது துடிப்புற எதுவும் செய்ய ஆரம்பித்தால் இடது கைக் கயிறு துறுதுறுக்கும். எனக்கு தகவல் சொல்லி என்னை உசுப்பி விட்டுவிடும் அது. வலது கை நிறைய வேலை செய்து காய்ப்பேறி விட்டது. ஆனால் கடுமையான வேலைகள் செய்து அதற்குப் பழககம் உண்டு.
ஒரு இருபது நிமிடம், அரை மணி நேரம், கோழித்தூக்கம் கிடைத்தால் கூட நல்லது. அப்படியே குப்புறவாக்கில் தூண்டில் கயிறு முடிச்சு மேலேயே வலது கைக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் படுத்து உறங்கிப் போனான்.
கனவு, அதில் சிங்கங்கள் என்றெல்லாம் இல்லாத உறக்கம். இப்போதும்
கனவு வந்தது. எட்டு மைல் பத்து மைல் கடல் பரப்பில் மந்தை மந்தையாய் பார்ப்பாஸ்களைக் கண்டான். அது அவற்றின் சல்லாபப் பருவம். உல்லாசமாய் அவை காற்றில் எழும்புவதும், அது எழும்பியதில் விழுந்த அதே குழியில் திரும்ப ப்ளக் என்று இறங்குவதுமாய் இருந்தன.
அவன் தனது கிராமத்தில் தனது படுக்கையில் படுத்துக் கிடக்கிறதாக ஒரு மயக்க யோசனை. ஜிலுஜிலுவென்று வாடைக் காத்து வீசி வளைய வருகிறது. அவனுக்கு உடம்பே குளிரில் நடுங்கியது.
தலையணை இல்லை. வலது கையையே தலையணை போலும் முட்டு தந்திருந்ததில் வலது கையே ரத்தம் சுண்டி மரத்து செயல் இழந்து உறங்கிக் கிடந்தது.
அதற்குப்பிறகு, ஆ, அந்த நீளப் பரந்த மஞ்சள் கடற்கரை வளாகம் வந்தது. வைகறையின் இருள் விலகாத நேரத்தில் சிங்கங்களில் ஒன்று முதலாவதாக மெல்ல தலை காட்டியதைக் கண்டான். அப்புறம் ஒவ்வொரு சிங்கமாக மத்தவை கிளம்பி வந்தன.
கோச்சுப் பெட்டியின் மேல்பலகையில் நாடியை அழுத்தியவாறு குப்புறக் கிடந்தான் அவன். கப்பல் நங்கூரமிட்டு நிற்கிறது. அது மாலை நேரம். கடல்காற்று. படுத்தபடி அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் சிங்கங்கள் வருமா?
சந்தோஷமான தருணங்கள்.
சந்திரன் மேலே வந்து வெகு நாழிகை ஆகியிருந்தது. அவன் தூக்கம் கலையாமல் கிடந்தான். மீன் வண்டி சரளமாய் ஓடிக் கொண்டிருந்தது. மேக குகைக்குள் நுழைந்து ஓடிக் கொண்டிருந்தது படகு.
வலது உள்ளங்கையில் ஒரு சுண்டு, உதறல் தட்டியது. முகம் வரை ஒரு எகிறல். வலது கையே கயிறின் உறுத்தல் தாளாமல் எரிந்தது. இடது கை, அதில் இந்த எகிறல் உணரப்படவே இல்லை. ஆனால் தன்னால் முடிந்த விரைவுடன் வலது கை வழியாக கயிறை உள்ளே தாழ அனுப்பினான்.
ஒரு வழியாக இடது கை தூண்டிலைத் தேடித் துழாவிப் பிடித்தது. தூண்டிலின் மேலேயே குனிந்து அமுக்கிக் கொண்டான். சரசரவென்று கயிறு இறங்கியதில் முதுகும் இடது கையும் எரிச்சல் எடுத்தன.
எல்லா அழுத்தத்தையும் இடது கையில் வாங்கிக் கொண்டான் இப்போது. இடது உள்ளங்கையே அறுபட்டாப் போல வலியெடுத்தது. பின் திரும்ப கயிறுக் கண்டில் இன்னும் எவ்வளவு கயிறு மிச்சம் இருக்கிறது, என்று பார்த்துக் கொண்டான். மேடாய்த் தெரிந்தது. அதுபாட்டுக்கு சரசரவென்று நழுவி கடலுக்குள் இறங்கிய வண்ணம் இருந்தது.
ஆனால் அப்போதுதான் அந்த மீன் சரேலென்று கடலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி கடல்மட்டத்துக்கு மேலே எகிறியது. தண்ணீர்க் கோபுரம். அப்படியே தொம்மென்று கனமாய்த் திரும்ப உள்ளே விழுந்தது. பிறகு திரும்பவும் திரும்பவும் மேலே துள்ளியது. தூண்டில் இழைகள் இன்னுமாய் உள்ளே சென்று கொண்டிருந்தன, என்றாலும் படகு மகா வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.
கிழவன் இப்போது திரும்ப கயிறைத் தன் பக்கமாக இறைத்து மீனைக் கீழே இறங்கவிடாத அளவில் கயிறே அறுந்து விடும் அளவில் பற்றி இழுத்துக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப கயிறை சிறிது நழுவ விட்டு மீண்டும் தன் பக்கம் இழுத்தபடி இருந்தான்.
அவனே முன்னால் கோச்சுப் பெட்டி பலகை மேல் விழுந்திருந்தான். டால்ஃபினின் உண்ணப்படாத மீதிச் சதை, அதன் மேலேயே விழுந்திருந்தான். முகம் எங்கும் டால்ஃபின் நிணம் அப்பிக் கொண்டது. அப்படி இப்படி அசைய முடியாமல் கிடந்தான்.
ம். இந்தக் கணம், இதற்கு தான் காத்திருந்தோம், என நினைத்தான். அந்தக் கண்ம், முகூர்த்தம் வந்தே விட்டது!
நான் இழந்த தூண்டில் கயிறுகள். இதுதான் அதைத் திருப்பித் தர வேண்டும். தந்தாக வேண்டும். நான் வசூல் செய்வேன்.
மீனின் துள்ளல் தட்டுப்படவில்லை. என்றாலும் கடலின் கொந்தளிப்பு தெரிந்தது. நாலா பக்கமும் சிதறித் தெளிக்கும் தண்ணீர். பெரும் சத்தம். நீர்ச் சிதறல். உள்ளே மீன் இருக்கலாம். கயிறு இங்கும் அங்குமாக இழுபடுவது விரலை அறுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இது இதுமாதிரிதான் ஆகும், அது அவனுக்குத் தெரியும். உள்ளங்கை, மற்றும் விரல்களில் அதிகம் அறுத்துவிடாதபடி மத்த கெட்டித் தோல் பகுதிகளையே கயிறை இழுக்க தளரவிட என்று பயன்படுத்த முயன்றான்.
ஆ பையன் மாத்திரம் இப்ப இருந்தால்?... ஹா. வெலவெலத்து இந்தக் கண்டிலேயே ஒண்ணுக்குப் பேஞ்சிருப்பான்! ம். ஒருவேளை தண்ணீர் ஊற்றி கயிறை கைப்பதத்துக்கு மென்மையாக்கித் தருவானாய் இருக்கும். பையன் கூட இருந்திருந்தால், இருந்திருந்தால்... என படபடப்புடன் உதவி இல்லாததை நினைத்துக் கொண்டிருந்தான் கிழவன்.
மெல்ல மெல்ல கயிறு கடலுக்குள் தளரத் தளரப் போனபடி யிருந்தது. மீனுக்கு அங்குலம் அங்குலமாக கயிறை அளித்தான் அவன். ரொம்ப தளர விட்டுறவும் கூடாது.
இப்போது தலையை நிமிர்த்திக் கொள்ள முடிந்தது. இவன் விழுந்ததில் அந்த டால்ஃபின் சதையே சப்பளிந்து சந்தனமாய் அரைபட்டிருந்தது. மெல்ல முட்டி போட்டான். அப்படியே மெல்ல எழுந்து கொண்டான். என்றாலும் கயிறைக் கொடுத்துக் கொண்டே, இப்போது மிகவும் மெதுவாக அதைச் செய்தான்.
இரவு நேரம். கண்டுகள் இருக்கிற இடத்தையே காண முடியாதிருந்தது. காலால் துழாவி கண்டுகளை அறிந்தான். இன்னும் கைவசம் நிறைய இருக்கிறது, இருக்கிறது. இப்போது மீன் அந்த அத்தனை கயிற்றின் உரசலையும், கனத்தையும் சமாளிக்க வேண்டும். அதையும் சேர்த்து இழுக்க வேண்டும்.
மீன் மேலும் ஆழத்துக்குப் போயிருக்கலாம். ரொம்ப அதை அவன் அனுமதிக்கவில்லை. அந்தக் கயிறின் கனம், அதைத் திரும்ப மேலே வர வைக்கும், என்றிருந்தது.
ஆமாம், என நினைத்துக் கொண்டான். இதுவரை ஒரு டஜன் வாட்டிக்கு மேல் மீன் துள்ளிப் பார்த்திருக்கிறது. செதிள்கள் உள்ளேயெல்லாம் காற்றை நிரப்பிக் கொண்டிருக்கும் அது. கடலின் ரொம்ப ஆழத்துக்கெல்லாம் இனி அது போக முடியாது. அவ்வளவு ஆழம் போய் அது சாக, என்னால் அதை மேலே தூக்க இயலாமல் போக... அப்பிடி அம்சங்கள் இனி இல்லை.
இனி என்னாகும், மேலே துள்ளாமல், அப்படியே உள் வட்டமாக அது திரிய ஆரம்பிக்கக் கூடும். அப்ப நான் அதைச் சமாளிக்கிறாப் போல எதும் நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.
அதுசரி, எல்லாம் நல்லபடியாத் தானே போயிட்டிருந்தது? திடுதிப்னு என்னாச்சி அதுக்கு? திடீர்னு அதை இந்த மாதிரி மேலே துள்ள வைத்தது எது? பசி பட்டினியா இப்பிடியே போயிட்டிருக்குதே, அதுனால, என்னாங்கடா இதுன்னு கிளர்ச்சி யடைந்திருக்குமா? அல்லது இந்த ராத்திரியில் உள்ளே எதைப் பார்த்தாவது, அல்லது உள் மனசில் எதோ சரியில்லை என கலவரப் பட்டிருக்குமா?
திடீர்னு பயம் அதை உலுக்கி யிருக்கவும் கூடும். ஆனால் அது ரொம்ப பலசாலி. அமைதியான மீன் தான். பயத்தை அது அறியாதது போலத்தான் இருந்தது. நம்மள மீறி என்னாயிரும்னு ஒரு நிமிர்வுடன் தான் இருந்தது. விநோதமான அருமையான மீன்.
“பெரியாம்பளை,” என்று தன்னையே அழைத்துக் கொண்டான். “நீயும் அப்படி இருக்கணும். பயம் இருக்கவே கூடாது உனக்கு. நம்பிக்கையா வேலை பாக்கணும். சரியா?”
“இப்ப அந்த மீனை நீ பிடிச்சிவெச்சிக் கிட்டிருக்கிறாய். ஆனால் அதனிடமிருந்து கயிறை மீட்க முடியவில்லை. அதாவது அதை உன்னால் மேலே இழுக்க முடியவில்ல. அதனாலும் கீழே போக வாட்டம் இல்லை. இனி அது சுத்தி அடிக்க ஆரம்பிச்சிரும் சீக்கிரமே.”
இடது கையால், தோளால் கயிறைப் பிடித்தான் அவன். அப்படியே கொந்தளிக்கும் கடல் தண்ணியில் முகத்தை நனைத்தான். முகத்தில் டால்ஃபின் சதைத் துளிகள் அப்பி யிருந்தன. வலது கையால் முகத்தைத் துடைத்து அந்த சதையை வழித்தெறிந்தான். துடைத்தெறியா விட்டால், மூக்கில் அது பாட்டுக்கு நமைச்சல் தும்மல் என்று ஆரம்பிச்சிருமோ என்று இருந்தது.
வாந்தி கீந்தின்னு ஆரம்பிச்சிட்டா, இருக்கிற தெம்பும் போயிட்டா வம்பு. முகத்தை நன்றாகத் துடைத்து அலம்பிக் கொண்டபின் வலது கையை நன்றாக படகின் பக்கவாட்டில் அலசினான். அப்படியே கையை உப்புத் தண்ணியில் வைத்துக் கொண்டான்.
சூரிய உதயத்துக்கு முந்தைய முதல் வெளிச்சக் கசிவைப் பார்த்தான் அவன். ஆமாம், அவன் முழுசாய் கிழக்குவசமாக வந்துவிட்டிருந்தான்.
அப்படின்னால் என்ன அர்த்தம்? மீன் களைத்திருக்கிறது. இப்போது அது நீர்ப்போக்கோடு போகிறது!
இனி அது சுத்திச் சுத்தி வர ஆரம்பித்து விடும்...
இனிமேல்ப்பட்டுத் தாண்டா உனக்கு நிசமா வேலையே ஆரம்பிக்குது!

தொ ட ர் கி ற து

91 97899 87842 storysankar@gmail.com

No comments:

Post a Comment