Monday, August 15, 2016

THE OLD MAN AND THE SEA
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே


தமிழில் எஸ். சங்கரநாராயணன்

பகுதி பத்து
••
இன்னுங் கூட நடந்ததை அவனாலேயே
நம்ப முடியத்தான் இல்லை. அடிக்கடி
திரும்பி மீனைப் பார்த்துக் கொண்டே வந்தான்.
••

பொறிகள் பறக்கும் மயக்கப் பார்வையூடே கிழவன் கூர்ந்து மீனைப் பார்த்தான். ஈட்டிக் கயிறை இன்னும் ரெண்டு சுற்று இறுக்கமாகக் கம்பத்தில் சுற்றிக் கட்டினான்.
கைகளுக்குள்ளே தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.
பலகையில் முன் கவிழ்ந்து கொண்டான். “என் தலையைக் கொஞ்சம் பிடிச்சிக்கோ பலகையே” என்றான். “நான் இப்ப தெம்பே அத்துப்போன, இத்துப்போன கிழம். ஆனால் இந்த மீனை நான் கொன்னுட்டேன். என் சகோதரனைக் கொன்னுட்டேன். ஹ்ம். இனி நான் இதை அப்புறப் படுத்தற வேலையைச் செய்யணும்.”
இப்ப இதைக் கட்டிப் போகிற பெரிய கயிறுவளையம் தயார் செய்யணும். கயிறுகளை அதற்கு ஏற்ப வசப்படுத்தலாம். பெரிய மீன். படகின் பக்கவாட்டில் அதைக் கட்டி எடுத்துப் போக வேண்டும். படகில் ரெண்டாள் இருந்தாலும், ரெண்டு பேருமாக மீனை இழுத்துப் படகில் தூக்கிப்போட படகில் இடம் பத்தாது. மீன் பெரியது. படகோடு அதைக் கட்டுவதற்கு ஆகவேண்டிய எல்லா வேலையும் பார்க்கணும்.
இறுக்கமாக் கட்டணும். பிறகு பாய்மரத்தை மேலே ஏத்தணும். வீட்டைப் பார்க்க ஜுட்!
படகின் பக்கவாட்டு வசத்துக்கு மீனை இழுக்க ஆரம்பித்தான். அதன் நுரையீரல் வழியே ஒரு கம்பி இழையைச் செலுத்தி வாய் வழியே வெளியே எடுத்து அதன் முகப்பகுதியை கோச்சுப் பலகைப் பக்கமாகக் கட்டிவிடலாம்.
மீனை நான் பார்க்க வேண்டும், என நினைத்தான். அதைத் தொட்டு உணர வேண்டுமாய் ஆசைப்பட்டான். ஸ்பரிசமாக என் சகோதரனை உணர வேண்டும் நான். ஆ இது என் செல்வம் இல்லியா, என நினைத்தான். ஆமா, அதுனாலதான் அதை ஸ்பரிசிக்கிற துடிப்பு எனக்கு வருகிறது.
ம். அத்தோட இதயத்தை... நான் நினைக்கிறேன், என் ஈட்டியால் ஸ்பரிசிச்சிட்டேன். முதல் தடவை அல்ல. ரெண்டாம் தடவை நான் இன்னுமா ஈட்டியை உள்ளே செலுத்தினேன் இல்லியா? அப்ப இதயத்துக்குள்ள அது பாய்ஞ்சிருக்கும்.
சரி. கிட்ட இழு அதை உன் பக்கத்துக்கு. அதைக் கட்டற சோலியைப் பார். அதன் வால் பக்கமிருந்து கண்ணியை மாட்டு. ஒண்ணு வயித்துப் பக்கமா நடுவால கட்டு. மத்தது கொஞ்சம் பின்னால. ஆக ரெண்டு கண்ணிகள்.
“ம். வேலையை ஆரம்பி வாத்தியாரே” என்றான் சத்தமாய். கொஞ்சம் போல தண்ணி குடித்து தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டான். “ஐய யப்பா. சண்டை யென்னவோ முடிஞ்சாச்சி. அப்பறந்தான் எத்தனையோ சோலிகள் இருக்குது.”
நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். தலையை மெல்ல சரித்து இப்போது மீனைப் பார்த்தான். திரும்ப நிமிர்ந்து சூரியனை கவனமாகப் பார்த்தான். இன்னும் மதிய வேளை கூட ஆகவில்லை. பகல் வேளை என்றால் சூரியன் தலைக்கு நேர்மேலே வர வேண்டுமே, என்று தோன்றியது.
காற்று கிளம்பி வலம் வர ஆரம்பித்திருந்தது. இந்தத் தூண்டில்கள், அதன் இழைகள், இனி இவற்றுக்கு வேலை இல்லாமலாயிற்று. வீட்டுக்குப் போயி நானும் பையனுமாய் இதைத் தறித்துப் போட்டுற வேண்டிதான்.
*
“வா மீனே கிட்டத்தில்” என்றான். மீன் வர்றாப்ல இல்லை.
அது கடலிடம் தன்னை அப்படியே முழுசாய் ஒப்படைத்துக் கிடந்தது. அதன் அருகே படகைச் செலுத்தினான் கிழவன்.
அதைத் தலைப்பக்கமாக படகின் முன்வசத்தில் கோச்சுப் பெட்டி அருகே கட்டியபோதும் அதன் பருமனைப் பார்த்து பிரமிப்பாய் இருந்தது. ஈட்டியின் கயிறைக் கம்பத்தில் இருந்து அவிழ்த்தான்.
அதை அப்படியே மீனின் நுரையீரல் வழியே வாய்க்குக் கொண்டு வந்தான். ஈட்டியை அசைத்து தன் பக்கம் மீனைத் திருப்பினான். ரெண்டு தடவை மூக்கணாங் கயிறைப் போல மீனைக் கட்டி அதை கோச்சுப் பெட்டிக் கம்பத்தில் கட்டிக்கொண்டான். முடிச்சு போட்டதும் மீதிக் கயிறை அறுத்து எடுத்துக் கொண்டான். படகின் பின்புறம் நோக்கிப் போனான். வால் பக்கம் கட்ட வேண்டும்.
மீன் தன் 'கருநீல நிற வெள்ளி' தகதகப்பில் இருந்து வெளிறி ஒரு முழு வெள்ளி மினுக்கம் கண்டிருந்தது. வரிகளும் வால் பகுதியும் அதே வெளிர் ஊதா காட்டின. அந்த வாலைப் பார்த்தான். மனிதக் கையைக் காட்டிலும் அகன்று விரிந்த இரட்டை இலைகள் அவை. மீனின் கண்ணில் பாவமே இல்லாத ஒரு வெறிப்பு. ஒரு பளிங்கின் பிரதிபலிப்பு போலக் கண்டது. அல்லது... சாது ஒருவனின் சவ ஊர்வலமா இது?
“அதைக் கொல்ல இந்த ஒரே வழிதான்” என்றான் கிழவன். தண்ணி குடிச்சதில் கொஞ்சம் தெளிச்சி ஆயிருந்தான். இனி தன்னிலை மீண்டாப் போலத்தான். குளறுபடிகள் காட்டாது தலை. தெளிவாக யோசிக்க ஆரம்பித்திருந்தது அது.
நல்ல தண்டி அப்பா. ஒரு ஆயிரத்தி ஐந்நூறு பவுண்டு தேறும் எடை. அதுக்கும் மேலேயே கூட இருக்கலாம். சீவிச் செதுக்கியது போகக் கூட மூணில் ரெண்டு பங்கு எடை தேறிரும். விலைன்னு பார்த்தால், என்ன, ஒரு பவுண்டு முப்பது சென்ட் வரை போகுமா?...
“ஒரு பென்சில் இருந்தா கணக்கு போட்டுறலாம்” என்று சொல்லிக் கொண்டான். “சடசடன்னு மனக்கணக்காப் போடற அளவுக்கு மண்டை இப்ப வேலை செய்யல்ல. ஆனால், சூரன் டிமாகியோ என்னைப் பார்த்தால் பெருமைப்படுவான்னு நினைக்கிறேன்!... ம். எனக்கு எலும்பு துருத்தி வலி கிலி எதுவும் ஆகல்ல. ஆனாலும் கைகள், முதுகு... வலி பின்னுதப்போவ்.” எலும்புக் குத்து, இதுவரை வரவில்லை. அல்லது எனக்கு அது வந்து, இதான் அதுன்னு தெரியாமலேயே நான் அனுபவித்தும் இருக்கலாம்.
படகின் முன் பக்கமும் பின் பக்கமும் நடுவிலுமாக மூணு இடங்களில் கட்டிக் கொண்டிருந்தான். மகா உருவம் அது. இந்தப் படகைக் காட்டிலும் பெரிய படகை இத்தோடு சேர்த்துக் கட்டி இழுத்துப் போகறாப் போல ஆகிவிட்டது. கயிறுக் கண்டில் இருந்து சிறு துண்டை எடுத்து மீனின் தாடைகளை மூடிக் கட்டினான். அசைய அசைய அதுபாட்டுக்கு எதும் திரவத்தைச் சிந்திக்கொணடே வந்திறப்டாது. முடிந்த வரை இனி சுத்தபத்தமா பயணப்படுவம், என்றிருந்தது.
பாய்மரத்தை ஏற்றிக் கொண்டான். துடுப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டான். மீனை சரியாகக் கட்டியிருப்பதாக ஒரு பார்வை. கிளம்பினான். படகு வீடு நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது. சாய்ந்தவாக்கில் படகின் பின்சாரத்தில் உடலைக் கிடத்திக்கொண்டான்,
தென் மேற்காக படகு புறப்பட்டது.
திசை தெரியாமல் என்ன? காம்பஸ் எதுவும் அவனுக்கு வேண்டாம். இந்த வேளையின் இந்தக் காற்று அது வீசும் திசையே அவனுக்கு அடையாளம். பாயமரம் படகை நகர்த்தும் திசையை வைத்தேகூட அது அவனுக்குத் தெரியும்.
*
ஒரு சின்னத் தூண்டிலைக் கூட வெளிய விட்டு வைச்சா நல்லது. சாப்பிட உள்ளே நனைச்சிக்க எதாவது தேவைப்படும். ஆனால் சிறு தூண்டில் மாதிரி எதுவும் இல்லாதிருந்தது. வைத்திருந்த சார்தைன்கள் எல்லாம் அழுகி வீணாகியிருந்தன.
படகுப் பக்கமாக வெளியே நீரில் மிதந்து கொண்டிருக்கும் கல்ஃப் வகைப் பாசிகளைத் துடுப்பு வைத்து தன் பக்கம் இழுத்தான். ஒரு கொத்தை வாங்கி படகுக்குள் உதறினான். அவன் எதிர்பார்த்தபடி அதில இருந்து சிறு சிறு ப்ரான் வகை ஜீவன்கள் ஒரு பத்து பன்னெண்டு படகுக்குள் உதிர்ந்தன. மணலில் துள்ளும் சிறு வெட்டுக்கிளிகள் போல அவை படகில் துள்ளி கைகால்களை உதறின.
கிழவன் அவற்றைப் பிடித்து தலையைக் கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் கிள்ளி, அப்படியே அவற்றை வாயில் போட்டு சுவைத்தான். கூடுகளையும் வாலையும் கூட அப்படியே கறுக் மொறுக்கென்று சுவைத்தான்.
சிற்றுயிர்கள் தான். என்றாலும் சத்து சாரம் மிக்கவை என அவன் அறிந்திருந்தான். வாய்க்கு ருசியும் நல்லா தான் இருந்தது.
போத்தலில் இன்னும் இரண்டு மிடறு தண்ணீர் இருந்தது. தின்று முடித்ததும் இருந்த தண்ணீரில் பாதியை அருந்தினான்.
படகு, இப்போது சுகமான சவாரி தான். இதுவரை பட்ட நொம்பலப் பாடுகளுக்கு இது எவ்வளவோ மேல். கைக்கடியில் துடுப்பு கொடுத்து படகை சிறிது வலித்துப் போனான். கூடவே மீனும் சவாரி செய்கிறது.
நானா இதை ஜெயித்தேன் என திரும்பவும் ஒரு வாயடைத்த வியப்பு. கைகளும், தரைப்பலகை மீது கிடத்தப்பட்ட முதுகும், அதன் உணர்ச்சியும் தான் இது நிசம் என்பதை உறுதி செய்தன. கனவல்ல அப்பா, இரு சத்தியம்!
ஒரு சந்தர்ப்பத்தில், அந்த நிகழ்வின் கடைசியில் அவன் உடம்பே ரொம்ப திண்டாடிப் போனபோது, இல்லடா, இதெல்லாம் கனவு என்று அப்போது நினைத்தான் அவன். பிறகு, மீன் தண்ணியை விட்டு வெளியால வந்ததே, அப்படியே அசையாமல் கொஞ்சம் அந்த வெளியில் நின்னுதே, திரும்ப முங்கு முன்னால... அது ஒரு மகா அனுபவம், புத்தம் புதிய விநோதமான, தனக்கு மாத்திரமேயான காட்சி என்று அது பட்டது. நம்ப இயலவில்லை அதை.
இப்ப பார்வை சுதாரிச்சிட்டது. என்றாலும் அப்ப, அந்தக் கணம் ஒண்ணுமே தெளிவாத் தெரியவில்லை அவனுக்கு.
இப்போது விஷயங்கள் தெளிவாகி விட்டன. அதோ மீன். விண்விண்ணென்று தெறிக்கும் விரல்கள். முதுகு. எல்லாமே நிசம்தான்.
கைகள் சீக்கிரம் தேறி விடும், என்று தோன்றியது. இரத்தத்தை நானே வெளியேத்திட்டேன். கடல் தண்ணீரில் அதைக் கழுவியதில் உப்பு புண்களைச் சீக்கிரம் சொஸ்தப்படுத்தி விடும். கருநீலமான இந்த கடல் கல்ஃப் வளைகுடாவின் தண்ணீர், மகா வைத்தியம் அளிக்கும் அது.
இப்ப நான் செய்ய வேண்டியதெல்லாம், தலைக் கிறுகிறுப்பு வராமல் குழப்பம் இல்லாமல் இருக்கணும்.
கைகள் தன் வேலையைச் செய்தாகி விட்டது. வீட்டை நோக்கிய பயணம் நல்லபடியா ஆயிட்டிருக்கு இப்ப. மீனைப் பார். வாயைக் கட்டியாகிவிட்டது. வால் பார் பக்கவாட்டில் மேலும் கீழுமாய் காற்று நீச்சல். நாங்கள் சகோதர்கள் ஒண்ணாய்ப் பயணிக்கிறாப் போலிருக்கிறது.
திரும்ப தலைக்குள் புகைமூட்டம். அட அது என்னைக் கூட்டிப் போகுதா? இல்ல நான் அதைக் கூட்டிப் போகிறேனா? எனக்குப் பின்னால் மீனை நான் இழுத்துப் போகிறதானால், இந்த சந்தேகம் வராது. இந்த மீனையும் படகில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனாலும் இந்தக் கேள்வி எழாது.
என் அத்தனை பெருமிதத்தையும் இதன் முன் இழந்தேன். இந்த மாதிரிக் கேள்விக்கே இடம் இல்லை இப்போது!
அவர்கள் ஒண்ணாய்ப் பயணம் மேற்கொள்கிறார்கள். பந்தப்பட்டு கட்டப்பட்டு... என நினைத்தான். என்னை அது கூட்டிச் செல்வதாகவே தான் இருக்கட்டுமே, அதற்கு அது சந்தோஷந் தரும் என்றால் அப்படியே நினைச்சிக்கலாம். தப்பு இல்லை.
அதைவிட நான் உசந்தது எப்படி? என் குயுக்திகளால்தானே? அது எனக்கு எந்த இடைஞ்சலும் இடையூறும் செய்ததா?
இல்லவே இல்லை.
இருவருமாக நல்லபடியாக பயணப்பட்டார்கள். கிழவன் கையை கடல் தண்ணியில் முக்கிக் கொண்டான். மூளையை சுதாரிப்பில் வைத்துக் கொள்ள பிரயத்தனப் பட்டான். வானத்தில் குவியும் மேகங்கள். அவற்றின் மேலும் மேக வெண்ணெய்த் திரளல்கள். இராத்திரிக்கும் இந்தக் காற்று அடங்காமல் வீசும் என்று தெரிந்தது அவனுக்கு.
இன்னுங் கூட நடந்ததை அவனாலேயே  நம்ப முடியத்தான் இல்லை. அடிக்கடி திரும்பி மீனைப் பார்த்துக் கொண்டே வந்தான்.
அதற்கு ஒரு மணி கழித்துதான் அது நடந்தது. முதல் சுறா மீன் வந்து அவனைத் தாக்கியது.
சுறா மீன் வந்தது தற்செயல் அல்ல. கடலின் அடியாழத்தில் இருக்கின்றன சுறா மீன்கள். அத்தனை ஆழத்தில் இருந்து அது மேலே இதுவரை வந்திருக்கிறது.
கடலில் ஒரு மைல் அளவுக்கு அவன் வேட்டையாடிய மீனின் ரத்தம் கருஞ்சாந்தாக பரவி விரவிக் கிடந்தது. அந்த வாடைக்கு சர்ரென்று எந்தவித முன் அறிவிப்பும் காட்டாமல் மேலே வந்தது சுறா.
வந்த ஜோரில் கடல் மட்டம் கொந்தளிந்தது. எகிறி மேலே துள்ளி சூரிய வெளிச்சத்தை அது பார்த்தது. பிறகு திரும்ப கடலுள் ஆழ்ந்தது. அந்த ரத்த வாடையை அது கண்டுகொண்டது இப்போது.
படகும் மீனும் போகிற பாதையில் அது பின்னாலேயே கூடவே வந்தது.
சில நேரம் அந்த வாடை தப்பி விடும். என்றாலும் திரும்ப அந்த வாடையை அது எட்டி விடும். அல்லது, வாடை கொஞ்சம் போல கிடைத்தாலும், அது நீந்துகிற வேகத்தில், அதன் கடும் தேடலில் படகின் பாதையை அதனால் எட்டிவிட முடிந்தது.
*
மேக் எனப்படும் மிகப் பெரிய சுறா வகை அது. இருப்பதிலேயே அதிக வேகமாக நீந்தும் மீன்வகைகளில் ஒன்று. அதன் தாடைகள் தான் கோரமாய்க் காணும். என்றாலும் மத்தபடி அது அழகான இனம்தான்.
வாள்-மீன் இருக்குமே, அதைப்போல நீல முதுகு உடையது இந்த இனம். வயித்துப் பக்கம் வெள்ளியாய்த் தெரியும். அதன் சருமமே மென்மையாவும் அழகாவும் இருந்தது.
கிட்டத்தட்ட வாள்-மீன் இனம் என்றே சொல்லலாம். ஆனால் இதன் தாடைகள் ரொம்பப் பெரியவை. விர்ரென்று வேகமெடுத்து நீந்திக் கொண்டிருந்த நிலையில் அந்தத் தாடைகள் இறுக மூடிக் கொண்டிருந்தன. பின் செதிள்களால் கத்திபோல தண்ணீரைக் கிழித்துக் கொண்டு சற்று மேல் மட்டத்திலேயே நீந்தி வந்தது மேக். செதிள்களை ஆட்டவே இல்லை அது.
தாடைகளுக்குள்ளேயான மேல் கீழ் உதடுகளுக்கு உள்ளே எட்டு வரிசைகளில் பற்கள். உள்பக்கமாக வளைந்த பற்கள். வழக்கமான அநேக சுறாக்களுடையதைப் போல, பிரமிட் வடிவப் பற்கள் அல்ல அவை.
ஒரு மனிதனின் விரல் போன்றவை அவை. மடக்கும்போது அவை கழுகு நகங்களாய் உள்சுருள வல்லவை.
அதன் ஒவ்வொரு பல்லுமே நம்ம கிழவனின் விரல்களைப் போன்றுதான் அமைந்தவை. இடது வலது இருபக்கமும் சவரக்கத்தி போன்ற கூர்முனைகள் அமைந்தவை. இந்த வகை மீன் மத்த எல்லாவகை மீனையுமே இரையெடுக்க வல்லது. துரிதமான வேகம். நல்ல வலிமை. ஆயுதத்துக்கும் குறைவு இல்லாதவை.
எனவே அவற்றுக்கு வேறு எதிரி என யாருமே இல்லை!
இப்போது அந்த சுறா புதிய கவிச்சியை அறிந்து இன்னும் வேகவேகமாக வந்தது. அதன் நீல மயமான பின் வால் நிரைக் கிழித்து வந்தது.
*
அது வருகிறதைப் பார்த்தான் கிழவன். அது வரும் ஜோரிலேயே சுறா தான் என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. சுறாக்கள் கிஞ்சித்தும் பயம் அற்றவை. அவை என்ன நினைக்குதோ அதை சகஜமாக சாதிக்க வல்லவை.
ஈட்டியைத் தயாராக்கினான். அதன் கயிற்றை கம்பத்தில் கட்டியபடியே சுறா வருவதைப் பார்த்தான். கயிறு இப்போது வழக்கத்தை விட சின்னதாகவே இருந்தது. இருந்ததில் கொஞ்சத்தை வெட்டி வேட்டைமீனைக் கட்ட உபயோகித்திருந்தான்.
அவன் மனமும் அறிவும் இப்போது இந்தப் போராட்டத்துக்குத் தயாராய் இருந்தது. கடகடவென்று உள்ளே யோசனைகள் ஓடினாலும், நம்பிக்கை தான் வரவில்லை! எதிராளி யார், சுறா, என்றிருந்தது. அதைச் சமாளித்து தப்பிக்க, சாத்தியமே இல்லை.
தனது பெரிய மீனை ஒரு தரம் பார்த்துக் கொண்டான். சுறா நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதுவே கூட கனவு தானோ, என நினைத்தான்.
எனது மீன் போல அது சாது அல்ல, நேரே வந்து மனுசனைத் தாக்கிவிடும். தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாது மனுசனால். ஆனால், ஒருவேளை என்னால் முடியும்... என நம்பித்தான் ஆகவேண்டும்.
ஹா ஹா, ஏ தென்தூசோ,*** (* தென்தூசோ - ஸ்பானிய மொழியில் தெத்துப்பல் நபர்) உன் அம்மாவுக்கு பிள்ளை இல்லாமல் ஆகப் போகுதே!... என நினைத்தான் எகத்தாளமாய்.
சுறா படகின் பின்பக்கமிருந்து பாய்ந்து மீனைக் கவ்வ வந்தது. கிழவன் அதன் விரிந்த வாயைப் பார்த்தான். புதிரான அந்தக் கண்களைப் பார்த்தான். பற்களைக் கிட்டித்த அதன் கடகட ஒலியைக் கேட்டான். சுறா அந்த இறைச்சியின் வால் பக்கமாய் முன்னேறி எழும்பி வந்தது.
கடலுக்கு மேலே தலையை நீட்டியிருந்தது சுறா. பின்பகுதி இப்போது மெல்ல மேலே எழும்புவதைப் பார்த்தான் கிழவன். படகுமீனின் சதை தோலோடு உரிபடும் கர்ரக் சத்தம்.
ஆத்திரத்துடன் அந்த சுறாவின் தலையைப் பார்க்க ஈட்டியை எறிந்தான். கண்களுக்கு நடுவே சிறிது இறக்கி மூக்குக்கு மேலே என்று நெற்றிப் பொட்டைக் குறி பார்த்து எறிந்தான். அப்படியான குறி கிடைக்கவில்லை. கெட்டியான நீல மண்டை அது. அந்தப் பெரிய கண்கள். அப்புறம் அந்த பற்களின் அரைக்கும் சத்தம். கிடைத்ததை யெல்லாம் கபளீகரம் செய்கிற விரிந்த அந்தத் தாடைகள்.
என்றாலும் அவன் எறிந்த அந்த தலைப் பகுதி, அதன் மூளை இருக்கும் இடம் அதுதான்... கிழவன் அந்த இடத்தைத் தாக்கியிருந்தான். ரத்தம் கட்டி கன்றிச் சிவந்த கைகளால் இருந்த பலம் அத்தனையும் ஒன்றுசேர்த்து ஈட்டியை எறிந்திருந்தான். பெரிசாய் அதில் வெற்றி எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. என்றாலும் ஒரு செயல்திட்டம் இருந்தது அதில். ஆத்திரக் குமுறல் இருந்தது.
*
சுறா அப்படியே மல்லாந்து புரண்டது. அதன் கண்களில் உயிர்ப்பில்லை. பிறகு அது திரும்ப புரண்டு கொடுத்தது. கயிறோடு இரண்டு சுருளல்களாய் உருண்டு சுருண்டது.
செத்திட்டது அது, என்று கிழவன் அறிவான். ஆனால் சுறா அதை ஒத்துக்கொள்ள மறுத்தது. அப்படியே மல்லாந்தவாக்கில் அதன் வாலை தண்ணீரில் அறைந்து கொண்டது. தாடைப் பற்களைக் கிட்டித்த நரநர ஒலிகள். நீரை உழுதாப் போல நகர்ந்தது சுறா. எந்திரப் படகு போல.
வால் அடித்த நீர்ப் பகுதிகள் வெளிறி நீலம் விலகித் தெரிந்தன. அதன் தேகத்தின் முக்கால் பாகம் தண்ணீருக்கு வெளியே.
ஈட்டிக் கயிறு நெகிழ்ந்து துவண்டு பிறகு அறுந்தே விட்டது.
சுறா கொஞ்ச நேரம் அப்படியே மேல்மட்டத்தில் படுத்திருந்தது. கிழவன் அதைப் பார்த்தான்.
பிறகு மெல்ல அது கடல் உள்ளே நழுவியது.
“ம். சும்மா ஒரு நாற்பது பவுண்டு சதையைக் காலி பண்ணிட்டதே எய்யா” என்று கத்தினான். என் ஈட்டி வேற அத்தோட உள்ள போயிட்டது. மீதிக் கயிறு இருந்த கயிறு அனைத்தும் உள்ளேயே அத்தோட இழுத்துக்கிட்டது.
இப்ப விஷயம் என்னன்னால், என்னோட மீன் இப்ப திரும்ப ரத்தம் சிந்த ஆரம்பிச்சிருக்கு.
இனி மேலும் சுறாக்கள், திமிங்கலங்கள் வர ஆரம்பிக்கும்.

தொ ட ர் கி ற து
91 97899 87842 storysankar@gmail.com


No comments:

Post a Comment