Monday, August 22, 2016

THE OLD MAN AND THE SEA
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே


தமிழில் எஸ். சங்கரநாராயணன்
பகுதி பன்னிரெண்டு
••
அதிர்ஷடம் இருக்கட்டும்.
இருந்தால் நான் இந்த முன்பாதியைக்
கரைக்குக் கொண்டு சேர்ப்பேன்.
••

“கடைசி சம்பவம், அதில் எவ்வளவு சதை இழப்போ? கடவுளே அறிவார்!” என்றான் அவன்.
இதுதான் கடைசி சம்பவமா?
“இப்ப அது ரொம்ப ரொம்ப எடை குறைஞ்சிட்டது.” சுறாக்கள் பாய்ந்து கடித்ததில் நாசமாகிப் போன மீனின் கீழ்ப் பகுதி பற்றி யோசித்துப் பார்க்கவே முடியாமல் ஆயிற்று. சுறாவின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் வாய் வாயாய் மாமிசம் கிழிபட்டிருக்கும்.
இப்ப என்ன ஆயிற்று, இந்த மீனின் வாடையும், சதைச் சிதறல்களுமாக, ஒரு ராஜபாட்டையாட்டம் கடலின் எல்லா சுறாக்களையும் வரவேற்கிறது, சிவப்புக் கம்பள வரவேற்பு.
வீட்டில் பதப்படுத்தி வெச்சிக்கிட்டம்னு வெய்யி. ஒரு மனுசனுக்கு குளிர்காலம் முழுசுக்குமே அது உணவு. அதை இழந்து விட்டேன். அவனுக்கு வருத்தமாய் இருந்தது.
ச். அதையெல்லாம் நினைச்சிக்காதேடா. கம்னு அப்பிடியே ஓய்வு எடுத்துக்கோ. கைகளை சரி பண்ணிக்க முடியுமா பாரு. மிச்ச மீதி இருக்கிற மீனைக் கரைக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியுதா பாரு.
கைகளைப் பார்த்துக் கொண்டான். என் கையின் இந்த இரத்தவாடை அது ஒண்ணுமே இல்லைன்னு ஆயிட்டது இப்ப. மொத்த தண்ணியுமே மீனின் ரத்த வாடையடிச்சிக் கெடக்குது. ஆனால் மீன் இப்படி கடிபடா விட்டால் இரத்தம் கொட்டாது இப்போது. என் கையில் கீறல்கள், அதுதான் இரத்த விளாறா இருக்கு. கீறல் இல்லாமல் கன்றிப் போயிருந்தால் பரவாயில்லை.
இப்பிடி ரத்தம் வர்றதுல ஒரு ஆதாயம் உண்டு. இடது கை, திரும்ப மரத்துப்  போகாது. உயிர்ப்போடு இருக்கும்!
இப்ப நான் எதைப் பத்தி நினைக்க, என்ன நினைக்க என்றே திகைத்து விட்டது. ஒரு நினைப்பும் உனக்கு வேணாம். எதையும் நினைக்காதே. அடுத்தடுத்த ஆபத்துகள், அவை பத்தியும் யோசிக்க வேணாம். வரட்டும். காத்திரு.
தாள முடியல்லியேப்பா. இது கனவாகவே இருந்திருக்கலாம், என திரும்ப யோசித்தான். ஆனால் யாருக்குத் தெரியும்? கனவானால் நல்ல மாதிரி இது, இந்த சம்பவம் எல்லாம் நிகழ்ந்திருக்கலாம்!
இன்னொரு சுறா தனியாக வந்திருந்தது, மண்வாரிமூக்கன். அலைமேலே ஒரு பன்றியைப் போல வந்தது. அகலமான பன்றி வாய், உள்ளே உங்க தலையே நுழையலாம்.
அதுவந்து மீனைக் கவ்வட்டும், என பெரியவர் காத்திருந்தார். பிறகு அதன் மூளையைப் பார்க்க துடுப்புக் கத்தியை அழுத்திச் செருகினார். ஆனால் சுறா மல்லாக்கத் துள்ளி பின்சரிந்து உருண்டது. இந்த முயற்சியில் கத்தியே ரெண்டு துண்டாய் உடைந்து விட்டது.
பெரியவர் அயர்ந்திருந்தார். பேசாமல் படகை வலித்துப் போக ஆரம்பித்தார்.
சுறா திரும்ப தண்ணிக்குள் மூழ்குவதைப் பார்க்கக் கூட அவருக்குத் தோன்றவில்லை. மேலாக முழுசாக எழுந்த சுறா. பிறகு மெல்ல பாதி உள்ளமுங்கி, சின்னதாகி, மறைந்தே போனது சுறா. அதைப் பார்க்க அவனுக்குப் பிரயம் உண்டு. இப்போது அதை சட்டையே செ4ய்யவில்லை அவன்.
“பாய்மரத்தின் இரும்புக் குச்சி, கொக்கிப் பூண் போட்டது. அதுதான் என்னிடம் இப்ப கைவசம் உள்ளது” என்றான் கிழவன். “ஹ்ம். அது எந்த வேலைக்கும் ஆகாது. ரெண்டு துடுப்புகள் இருக்கு. சுக்கான் திருப்பி. சின்ன இரும்பு ஸ்பானர். பிறகு ஒரு குறுந்தடி. அவ்வளவே.”
இதுங்க, சுறாக்கள்... நான் அடிச்சித் துவைச்சாப் போல தான் இருக்கு, என நினைத்தான். நான் வயசாளி. ஒரு சுறாவை தடியால் அடிச்சிக் கொல்ற அளவு என்கிட்ட பலம் இல்லை. என்றாலும் துடுப்புகள் உள்ள வரை அதையும் முயற்சி செய்து பாத்திற வேண்டிதான். குறுந்தடி இருக்கு. திருகியும்...
திரும்ப கைகளை ஈரப்படுத்திக் கொள்ள தண்ணியில் முக்கினான். மதியம் தாண்டிய பொழுது. தூர தூரத்துக்கும் கடலையும் வானத்தையும தவிர எதுவும் கண்ணில் தட்டவில்லை.
காற்று நல்ல அளவில் மேல் சுற்றாக எழும்பிச் சுழன்றது. நல்ல வேகத்தில் கரையை எட்டலாம் என்று இருந்தது அவனுக்கு.
“நீ ரொம்ப தளர்ந்திட்டே ஐயா” என்றான். “உள்ளாற நீ அசந்து ஆளே சுருங்கியாச்சி.”
அஸ்தமனப் பொழுது வரை பிரச்னை எதுவும் இல்லாத பயணம். அப்பறம் தான் மேலும் சுறாக்கள் தாக்குதலுக்கு வந்தன.
அவனது மீன் கடலில் ஒரு தடத்தை ஏற்படுத்தியவாறே வந்து கொண்டிருந்தது. அதைப் பின்பற்றியே தொடர்ந்து வருகின்றன சுறாக்கள். பழுப்பு நிற செதிள்களை அவனால் பார்க்க முடிந்தது.
மற்ற சுறாக்கள் கடித்துக் குதறியதில் இந்த மீன் திரவமாக ஒழுகிக் கொண்டே வந்தது இப்போது. இந்தப் புதிய சுறாக்கள், இவற்றுக்கு ரத்த வாடையே வேண்டியிருக்கவில்லை. சுறாக்கள் அதுபாட்டுக்கு படகு கூடவே நீந்தி வர ஆரம்பித்திருந்தன.
பாய்மரத் துணியைக் கட்டி இறுக்கினான் சுக்கானை இறுக்கினான். பிறகு பின்பகுதிக்கு வந்து குறுந்தடியைக் கையில் எடுத்துக் கொண்டான். அது உடைந்த ஒரு துடுப்பின் கைப்பிடி. உடைந்த துடுப்பை நறுக்கி ரெண்டரை அடிக்கு தடி என எடுத்து வைத்திருந்தான்.
துடுப்புக்காக அதில் அதை மாட்டிக் கொள்கிற அளவில் வளையம் இருந்தது. ஆகவே ஒரு கையால் மாத்திரமே அதைக் கையாள முடியும். அவன் வலது கையால் அதைக் கையாள முடிவு செய்தான். கையால் வளைத்துத் தடியைப் பிடித்துக் கொண்டான்.
அப்படியே திரும்பி அந்த இரு சுறாக்களைப் பார்த்தான். இரண்டுமே கலனோக்கள்.
முதல் சுறா வந்து இரையை நல்லபடியா கவ்விக் கொள்ளட்டும். பிறகு அதை மூக்கிலேயோ, சரியா உச்சந்தலைமேலேயே போடுவேன், என நினைத்தான்.
இரு சுறாக்களும் நெருக்கமாய் வந்தன. அதில் ஒண்ணு அவன்கிட்டத்தில் வந்து தாடையை விரித்தது. மீனின் வெள்ளிப்பாங்கான பிரதேசத்தில் அதை அழுத்திக் கொண்டன. தடியை நல்ல உயரம் உயர்த்திக் கொண்டான். கனமாக அதைக் கீழே இறக்கினான்.
அகலமான அதன் உச்சி மண்டையில் விளாசினான் தடியால். கடின ரப்பர் போல, டயர் போல இருந்தது மண்டை. என்றாலும் அவனது அடி அல்லது இடிக்கு உள் எலும்பையும் தொட முடிந்தது. திரும்பவும் அதன் மூக்குப் பக்கமாய் இன்னொரு மொத்து. அத்தோடு அந்த சுறா, மீனை விட்டு பிடிநழுவி கடலில் கிறங்கி இறங்கியது.
அடுத்த சுறா கிட்டே வருவதும் விலகிப் போவதுமாய் போக்கு காட்டியபடி இருந்தது. அது இப்போது வாயை விரித்து கிட்ட வந்தது. அதன் வாயையும் பற்களையும் அதன் ஓர இடுக்குகளில் வெள்ளையாய் மீனின் மாமிசத் துணுக்குகளையும் கிட்டத்தில் பார்த்தான்.
அது மீனுக்கு எகிறி அதைக் கடித்து வாயை மூடிக் கொண்டபோது இவன் வசத்தில் துள்ளியது. இவன் அதன் தலையிலேயே ஓங்கி அடித்தான். அடி வாங்கிக்கொண்டு சுறா அவனைப் பார்த்தது. அப்படியே கவ்வியிருந்த மாமிசத்தைத் தளர விட்டது.
இன்னொரு தடவை தடியை வீசியடித்தான் கிழவன். உணவை முழுங்கியவாக்கில் அது தண்ணீரில் அமுங்கியது. அவனது அடுத்த அடி அதன் தலையின் டயர்த்தனமான பகுதியில் விழுந்தது.
“ஏய் கலனோ.. வா பீடையே” என்று கத்தினான். “கிட்டத்தில் வா பார்க்கலாம்.”
ஒரு அவசரத்துடன் சுறா பக்கத்தில் வந்தது. அது வாயை மூடிய நேரத்தில் அதை திரும்ப அடித்தான் கிழவன். உதைன்னா இது உதைன்றாப் போல பலத்தையெல்லாம் கூட்டி அடித்தான். கையை முடிந்த உயரம் மேலேற்றி மகா ஆவேசமாய் இறக்கினான். மூளைக்கு அருகே எலும்பை உணர்ந்தான் இப்போது. அதாண்டா இடம், என்று அங்கேயே இன்னொரு அடி.
சுறா வேகம் அடங்கி, மிக மெல்லமாய் அந்த மாமிசத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது. அப்படியே மீனை விட்டுவிட்டு உள்ளே விழுந்தது.
இப்ப திரும்ப வரும், என்று அவன் காத்திருந்தான். ஆனால் அந்த ரெண்டு சுறாவுமே திரும்ப மேலே வரவில்லை. பிறகு பார்த்தான். ஒரு சுறா அப்படியே வட்டமாய்த் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருப்பதைப் போல நீரில் சலனங்கள். மத்தது என்ன ஆயிற்று தெரியவில்லை.
எல்லாத்தையும் என்னால் கொன்றுவிட முடியும்னு நான் எதிர்பார்க்க முடியாது, என நினைத்துக் கொண்டான். அப்ப, என் வாலிபப் பருவத்தில் அது முடிந்திருக்கலாம். இப்ப அதே பலத்தை என்னிடம் எதிர்பார்கக எப்படி முடியும்? ஆனாலும் அந்த ரெண்டையும் செமத்தியா பூசை செய்தேன். செம அடி பட்டிருக்கும் அதுங்களுக்கு.
ஒரு பந்தடிக்கிற மட்டை மாதிரி எதாவது இருந்தால், ரெண்டு கையையும் பயன்படுத்தி முதல் சுறாவை அடித்தே கொன்னிருப்பேன். ஆமாம் நிச்சயமா, இந்த வயசிலும் என்னால முடியும், என நினைத்தான்.
அந்த மீனின் மிச்சத்தை என்னால் பார்க்க முடியாது. இருந்த உருவத்தில் பாதி கூட இப்ப இருக்காது அது.
அவன் சுறாக்களுடன் பொருதிக் கொண்டிருந்தபோதே சூரியன் மேற்கே இறங்கி விட்டிருந்தது.
“சீக்கிரமே இருட்டிப்பிடும்” என்று சொல்லிக்கொண்டான் கிழவன்.. “ஹவானாவில் இருந்து விளக்கு மினுக்கம் கண்ணுல படுதான்னு பாக்கணும்.
கிழக்குவாடையில் ரொம்ப உள்ளாட்டு இருந்தால், புதுக் கடற்கரைகளில் எதாவது வெளிச்சத்தைப் பார்க்கலாம்.
நான் ஒண்ணும் ரொம்ப கரையைவிட்டு தூரக்க இல்லைன்னு தோணுது, என நினைத்தான். ஊரில் என்னை அத்தனைக்குத் தேட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ம். அந்தப் பையன், மனோலின், அவன்தான் ரொம்பக் கவலைப் படுவான். அவன்மாத்திரம்தான்... என்றிருந்தது. ஆனால் எனக்கு நல்லாத் தெரியும். பையன் என் மேல் அபார நம்பிக்கை உள்ளவன். நான் எப்பிடியும் வந்திருவேன்னு தான் அவன் இருப்பான். ம். அதேமாதிரி, வயசாளி மீனவர்கள், அவர்கள் கவலைப்படக் கூடும். இனனும் சில பேர் கூட இருக்கலாம். நல்ல ஊர் தான் நம்மூரு.
இப்போது இனிமேல் மீனுடன் பேச முடியாது, என்றிருந்தது. மீனின் உருவே ரொம்ப மோசமாய் இருந்தது. அப்பதான் திடீரென்று ஒரு எண்ணம் அவன் மனசில் வந்தது.
“ஏ பாதி மீனே!” என்று கூப்பிட்டான். “நீயும் மீன் கணக்கு தான். முழு மீனாகத் தானே இருந்தாய். நான் வருந்துகிறேன். நான் கடலுக்கு அத்தனை உள்ளே போயிட்டேன். தப்பு அது. நம்ம ரெண்டு பேருக்குமே அது கெடுதலா முடிஞ்சது. ஆனால் நாம, நீயும் நானுமாக, நிறைய சுறாக்களைக் கொன்னிருக்கோம். நிறைய சுறாக்களுக்கு மோசமான அடி கொடுத்திட்டோம். இதுவரை பழைய மீனே, எத்தனையை நீயா கொன்னுருக்கே? உன் மூக்கே சரியான ஈட்டி, அதைச் சுமமாவா வெச்சிருந்திருப்பே நீ?”
அந்த மீனைப் பத்தியே நினைத்துக் கொண்டு போகப் பிடித்தது அவனுக்கு. இந்த மீன் உசிரோடு இருந்திருந்தால் சுறாவால் இதை நெருங்க முடியுமா? அதன் கூரிய மூக்காலேயே சுறாக்களை ரணமாக்கியிருக்கும்.
நான் என்ன செஞ்சிருக்கணும். அந்த சுறாக்களின் அலகுகளை வெட்டி இந்த மீனின் கூர்நுனியில் வரிசையாக் குத்தி அழகு பார்த்திருக்கலாம். அதுக்கு எனக்கு, என்னிடம் கோடாரி இல்லை. அப்புறம்... இருந்த கத்தியும் போயிட்டது.
ஒரு கோடாரி, அதைத் துடுப்பில் கட்டிக்கிட்டால், என்ன அருமையான ஆயுதம் அது.
ம். சகோதரன் தான் இது எனக்கு. நாங்க ரெண்டு பேருமா இந்த சுறாக்களை எதிர்த்திருந்தால் கதையே வேற.
இப்ப ராத்திரிப் போதில் அந்த மாதிரி சுறாக்கள் படை யெடுத்தால், நீ என்ன செய்வாய்? உன்னால என்ன செய்ய முடியும்?
“விடாமல் அத்தோட போராடணும்” என்றான். “நான் சாகும் வரை போராடியே ஆவேன்!”
நல்ல இருட்டு. வெளிச்சக் கசிவின் மினுக்கமோ, விளக்குகளோ எதுவும் இல்லை. காற்று இருந்தது. அது படகை இழுத்துக் கொண்டு போகிறது. இந்த இருட்டில் அவனுக்கு தானே இருக்கமா இல்லையான்னு ஆயிட்டது.
ஏ நீ செத்திட்டியா இருக்கியா?
ரெண்டு கையும் சேர்த்து ஒரு கையால் இன்னொரு உள்ளங் கையைத் தொட்டு உணர்ந்தான். அதில் உயிரின் கதகதப்பு மிச்சம் இருந்தது. உள்ளங்கையில் இன்னும் காயங்களின் காய்ப்பு இருந்தது. அதை மூடித் திறந்தாலே வாழ்வின் வலியை உணர முடிகிறது.
படகின் பின்பக்கமாக பலகையில் சாய்ந்து கொண்டான். உடலின் அசைவு. நான் இன்னும் இருக்கேன். செத்துடல்ல. மரத்தண்டில் உரசின அவன் தோள்கள். அவை சொல்லின இப்படி.
இந்த மீன் கிடைத்தால் நான் பிரார்த்தனை செய்வதாய்ச் சொன்னேனே, அந்தப் பிரார்த்தனைகளைச் சொல்ல வேண்டியது நிலுவையில் இருக்கிறது. ஆனால் இப்ப அவற்றைச் சொல்ல முடியாது. எனக்கு உடம்பில் அடித்துப் போட்ட அசதி. என்னால் பிரார்த்தனகளை உச்சரிக்க முடியாது இப்போது. ஏ அந்த சாக்கை எடு, தோள்ல போட்டுக்க, கொஞ்சம் கதகதப்பாக இருக்கும்.
படகில் சயன நிலையில் கிடந்தபடி, துடுப்புகளை வலித்துப் போனான். வானத்தில் வெள்ளி வருகிறதா என்று பார்த்தபடியே போனான்.
அந்த மீன், அதில் பாதி இருக்கு இப்ப, என நினைத்தான். அதிர்ஷடம் இருக்கட்டும். இருந்தால் நான் இந்த முன்பாதியைக் கரைக்குக் கொண்டு சேர்ப்பேன். பார்க்கலாம். எல்லாத்துக்கும் மனுசாளுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டி யிருக்கிறது.
“தப்பு,” என்று கத்தினான். “நீ எப்ப அத்தனைக்கு கடலுக்கு உள்ளார போனியோ, அப்பவே உன் அதிர்ஷ்டத்தின் விதியை மீறிட்டாய் நீ.”
“என்னத்தையாவது தத்துபித்துனு உளறாதே!” என்று கத்தினான். “தூங்கிறப்டாது நீ. விழிச்சபடி படகை ஓட்டு. இன்னுங் கூட உனக்கு அதிர்ஷ்ட கணங்கள் வரும்.”
“எங்கியாவது கடைல அது கிடைச்சால் நல்லா யிருக்கும். நானும் அதை வாங்கி வெச்சிக்கலாம் இல்லே?” என்றான் வேடிக்கையாய்.
அதன் விலை என்ன, என யோசித்தான். நான் இழந்த குத்தீட்டி, அதுதான் அதன் விலையா? ஒரு உடைஞ்ச கத்தி, ரெண்டு சிராய்ப்பு கண்ட கைகள், இவற்றைக் கொடுத்தால் அதிர்ஷ்டம் வந்துருமா எனக்கு?”
“கிடைக்கலாம்” என்று பதில் சொல்லிக் கொண்டான். “நீ கடலில் ஒரு எண்பத்தி நாலு நாள் பிரயத்தனத்தில் அதைப் பெற முயற்சி செய்தாய். ஓரளவு அதிர்ஷ்டம் உனக்கு அடிக்கவும் செய்தது. அதை நீ விலைகொடுத்து வாங்கி விட்டாப் போலத்தானே இருந்தது?”
என்னென்ன கன்னா பின்னா சிந்தனைகள், என்று பட்டது. நல்லூழ், அல்லது அதிர்ஷ்டம்... அது பல ரூபங்களில் வரும். அதை யார் எப்படி அடையாளங் காண முடியும்?
அட அத எந்த ரூபத்தில் தான் வரட்டுமே, நான் அதைப் பெற்றுக் கொள்ளத் தயார். அதற்கான விலையும் நான் தருவேன்...
சரி. எங்காவது வெளிச்சம் மினுங்குதா, தெரிஞ்சா நல்லாருக்கும், என நினைத்தான். நிறைய எனக்கு சாதகமான விஷயங்களா நடக்கணும்னு நான் ஆசைப் படுகிறேன். மத்ததை விடு. இப்ப எனக்கு இது ஒண்ணுதான். கரை. வெளிச்சம்... அதுவே.
துடுப்பு வலிக்க இன்னும் வசதியாய் உடம்பைக் கிடத்திக் கொள்ளப் பார்த்தான். உடம்பு உயிர்ப்புடன் தான் இருந்தது. வலி விண் விண்ணென்று உயிரின் துடிப்பாக ஒலித்தது.
ஊரின் விளக்குகளின் பிரதிபலிப்பு போல சிறிது மினுங்கல் அவன் பார்வைக்குத் தட்டியபோது இராத்திரி ஒரு பத்து மணி போல இருக்கலாம். நிலா எழுமுன்னால் அவனால் கணிக்க முடிந்த வெளிச்சம் அதுவாகத் தான் இருந்தது.
பிறகு அந்த மினுக்கம் ஒரு மாதிரி திரண்டு நிலைத்தது. காற்று அதிகரிக்க கடல் பொங்கித் தணிந்து கொண்டிருந்தது காற்றில்.
புள்ளியான மினுக்கம் பார்த்தபடியே படகைச் செலுத்திப் போனான். ம். இப்ப, சீக்கிரமே... நான் நீரோட்டத்தைத் தாண்டி கரைப் பகுதிக்குள் போயிருவேன்.
அப்பா,. எல்லாம் ஓரளவு முடிஞ்சாப் போலத்தான், என நினைத்தான்.
அப்படிச் சொல்லிற முடியுமா, என்றும் இருந்தது. அவை, சுறாக்கள் என்னைத் திரும்ப தாக்க வரலாம். ஒரு மனுசன் இந்த கும்மிருட்டில், அதுவும் கையில் ஆயுத ஆயத்தம் இல்லாமல்… என்னதான் செய்ய முடியும்?
உடம்பே அடித்துப் போட்ட மாதிரி விரைத்துப் புண்ணாகிக் கிடந்தது. உடம்பில் அங்கங்கே காயங்கள். சிராய்த்த கீறிய அடிபட்ட இடங்கள் அத்தனையுமே அந்தக் குளிரில் கடுமையாய் வலி கண்டன.
இனிமேலும் கடலில் எனக்கு போராட்டம் எதுவும் இராதுன்னு நம்பறேன், என நினைத்தான். இல்லாமல் இருந்தால் நல்லது. அதான் எனது பேராசை!
ஆனால் நள்ளிரவில் அவன் போராட வேண்டி வந்தது. இப்போது தனது எதிர்ப்பு அர்த்தமற்றது என்பதை அவன் அறிவான்.
சுறாக்கள் கும்பலாக வந்திருந்தன. தண்ணீர் மட்டத்தில் அந்த இருட்டுக் கசத்தில் சிறு நெளிவுகளையே அவனால் காண முடிந்தது. செதிள்களால் ஏற்பட்ட நீர்ச்சிதறல்கள். அவை மீனுக்குப் பாய்கையில் சிறு பளபளப்பு கண்டது வெளியில்.
உத்தேசமாய் அவற்றின் தலையில், வாயில் அடித்தான் அவன். படகு கிடுகிடுவென்று ஆட்டங் கொடுத்துக் கொண்டிருந்தது. சுறாக்கள் படகடியில் இருந்து எட்டி முட்டி வந்திருக்கலாம்.
பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை. ஒரு எதிர்ப்பு என்கிற அளவில் தடியை வீசிக் கொண்டிருந்தான். வெறும் சத்தங்கள். உடல்ரீதியான தொடு உணர்ச்சிகள். பார்வை இல்லை.
ஒரு சுறா அவன் கட்டையைக் கவ்விக் கொண்டதோ தெரியாது. அவன் கையில் இருந்து கட்டை உருவப்பட்டு, போய்விட்டது கடலில்.
சுக்கான் ஸ்பானரை உருவி எடுத்தான். அதனால் அடிக்கவும் மோதவும் ஆரம்பித்தான். பெரிய ஸ்பானர் அது. ரெண்டு கையாலும் அதைப் பற்றிக் கொண்டிருந்தான்.
அதை வீசி வீசித் தாக்கினான். ஆனால் நிறைய சுறாக்கள். படகின் முன்வசத்துக்கு ஏறி வந்திருந்தன அவை. ஒன்றை மற்றதை பிறகு ஒரேசமயம் அத்தனையையும் அவன் கிறுக்குப் பிடித்தாப் போல தாக்க வேண்டி வந்தது.
சுறாக்கள் கிழித்து இழுத்ததில் மாமிசமே கடலில் சிந்திச் சிதறி மினுக்கங் காட்டியது. எல்லாமே எட்டிக் கவ்வின. கிழித்துக் கொண்டு நகர்ந்தன. பிறகு திரும்ப எகிறிக் கொண்டிருந்தன.
கடைசியாக ஒன்று, தலையை நீட்டியது. அவன் அறிவான். இத்தோடு சுறாக்கள் விலகி விடும். சுறாவின் தலைக்குக் குறுக்காக ஸ்பானரை வீசினான். திரும்பத் திரும்ப வீசினான். சுறா, மீனை தலைப்பகுதியைக் கவ்விக் கொண்டிருந்தது இவனுக்கு வசமான குறி தந்தது.
என்றாலும் அதை வீசியபோது ஸ்பானரின் குச்சியும் ஒடிந்து போன சத்தம் கேட்டது. உடைந்த மீதிப்பகுதி கூர்மையாய் இருக்கும். அதை சுறா மேல் பாய்ச்சினான். நுரையீரல் பகுதி என அனுமானித்து உள்ளே செலுத்தினான். ஆயுதம் உள்ளே சொருகி இறங்கியதை உணர்ந்தான். நல்ல கூரிய கம்பிதான். திரும்பவும் அதை உள்ளே செலுத்தினான்.
சுறா இரையை விட்டுவிட்டு தண்ணீரில் உருண்டது. அந்தக் கும்பலின் கடைசி சுறா அது. சுறாக்கள் கிளம்பி விட்டன போலும். இங்கே வழிச்சித் துடைச்சாச்சி. அவைகளுக்கு இனி சாப்பிட எதுவும் மிச்சம் இல்லை இங்கே.
அவனுக்கு மூச்சடைத்தது. வாயே கசந்து வழிந்தது ஒரு விநோத வாடையுடன். ஒரு தாமிர நெடியுடன் சற்றே இனித்துக் கிடந்த கக்கல். சட்டென அப்படி எதிர்த்து வந்ததில் பயந்து போனான். என்றாலும் மேலும் அவன் கக்கவில்லை. நின்று விட்டது.
கடலில் காறித் துப்பினான். “இதைத் தின்னுங்க கலனோ சனியன்களா! இதைத் தின்னுட்டு, ஒரு மனுசனைக் கொன்னுட்டா மாதிரி நீங்க பிரமை கொள்ளலாம்!” என்றான் சத்தமாய்.
ம். இப்போது இறுதியாக ஒருவழியாக அவன் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டான். விமோசனம் அற்றுப் போனான் இப்போது.
படகின் பின்வசம் வந்தான். கையில் மிச்சம் இருந்த அந்த ஸ்பானர், இப்போது அது சுக்கானைக் காற்றோட்ட வசத்துக்குத் திருப்பி படகை ஓட்ட வேலைக்காகுமா என்று சோதித்தான். நல்லவேளை, அதை உபயோகிக்க முடிந்தது.
தோளோடு சாக்கைச் சுற்றிக் கொண்டான். படகைத் தன்பாட்டுக்குப் போகட்டும் என விட்டுவிட்டான்.
பயணம் சிரமம் இல்லாமல், எடை இல்லாமல் இருந்தது. அவனும் அப்படியே உறைந்தாப் போல இருந்தான். எந்த யோசனையும், எந்த உணர்ச்சியும் அவனிடம் இல்லை.
மகா களைப்பு அது. எல்லாவற்றையும் கடந்த நிலை. சாறு அற்ற சக்கை நிலை.
நம்ம ஊரைப் பார்க்க போய்ச் சேரணும். அதை எப்படி வழிபிசகாமல், சாமர்த்தியமாச் செய்யணுமோ செய்யிடா.
இரவில் மேலும் சுறாக்கள் வந்தன. இப்போது மீனின் கூடு மாத்திரமே மிச்சம் இருந்தன. என்றாலும் சாப்பாட்டு மேசையில் மீதிச் சிதறல்களான பொறுக்குகளை அள்ளி வாயில் போட்டுக் கொள்கிறாப் போல சிலது அந்த எலும்புக் கூடடிலும் துருவிச் சுரண்டித் தேடின.
எதாவது செய்யுங்க. அவன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இனி அவன் மீனைக் காப்பாற்ற என்று எதுவும் கிடையாது.
வேறு எதையுமே அவன் யோசிக்கவில்லை. பேசாமல் துடுப்பு போட்டு வீட்டைப் பார்க்க ஒரு பயணம். அவ்வளவே.
படகே லகுவாகிப் போனது. அதன் முன்பக்கம் இப்போது சல்லென்று சுலபமான உற்சாகத்துடன் நீரைக் கிழித்துப் போகிறது. பக்கவாட்டில் கனமே இப்போது இல்லையே.
படகு நல்லாதான் போகுது. அதுக்கு ஒரு சேதாரமும் இல்லை, என நினைத்தான். அந்த சுக்கான் திருகி, அதான் உடைஞ்சிட்டது. மத்தபடி மோசம் இல்லை. திருகி, அது வேற ஒண்ணு கிடைக்கும்.
நீரோட்டம் மாறி இப்போது தன் பகுதிக்குள் வந்தாப் போல உணர முடிந்தது. கடலோரக் குடியிருப்புகளில் இருந்து வெளிச்சம் காண முடிந்தது. இப்ப எங்க இருக்கோம், என்று அவனுக்கு விளங்கியது.
இனி வீடடைதல் பெரிய விவகாரம் இல்லை!

தொ ட ர் கி ற து
91 97899 87842 - storysasnkar@gmail.com

No comments:

Post a Comment