Friday, August 19, 2016

The old man and the sea
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்


பகுதி பதினொன்று
••
ஒரு மனிதனை அழித்து
விடலாம். ஆனால் அவனைத்
தோற்கடிக்க முடியாது!
••

வனது மீன் இப்போது கடித்துக் குதறப்பட்டு விட்டது. அதைப் பார்ப்பதையே அவன் தவிர்க்க விரும்பினான். ஐயோ சுறா அதைத் தாக்கிய போதே அவன் தானே தாக்கப் பட்டாப் போல உணர்ந்தான்.
ஆனால் என்மீனைத் தாக்கிய அந்த சுறாவை நான் கொன்று விட்டேன்!... என்று நினைத்தான். சாதாரண சுறாவா அது? நான் பார்த்த தென்தூசோக்களிலேயே*** (**  ஸ்பானிய மொழியில் தெத்துப்பல் ஆத்மா) மகா பெரிய சுறா அது.
கடவுளே அறிவார், நான்தான் எத்தனை பெரிய பெரிய மீன்களைப் பார்க்கிறேன்! ஊருக்குப் போய்ச் சொன்னால் யாரும் நம்புவார்கள், என்றே சொல்ல முடியாது.
அதை எதிர்த்து செயிப்பதாவது, என்று அவனே நினைத்தான். ஆனால் செயித்தேனே. யார் நம்புவார்கள்? நானே நம்பவில்லை.
இதுவே கனவாட்டம் தான் காணுகிறது. எனக்கு என்னவோ, நான் தூண்டில் இரையைக் கூட கொக்கியில் இடாமல், என் கட்டிலில் செய்தித்தாள்கள் மேல் அனந்த சயனத்தில் இருக்கிறேனா இப்போது?
“ஆனால் மனிதன்!... அவன் தோற்கப் பிறந்தவன் அல்ல!” என்றான். “ஒரு மனிதனை அழித்து விடலாம். ஆனால் அவனைத் தோற்கடிக்க முடியாது!”
இன்னாலும், அந்த மீனை நான் கொன்னுட்டது, மன்னிப்பு கேட்க வேண்டிய சமாச்சாரம் தான், என நினைத்துக் கொண்டான்.
இப்போது, இனி... கெட்ட நேரம் ஆரம்பிக்கிறது. என்னிடம் கைவசம் ஈட்டி கூட இல்லாமல் ஆயிற்று.
தென்தூசோ கொடூரமானது. திறமையானது. பலமானது. அறிவானதும் கூட. ஆனால் அந்த சமயம், நான் அதைவிட மேதமையைக் கையாண்டேன்!
ம்ஹும், என்று தன்னையே மறுத்துக் கொண்டான். என்ன, என்கிட்ட அதனிடம் இருக்கறதை விட நல்ல ஆயுதம் இருந்ததோ என்னவோ? தென்தூசோ இறந்து விட்டது. நான் ஜெயித்தேன்.
“அதெல்லாம் இப்ப எதுக்கு வாத்தியாரே!” என்று சத்தமாய்ச் சொன்னான். “பேசாம படகில் போயிட்டே இரு. யோசிக்க வேணாம். வர்றது வரும்போது வரட்டும்.”
இல்லல்ல, யோசிக்கமால் எப்படி, என நினைத்தான். என்னிடம் இப்ப மிச்சமா வேற என்ன இருக்கு? கொஞ்சம் யோசனை. அப்பறம் ஆமாம், கழிப் பந்தாட்டம் பத்தி எதாவது நினைவில் பீராயலாம்.
சுறாவை மூளையிலேயே தாக்கினேனே, சூரன் டிமாகியோ அதைப்பத்தி என்னமாதிரி பாராட்டுவான்?
ச். அதொண்ணும், பெரிய சமாச்சாரமா என்ன?... என நினைத்தான். அதை எவனும் செய்துருவான். ஆனால், ஏ நீ என்ன? எலும்புக் குத்து, அத்தோட ஒருத்தன் சாதிக்கிறான். என் கையின் சிராய்ப்புகள், அதுவும் எலும்பு வலியும் ஒண்ணா என்ன?
அட யாருக்குத் தெரியும்? எனக்கு குதி எலும்பில் கோளாறு எதுவும் வந்ததே இல்லையே. ஒரே ஒருமுறை ஒரு நட்சத்திர மீனைத் தெரியாமல் ஏறி மிதித்து விட்டேன் நீந்திப் போகையில், காலே முட்டிக்குக் கீழே சுளுக்கினாப் போல ஆயிட்டது. வலின்னா அப்பிடி ஒரு தாளமுடியாத வலி.
“அட என்னப்பா நீயி, எதாவது உற்சாகமா நினைச்சிக்கக் கூடாதா?” என்று சொல்லிக் கொண்டான்.
“இங்க பார். நீ ஒவ்வொரு நிமிஷமா உன் வீட்டை நோக்கி நகர்கிறாய்! நீ இழுத்துட்டுப் போறியே, அந்த எடையில், நல்ல விசயம் அப்போவ், இப்ப ஒரு நாற்பது பவுண்டு கம்மி ஆயிட்டது!”
நீரோட்டத்தின் உட் பகுதிகளில் கடந்து போகும்போது என்னென்ன நடக்கும், எல்லாம் அவன் அறிவான். ஆனால் அதுகுறித்து அவன் 'இப்போது' செய்வதற்கு எதுவும் இல்லை தான்..
“எதுவுமே இல்லையா? ஏன் இல்லாமல்? இருக்குது,” என்று கூவினான். “நானே புதிய ஆயுதத்தை ஏற்படுத்திக் கொள்வேன். என் கத்தி, அதைத் துடுப்புடன் இணைத்துக் கட்டிக் கொள்வேன்!”
பாய்மரத்தின் சுக்கான் திருகியைப் பிடித்துக் கொண்டு அதன் துணியைக் காலில் மிதித்து தேவைக்குக் கிழித்தபடி படகோடு கத்தியைப் பிணைத்துக் கட்டிக்கொண்டான்.
“இப்போ?” என்று சொல்லிக் கொண்டான். “இப்பவும் நான் வயசாளி தான். ஆனால் என் கையில் இருக்கிறது ஆயுதம்!”
புத்துணர்வுடன் வீசியது காற்று. பயணம் சுகமாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. தான் வேட்டையாடிய மீனின் முன்பகுதியை மாத்திரம் பார்த்தபடி வந்தான் அவன்.
மெல்ல தன்னைத் தேற்றிக் கொண்டு வர வேண்டி யிருந்தது.
நம்மளை நம்மளே நம்பாமல் எப்படி அப்பா, என நினைத்தான். நல்லது நடக்கும்ன்ற நம்பிக்கை இல்லாமல் வாழறதே பாவம் இல்லியா?... பாவங்களைப் பத்தி இப்போ நினைக்க வேண்டாம், எனத் தோன்றியது.
பாவத்தை விட, இங்கே போதுன்ற அளவு பிரச்னைகள் இருக்கின்றன. தவிரவும், பாவம்னா என்னப்பா? அது பத்தி எனக்கு எதுவும் புரியறது இல்லை.
,இந்த பாவ புண்ணிய சமாச்சாரம் எனக்கு விளங்கறதும் இல்லை. நான் அதை நம்பறதுங் கிடையாது. ஒரு மீனைக் கொல்வது, ம், ஒருவேளை அது பாவந்தானோ என்னவோ? நான் பிழைத்திருக்கவும், நிறைய மத்த மனுசாளுக்கு உணவு எனவும் நான் அதைக் கொன்றிருக்கலாம்.. என்பதால் அது பாவம் இல்லை, என்று சொல்லிற முடியாது.
அப்பிடில்லாம் பாக்க முடியாது. அப்பறம் எல்லாக் காரியமுமே பாவக் கணக்கில் வந்துரும்.
இப்ப பாவம் பத்திய யோசனை என்னத்துக்கு? வேணாம். கதையெல்லாம் முடிஞ்சாச்சி. இப்ப அதைப் பத்தி யோசிக்கறது சரி கிடையாது.
சில பாவ காரியங்களைச் செய்யவே கூலி கொடுக்கவும் ஆள் இருக்கு. காசுக்காக, காசு வாங்கிக்கிட்டு பாவம் செய்றாங்களே, அவங்க யோசிக்கலாம் பாவம் பத்தி.
இங்க பார். நீ மீனவன். மீனவனாகப் பிறந்திருக்கிறாய். இந்த மீன் மீனாகப் பிறந்திருக்கிறதே, அதைப் போலத்தான். மீனவன் மீன்பிடிக்க பாவம் பார்க்கலாகாது!
சான் பெத்ரோவும் மீனவன் தான். சூரன் டிமாகியோவின் அப்பா, அவனும் தான் மீனவன்...
நினைவு பிடி நழுவி எங்கெங்கோ அலைகிறது. தன் சார்ந்த எல்லா விஷயங்களையும் அலசி அசைபோட்டுப் பார்க்க விரும்பினான் கிழவன். ஒரு செய்தித்தாளோ, புத்தகமோ துணை, என்று இல்லை. வாசிக்க எதுவும் இல்லை. வானொலிப் பொட்டியும் கிடையாது. மனசு என்னமாச்சிம் மாத்தி மாத்தி யோசனையில் ஊடாடிக் கொண்டே வந்தது.
பாவம் பத்தி திரும்பத் திரும்ப எதாவது நினைவு ஓடியது.
கொன்னா பாவம் தின்னா போச்சு!
மீனைக் கொல்லுகிறோமே, அது நம்ம வாழ்க்கைக்காகவா, அல்லது பிறத்தியாருக்கு உணவு என்பதற்காகவா? அவ்வளவுதானா, என்று யோசித்தான். உனக்கு அதை வேட்டையாடுவதில் ஒரு திமிரார்ந்த பெருமை. நீ மீனவன். உனக்கு இப்படி மீனைப் பிடித்து வருவதில் ஒரு கெத்து, குஷி இருக்கிறது. அது, அந்த நிமிர்வு உனக்கு வேண்டியிருக்கிறது!
மீனை அது உயிரோடு இருக்கையில் நீ நேசிக்கிறாய். அது இறந்த பின்னும் நேசிக்கிறாய் அதை. அதைத்தான் நீ விரும்புகிறேன் என்கிறாயே? அப்படி விரும்பியதைக் கொல்வது? அது பாவம் இல்லையா? பாவத்தை விட பெரிய வார்த்தை கூட அதற்குச் சொல்ல வேண்டும்!
“ரொம்ப மனசை ஓடவிடறே வாத்தியாரே!” என்று உரக்கப் பேசினான்.
இந்த மீனை விடு, அந்த தென்தூசோ, அதை நீ ஆனந்தமாய்ச் சாவடித்தாய். அதுவும் உயிர்ப்புடன் மத்த மீனாட்டம் கடலில் வாழ்கிறது. அது ஒண்ணும் அழுகிய மிச்ச சொச்ச நிணத்தைப் பொறுக்கித் தின்கிற தோட்டி இல்லை. மேக் வகை மீன்கள், மத்த சுறாக்களைப் போல எது கிடைச்சாலும் பசி பசின்னு அலையிற இனமுங் கிடையாது.
மேக் அழகான இனம். உத்தமமான இனம். அதுக்கு எதையிட்டும் கிஞ்சித்தும் பயம் கிடையவே கிடையாது.
“அது சரிடா. நான் அதைத் தற்காப்புக்காகத்தானே கொல்ல வேண்டி வந்தது?” என்று கத்தினான். “என்ன அருமையான முறையில் கொன்னேன்?”
அதைவிட, என்று யோசனை நீண்டது. இந்த லோகத்தில் எந்த உயிரும் மத்த உயிரைக் கொல்லவே செய்கிறது, எதோ விதத்தில். இந்த மீன்பிடி தொழில், என்னை எவ்வளவு வாழ வைக்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத அளவில் சாவடிக்கிறது, இல்லையா?
ஆனால் அவ்வளவுதானா? எல்லாமே நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தானா என்ன? அந்தப் பையன், அவன் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கவில்லையா? அவனால் எனக்கு என்ன தொந்தரவு? எதுவும் இல்லை.
சும்மாங்காட்டியும் உன்னை நீயே வருத்திக்கக் கூடாது அப்பனே...
முன் குனிந்து மேக் கடித்துப் போன சதையின் ஒரு விள்ளலைப் பிய்த்தான். அதன் சதைத் தரத்தை நல்ருசியை நன்றாகச் சுவைத்து உணர்ந்தான். இறுக்கமாவும் ரசம் ஊறினாப் போலவும் வாய்க்குள் ருசித்தது. மாமிசம் தான். ஆனால் சிவப்பு தட்டவில்லை அதில்.
பதமான தசை தான். சந்தையில் மிக அதிக விலை போகும், என்றிருந்தது. ஆனால் தண்ணியில் இருக்கும் வாடை, கூடவே காற்றில் வரும் அதன் வாடை. அதைத் தவிர்க்க வழி இல்லை. அதனால்... அவனுக்கு நன்றாகத் தெரிகிறது.
கடுமையான தருணங்கள் காத்திருக்கின்றன
காற்று நிதானமாய் வளைய வந்தது. வடகிழக்கு வசத்தில் அது மேலும் பின்வாங்கிக் கொண்டிருந்தது. அடங்காமல் ஒடுங்காமல் அப்படியே வீசியபடி பயணத்துக்கு ஒத்தாசையாய் இருக்கும்,.. என அவனுக்குத் தெரியும்.
தன் முன்வாட்டத்தில் கிழவன் தேடிப் பார்த்தான். படகு எதுவும் இல்லை. எந்தப் பெரிய கப்பலின் முக எடுப்பும் தட்டுப்படவில்லை. எதுவும் கப்பல் அந்தப் பக்கமாகப் போனால், அதன் நீராவிப் புகை வரும். அது கூட காணவில்லை.
படகின் முன் பகுதியில் பறக்கும் மீன்கள்தான் இடது வலது பக்கங்களில் துள்ளிச் சிதறின. மஞ்சள் நிற கல்ஃப் பாசி மிதந்து கொண்டிருந்தது.
அட, பறவை ஒண்ணு கூட கண்ணில் படவேயில்லை.
ஒரு ரெண்டுமணி நேரம் போல இப்படியே போய்க் கொண்டிருந்தான். படகின் பின்வசத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். அப்பப்ப அந்த மார்லின் மீனைக் கொஞ்சம் விண்டு சுவைத்தான்.
ஓய்வு முக்கியம். அப்பதான் திரும்ப பலத்தைத் திரட்டி வேலை செய்ய முடியும்.
ஒன்றாக வந்தன இரண்டு சுறாக்கள் அவற்றில் முதலாவதை அவன் எதிர்கொள்ள நேர்ந்தது இப்போது.
”ஏய்!” என்று கூச்சலிட்டான். அந்த உணர்ச்சித் தெறிப்பை மொழியில் மாற்றம் செய்ய இயலாது. தானறியாமல் கலவரத்தில் வாய் உதிர்த்த ஒலி அல்லது வலி. பலகையில் அவன்கையைப் பிடித்துவைத்து ஆணி இறக்குகிறாப் போன்ற வலி அது.
“கலனோக்கள்!” என்று கூச்சல் இட்டான். முதல் செதிளைத் தாண்டி பின்னால் இதோ ரெண்டாவது செதிள் கிளம்பி மேலே வருகிறதைப் பார்த்தான். மண்வாரியாய் பழுப்பு மூக்கு கொண்ட சுறாக்கள் அவை... என அடையாளம் கண்டுகொண்டான். துடுப்புகள் முக்கோணமாய் இருந்தன. வாலால் நீரை அளைந்து பெருக்கியபடி வந்தன அவை.
ரத்த வாடை எட்டி அவை பரபரப்புடன் மேலே வந்திருந்தன. இருந்த பசியினால் அந்தப் பரபரப்பில் அவற்றுக்கு வாடையே எட்டாமல் திண்டாடின, என்றாலும் இரையை, இந்த மீனை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தன.
பெரியவர் தயாரானார்.
பாய்மரத்துணிக் கிழிசலை சுக்கான் திருகியால் இறுக்கிக் பிடிக்க வசதியாய்ப் பொருத்திக் கொண்டார். இப்போது கத்தியைக் கட்டிய துடுப்பினை இத்துடன் சேர்த்துக் கட்டிக் கொண்டார்.
முடிந்த அளவு லகுவாக அதை உயர்த்திக் கொண்டார். கைகளில் அபார வலி இருந்தது. மேலே கையைத்தூக்க அவை ஆட்சேபித்தன.
விரல்களால் அந்த ஆயுதத்தைப் பிடித்தும் நெகிழ்த்தியும் கையை வேலைக்கு ஏதுவாகக் கொண்டுவர முயன்றார். அந்த வலியில் அந்த அழுத்தம் கைக்குப் பழக வேண்டும், என்கிற சிறு பயிற்சி.
பிறகு படகை நோக்கி சுறாக்கள் வருவதைக் கவனிக்கலானார். பரந்த தட்டையான மண்வாரித் தலைகளைப் பார்க்க முடிந்தது. பக்கவாட்டு செதிள்கள் ஓரங்களில் வெண்மைப்பாடாய்க் கண்டன.
வெறுப்புக்குரிய சாதி அவை. மோசமான நாற்றம் பிடித்த சுறாக்கள். கிடைத்தது எதுவானாலும் வர்ஜியா வர்ஜியம் இல்லாமல் முழுங்கும் தோட்டிகள். மனுசாளைக் கொல்ல வல்லவை அவை. பசியாயிட்டால், துடுப்பைக் கூட, படகுப் பலகையைக் கூட விட்டு வைக்காது.
இந்த சுறாக்கள் தான், மேல்மட்டத்தில் ஆமைகள் தூங்கிக் கொண்டிருக்கையில் வந்து அவற்றின் கால்களையும், நீந்த உதவும் ஜவ்வுச் சதைகளையும் கவ்விக் கொள்ளும். தண்ணீரில் மாட்டிய மனிதனைப் பாய்ந்து தாக்கி விடும். பசித்த பொழுதுகளில், மனிதனிடம் மீன் வாடையோ, மீனின் ரத்த வாடையோ இல்லா விட்டால் கூட பாய்ந்து கதறக் கதறக் குதறி விடும்.
”ஏய்!” திரும்ப கூவினார் பெரியவர். “கலனோக்களே, வாங்க கலனோக்களே.”
வந்தன. ஆனால் மேக் வந்ததே அதைப்போல வரவில்லை.
ஒன்று திரும்பி படகுக்கு அடியில் போய் முட்டியதில். படகே கிடுகிடுவென்று ஆட்டம் கொடுத்தது. அப்படியே கீழ் நிலையிலேயே அது துள்ளி மீனை இழுத்துக் கடிக்கப் பார்த்தது.
மத்தது நீள்துவாரம் போன்ற மஞ்சள் நிறக் கண்களுடன் பெரியவரைப் பார்த்தது. பின் வேகமாக முன்னேறி வந்தது. தாடை பாதி வட்டமாய் அகலவாக்கில் விரிய எட்டி வந்தது. மீன் ஏற்கனவே கடிபட்ட பகுதிக்குக் குறி பார்த்திருந்தது அது.
அதன் பழுப்பு நிற மண்டையில், அதுவும் தாண்டிய முதுகுப் பிரதேசத்தில் கோடுகள் தெளிவாய்த் தெரிந்தன. மூளையும் முதுகுத் தண்டும் சேரும் அந்த இடத்தை அவரால் அடையாளங் காண முடிந்தது. அந்தப் பகுதியைக் குறி பார்த்து கத்திகட்டிய துடுப்பைச் செலுத்தினார். ஒரு குத்து. திரும்ப வாங்கிக்கொண்டார். இப்போது  பூனையுடையதைப் போன்ற அதன் மஞ்சள் கண்ணில் பாய்ச்சினார்.
சுறா, மீனை விட்டுவிட்டு அப்படியே நழுவியது. வாயில் மீனைக் கடித்த மாமிசத்துடன் அப்படியே மரித்தது.
படகே இன்னும் ஆடிக் கொண்டிருந்தது. அந்த மத்த சுறா படகை உண்டு இல்லை என்று மோதிக் கொண்டிருந்தது. படகு அடிப்புறமிருந்து எட்டி அது மீனைக் கவ்வி உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது.
பெரியவர் பாய்மரத் துணியை இறக்கிவிட்டார். படகு இப்போது அகலவாக்கில் ஆட்டங் கொடுக்க இது உதவியது. இப்போது அந்த சுறாவை அது தண்ணீரில் இருந்து வெளியே காட்டும் என ஒரு கணக்கு.
அந்த சுறாவைப் பார்த்ததும் முன் பக்கமாக பக்கவாட்டில் அவர் குனிந்தார். அந்த சுறாவைக் குத்தினார். வசம் கிடைக்கவில்லை. அதன் பக்கவாட்டு சதையில் தான் அவரால் கத்தியைப் பாய்ச்ச முடிந்தது. அதன் உட்பக்கம் இறுகி பாறைச்சதையாய் இருந்தது. கத்தி அதன் உடபுக்குள் புகவே இல்லை.
இந்தக் குத்தல் முயற்சியில் கையும், தோளுமே வலியெடுத்தன. என்றாலும் சுறா வேகமாக மேலே வந்தது. மேலாகத் தலையைக் கொணர்ந்தது. தட்டையான அதன் மண்டையில் ஓங்கி நடுப்புறமாய்க் குத்தினார் கத்தியால்.
மூக்கை வெளியே நீட்டி அது மீனுக்குப் பாய்ந்திருந்தது. ஒரு குத்து. பெரியவர் திரும்ப கத்தியை உருவிக் கொண்டார். முன்பு குத்திய அதே புள்ளியில் திரும்பக் குத்தினார்.
மீனைக் கவ்விய நிலையில் சுறா அப்படியே நின்றது. பெரியவர் அதன் இடது கண்ணில் கத்தியைப் பாய்ச்சினார். அப்பவும் சுறா பிடியைத் தளர்த்தவில்லை.
“விட மாட்டியா நீ?” என்றார் பெரியவர். அதன் முதுகுத் தண்டுக்கும் மூளைக்கும் இடையே கத்தியைப் பாய்ச்சினார். இப்போது அந்தக் காரியம் அத்தனை சிரமந் தரவில்லை. சட்டென சதை கிழிந்து பொங்கியதை உணர முடிந்தது.
துடுப்பை கத்திவசம் இல்லாமல் திருப்பிப் பிடித்துக்கொண்டார். சுறாவின் தாடைகளுக்குள் செலுத்தி அது மீனைக் கவ்விப் பிடித்திருந்த பிடியை விடுவித்தார். வாய்க்குள் துடுப்பை ஓட்டி குடைந்தபோது சுறா பிடியை நழுவ விட்டு தண்ணீரில் அமுங்கியது.
“போய்ததொலை கலனோ, ஒரு மைல் அடியாழம் போய்ச்சேர். போய உன் கூடவந்ததே அந்த சிநேகிதியைப் பார். அல்லது  உன் அம்மையோ?”
கத்தியைத் துடைத்துவிட்டு துடுப்பைக் கீழே சாத்தினார். திரும்ப பாய்மரக் கொடியைச் சுற்றி அதை ஏற்றிக் கொண்டார். படகு தன்னிலை மீண்டு நிதானத்துக்கு வந்தது.
மீனின் மொத்தத்தில் கால் பங்கை இதுங்க எடுத்திருக்கும் போலுக்கே?” என்று கத்தினான். “இருந்ததுல நல்ல சதைப் பகுதிகள் காலி...”
“ஹ்ம். இது கனவாகவே இருந்திருக்கலாம். இதை நான் பிடிக்காமலே இருந்திருக்கலாம். இப்பிடி ஆயிட்டதே, என்னை மன்னிக்கணும் நீ மீனே, இப்ப எதுவுமே சரியா வரல்ல.”
மேலே பேச முடியாமல் நிறுத்தினான். திரும்ப அந்த மீனைப் பார்க்க அவனுக்குத் திராணி இல்லை. ரத்தம் பூராவும் வெளியேறி உலர்ந்து போய், கழுவி விட்டாப் போல இருந்தது மீனின் மிச்சம். ஒரு கொல்லுப் பட்டறையில் வெள்ளி மெருகுபோட்டாப் போல வெளிறிக் கிடந்தது. உடலின் வரிகள் தெரியத்தான் செய்தன.
“நான் கடலுக்கு அத்தனை உள்ளாறன்னு போயிருக்க வேண்டாமோ என்னமோ, மீனே” என்றான். “அது உனக்கும் நல்லதா அமையல, எனக்கும் அமையல. என்னை மன்னிக்கணும் நீ மீனே...”
“சரி. இப்ப...” என தனக்குள் சொல்லிக் கொண்டான். “கட்டி வெச்சிருக்கிற கத்தியைப் பார். துணி நைந்து அத்துக் கிடக்கா பார்த்துக்கோ. ஏ உன் கையை உஷார் பண்ணிக்க. ஏன்னால், இன்னும் ஆபத்துகள் வரத்தான் வரப் போகிறது.”
“இந்தக் கத்திக்கு பதில் ஒரு கல் மாதிரி எதும் இருந்தால் நல்லா யிருந்திருக்கும்” என்றான் அவன். துடுப்பில் கட்டியிருந்த கத்தியை சரிபார்த்தபடியே பேசினான். “ஒரு கல் எடுத்திட்டு வந்திருக்க வேண்டும் நான்.”
அப்படியே வெறுன்ன படகில் ஏறி வந்திட்டே. எத்தனை சாமான்கள் நீ கொண்டு வந்திருக்கலாம், என நினைத்தான். பட்டியல் கிடக்கட்டும், நீ எதுவுமே எடுத்திட்டு வரல்லியே எய்யா.
அட இப்ப என்னென்ன இல்லைன்னு பாத்திட்டிருக்கறதா? இப்ப என்ன செய்ய நம்மால முடியும், அதுக்கு நம்ம கிட்ட என்ன இருக்கு, அப்படித்தான் யோசிக்கணும்.
“நல்லா தான் யோசனைல்லாம் சொல்கிறாய், போகாத ஊருக்கு வழி!” என்றான் சத்தமாய். “உன் அறிவுரைகள், எனக்குக் காது வலிக்குதுடா மனசே.”
சுக்கான் திருப்பியைக் கையடியில் வைத்துக் கொண்டான். ரெண்டு கையையும் கடலில் கழுவிக் கொண்டான்.
படகு முன்னெடுப்பாய்ப் போய்க் கொண்டிருந்தது.
*
தொ ட ர் கி ற து

91 97899 87842 storysankar@gmail.com

No comments:

Post a Comment