பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
பகுதி நான்கு
••
முதுமையில் யாருமே தனியா இருக்கக்
கூடாது...
என்றாலும், முதுமையும் அதில்
தனிமையும்...
அதை எப்படி யார் தவிர்க்க முடியும்?
••
இப்படியே
நாலு மணி நேரம் கடந்திருந்தது.
மீன் அதுபாட்டுக்கு நீந்திப் போய்க்
கொண்டிருந்தது, படகையும் இழுத்துக் கொண்டு. பெரியவரும் விட்டாரில்லை. அப்படியே உறுதியுடன்
மல்லாந்திருந்தார் அவர். கயிற்றை இறுக்கமாய்ப் பிடித்த பிடி தளரவில்லை.
"மதியப் போதில் நான் இந்த மீனைக்
கொக்கிக்குள் சிக்க வைத்தேன்!" என்று சொல்லிக் கொண்டார். "இன்னும் அதன் முகத்தை
நான் பார்க்கவே இல்லை. மீன் மேலே வெளியே வரவே இல்லை..."
"நாரிழைத் தொப்பி அணிந்திருந்தார்.
வெயில் நல்ல உறைப்பாய் எகிறியிருந்தது. முகப் பக்கமாகச் சரித்து அதை வைத்துக் கொண்டிருந்தார்.
மீனைக் கொக்கியில் சிக்க வைக்கும் முன்பிருந்தே அதே போலத்தான் வைத்திருந்தார். இப்போது
தொப்பியின் முன்பக்க விளம்பு நெற்றியில் நமநமவென அரித்தது.
இருந்த வெயிலுக்கு தாகம் எடுக்க ஆரம்பித்திருந்தது.
கிழவன் அப்படியே முட்டி போட்டான். தூண்டிலை அசக்கி விடாத கவனத்துடன் கோச்சுப் பெட்டியை
நோக்கி முடிந்த அளவு கிட்டே போனான். இங்கிருந்தே ஒரு கையால் தண்ணீர்ப் போத்தலை எட்டி
எடுத்தான். அதன் மூடியைத் திறந்து கொஞ்சம் போல நீர் அருந்திக் கொண்டான். நாக்கை நனைக்கிற
அளவு.
ஹா, என அப்படியே அந்த கோச்சுப் பெட்டியில்
சிறிது சாய்ந்து கொண்டான்.
பாய்மரத்தை இறக்கி யிருந்தான். படுதாத்
துணிகள் தரையில் கிடந்தன. அதன்மேல் அவன் உட்கார்ந்திருந்தான். இப்ப யோசிக்க எதுவும்
இல்லை. தேவை சிறிது பொறுமை. நிலைமையைச் சமாளிக்கிற அளவு தெம்பு.
•
பிறகு மெல்ல திரும்பி தன் பின்பக்கமாய்ப்
பார்த்தான். கரையை விட்டு வெகுதூரம் வந்திருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரை
தட்டுப்படவே இல்லை. ச். அதனால் என்ன, என நினைத்துக் கொண்டான்.
இராத்திரி யானால் ஹவானாவில் விளக்குகள்
எரியும். அவை என் கண்ணுக்குத் தெரியும். அதை அடையாளம் வைத்தே நான் கரை மீண்டு விடுவேன்...
சூரியன் அடைய இன்னும் ரெண்டு மணி
நேரத்துக்கு மேல் கிடக்கிறது. அதற்கு முன்பே ஹவானாவின் கலங்கரை விளக்கு, அது வேலை செய்ய
ஆரம்பித்து விடும். இல்லாட்டி கூட, நிலா எழும்போது விளக்கு பொருத்தி விடுவார்கள். அட
அப்பவும் விளக்கு காணவில்லை என்றால், சூரியன் உதிக்கிற அந்த அதிகாலை, அப்ப கண்ணில்
தட்டுப்படவே செய்யும்.
நான் கரை திரும்பி விடுவேன்
•
அந்த மட்டுக்கு கை கால் நரம்பு சதைன்னு
எதுவும் இழுத்துக்கிட்டு கோப்புராட்டித்தனம் பண்ணவில்லை எனக்கு. நான் கிண்ணென்று இருக்கிறேன்.
ஏ நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு
ஒரு பிரச்னையும் இல்லை. அதுதான், அந்த மீன்தான், அதுக்கு தான் பிரச்னை. அதன் வாயில
கொக்கி!
ஆனாலும் என்ன கனம்... செம எடை இருக்கும்
போல. என்னா சுண்டு சுண்டுது என்னை. தூண்டில் கம்பியை அப்படியே கவ்விக்கிட்டு வாயை இறுக்கி
மூடிக்கிட்டு இருக்கு போல.
அதைப் பார்க்க முடியவில்லையே, என்று
இருந்தது. அட ஒரு முறை, ஒரே ஒருமுறை பார்த்துவிட்டால் நல்லது.
யாருடன் நான் மோதிக் கொண்டிருக்கிறேன்.
எனக்குத் தெரிய வேண்டும், அவசியம்.
•
மீன் அதுபாட்டுக்கு பாதையை மாற்றாமல்
போனது. போய்க் கொண்டே யிருந்தது. உள்ளே போகவும் முயலவில்லை. திசையையும் அது மாற்றவில்லை.
ஒரு ராத்திரி பூராவும் அவன் அதனுடன் போய்க் கொண்டிருந்தான்.
மல்லாந்தபடி அவன் நட்சத்திரங்களைப்
பார்த்தபடியே கிடந்தான். மீன் திசையை போக்கை மாற்றவில்லை என்பதை அவன் உணர்ந்தான். நட்சத்திரங்கள்
அவன் கூடவே வந்தாப் போலிருந்தது.
இப்போது சூரியன் கடலுக்குள் இறங்கியதில்
குளிர் எடுத்தது. கிழவன் உடம்பின் வியர்வை வற்றிக் காய்ந்து விட்டது. முதுகுப் பக்கம்
ஜில்லிட்டிருந்தது. கையும், வயதான காலுங் கூட சிறிது மந்தித்து மரத்து வந்தது.
பகலில் இரைப் பெட்டியின் மீது ஈரமாய்
இருந்த சாக்குப் பையை விரித்துப் போட்டு காய வைத்திருந்தான். சூரியன் இறங்கி பொழுது
சாய்ந்ததும் அதை எடுத்து கழுத்தில் முடிச்சிட்டு முதுகுப்புறமாக அதைப் பரத்திக் கொண்டிருந்தான்.
தோளில் இறுக்கமாய்ப் பிடித்திருந்தான்
தூண்டிலை. தோளில் கயிறு அழுத்தி வரி வரியாய்க் காந்தும் போலிருந்தது. மெல்ல கயிறைச்
சிறிது தூக்கி அடியில் இந்தச் சாக்கை ஒரு மெத்தையாட்டம் முட்டுக் கொடுத்துக் கொண்டான்.
ஒருமாதிரி கோஸ்பெட்டியின் முன்சரிந்து
படுத்துக் கொள்கிற அளவில் தோது பண்ணிக் கொள்ள முடிந்தது இப்போது. முன்னைக்கு இது வசதியாய்...
வசதி என்ன வசதி, முன்னைக்கு இது மோசமில்லை, சகிச்சிக்க முடியற அளவு வலி தந்தது இந்த
நிலை... ஆனால் இதுவே அவனுக்கு நல்ல வசதியாய்த் திருப்தியாய்ப் பட்டது.
•
இந்த மீன், இதையிட்டு இப்போது நான்
செய்ய ஏதும் இல்லை. எதுவுமே இல்லை. ம். அது? அதுக்கும் என்னையிட்டு எதுவும் இல்லை.
அதாவது இதுவரை இல்லை. இப்படியே அது போயிட்டிருந்தால்... அதனால் எனக்கும், என்னால் அதுக்கும்
எந்த பாதிப்பும் இருக்கப் போவது இல்லை.
ஒரு சமயம் எழுந்து கொள்ள வேண்டியிருந்தது.
படகின் பக்கமாகப் போய் வெளியே கடலில் ஒண்ணுக்கடித்தான். அப்படியே தலைதூக்கி வானம் பார்த்தான்.
சில நட்சத்திரங்களைத் தெரியும் அவனுக்கு. அவை இருக்கும் திசை தெரியும். அதை வைத்து
தான் இப்போது எந்த வாடையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று கணிக்க முற்பட்டான் அவன்.
அவன் தோளில் இருந்து புறப்பட்டு தூண்டில்
குச்சிகளின் ராட்டினம் வழியே நீருக்குள் இறங்கும் அந்தக் கயிறு, அதுவே ஒளிரும் ஒரு
தண்டு போலக் கண்டது.
அவர்கள், அவனும் அந்த மீனும், இப்போது
மிக சாவகாசமாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். ஹவானாவில் இருந்து வந்த வெளிச்சம் ரொம்ப
தேசலாய் இருந்தது. இப்ப நாம கிழக்கு வசமாப் போயிட்டிருக்கம்டா... என்று தலையாட்டிக்
கொண்டான்.
ஹவானாவின் கரை இன்னும் இன்னுமாய்
மங்கினால் நான் இன்னும் இன்னுமாய்க் கிழக்காலே போயிட்டிருக்கேன். அதான் அர்த்தம்.
இந்தா இந்த மீன், இது தடத்தை மாத்தாமல்
கொள்ளாமல் அப்பிடியே போனால், இன்னும் பல மணி நேரம் எனக்கு ஹவானா வெளிச்சம் தெரியத்தான்
தெரியும், என நினைத்தான்.
ஆ, கழிப் பந்தாட்டம்... இன்றைய ஆட்டத்தில்
என்ன நடந்ததோ தெரியவில்லை, என்று யோசனை வந்தது.
இப்ப இப்பிடி தனியே படுத்துக் கிடக்கேனே.
மீனைப் பிடிச்சிக்கிட்டு, அதை விட்டுவிடாமல் காத்திருக்கிறேனே, இந்நேரங்களில் ரேடியோப்
பெட்டி நல்ல சகவாசம் தான்.
அதை நினைச்சிக்கோ. நினைப்பை எப்பவும்
விட்றாதே. கவனத்தை சிதற விட்றாதே. இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கே. அதை மறந்துறாதே.
அதில் எதும் ஏடாகூடம் ஆயிறக்கூடாது. மடத்தனமா எதுவும் செஞ்சிறக்கூடாது.
பிறகு சத்தமாய்ப் பேசினான்.
"ம். இப்ப அந்தப் புள்ளை, கூட இருந்திருக்கப்டாதா? எனக்கு ஒத்தாசையாவும் இருப்பான்.
அதோட, இதெல்லாம் அவனும் பார்ப்பானா இல்லியா?"
முதுமையில் யாருமே தனியா இருக்கக்
கூடாது... என அவன் அப்போது நினைத்துக் கொண்டான். என்றாலும், முதுமையும் அதில் தனிமையும்...
அதை எப்படி யார் தவிர்க்க முடியும்?
படகில் மீன் இருக்கிறது. அது கெட்டுப்
போவதற்குள் நான் அதைச் சாப்பிட வேண்டும். எனக்கு உடம்பில் தெம்பு வேண்டுமானால் நான்
அதைச் சாப்பிட வேண்டும், என யோசனை பண்ணினான் அவன்.
மறந்துறாதே. சாப்பாடுன்னு பெரிசா
நீ சாப்பிடுவது இல்லை. என்றாலும் கொஞ்சமோ நிறையவோ, எதாவது உள்ள போகணும் அப்பா. காலை
விடியட்டும். காலையில் நீ அந்த மீனைச் சாப்பிடுகிறாய். மறந்துறாதே, என்று திரும்ப தனக்குள்
வலியுறுத்திக் கொண்டான்.
•
ராத்திரிக்கு இரண்டு பார்ப்பாய்ஸ்கள்***
(*** டால்ஃபின் போல பாலூட்டி வகையான மீன்கள்) படகுப் பக்கமாக நீந்தி வந்தன. அவை படகை
ஒட்டி நீந்தும் சத்தமும் அவற்றின் மூச்செடுக்கும் ஒலிகளும் அவனுக்குக் கேட்டன.
அவை மூச்சு விடுவதை வைத்தே அந்த ரெண்டில்
எது ஆண், எது பெண் என்பதை அவனால் உணர முடிந்தது. ஆண் இனம் உலைத் துருத்தி போல காற்றை
வெளியே தள்ளும். பெண் இனம் அலுத்த பெருமூச்சு போல விடுகிறது.
"சமத்துப் பிராணிகள்,"
என்று பேசினான் அவன். "அவை நன்றாக விளையாடித் திரியும். குறும்புகள் செய்யும்.
ஒண்ணுக்கொண்ணு பிரியமாய் இருக்கும். பறக்கும் மீன்கள் இருக்கில்லே? அவை போலத்தான் இதுகளும்.
நம்ம சகோதரப் பிறவிகள் ஆச்சே."
•
இப்போது தன்னிடம் பிடிபட்ட மீனின்
யோசனை வந்தது.அவனுக்கு அதன் மீது இரக்கம் சுரந்தது. ஐயோ பாவம். அற்புதமான ஆச்சர்யமான
மீன் அது. எத்தனை வயசு ஆகுதோ அதுக்கு, என நினைத்தான்.
இத்தனை கனமான மீன் அவன் இதுவரை தன்
தூண்டிலில் பிடித்ததே இல்லை. மகா கனம் பொருந்திய மீன்!
அதேபோல... பிடிபட்ட பிறகு, இப்படி
விநோதமா என்னை இது இழுத்துக்கிட்டே போகுதே.... இந்த மாதிரி காரியம் இதுவரை வேற எந்த
மீனும் அவனுக்குச் செய்தது கிடையாது!
ரொம்ப நிதானமாய், பதட்டம் இல்லாமல்...
சர்ரென்று மேலே துள்ளி வர அது முயலாமல் இருக்கிறது. அது ஒரு துள்ளு துள்ளினால் போதும்,
நான் அம்பேல். வெலவெலத்தோ கோபப்பட்டோ அது வந்து படகில் ஒரு முட்டு முட்டினாலும் கூட
நான் காலி. அதில் சந்தேகமே இல்லை!
ஒருவேளை இது முன்பே எங்காவது தூண்டில்
கொக்கியில் பலமுறை சிக்கிக் கொண்டிருக்கலாம். இதோ இந்த மாதிரிதான் நாம இப்ப இந்த ஹோதாவைச்
சமாளிக்கணும், என அதற்கு ஒரு யோசனை இருக்கிறதோ என்னமோ?
அது அடியாழத்தில் இருக்கிறது. மேலே
தனக்கு எதிரியா ஒரே ஒரு மனுசன் தான். அவன் கூட உதவிக்கு யாரும் இல்லை, என்பது அதற்குத்
தெரிய வாய்ப்பு இல்லை அல்லவா?
ஹா. தனது எதிரி ஒரு வயசாளி, கிழட்டு
ஆசாமி என்பதும் அது அறியாது!
•
ஆனால்... எத்தனை அருமையான வேட்டை
இது. சந்தையில் அது அப்படியே கெடாமல் விலை போனால் என்ன விலை கிடைக்கும்..
இரையை அது கடித்த அந்த நறுக். ஒரு
பௌருஷம் இருந்தது அதில். கயிற்றை அது சுண்டியதே ஒரு சுண்டு, அதுவே நல்ல திடகாத்திரமான்
இழு தான்.
இப்ப என்னுடன் ஒரு சமர் புரிகிறதே,
அதில் அதற்கு பயம், கலவரம் கிஞ்சித்தும் இல்லை!
அதுவே மனசில் இப்ப எதும் திட்டம்
கிட்டம் வெச்சிருக்கலாம் ஒருவேளை. அல்லது, அதுவும் என்னைப் போல, என்னடா இது, இப்பிடி
ஆயிட்டதே, என்கிற கையறு நிலையில் திகைத்துக் கிடக்கிறதோ?
•
ஒரு மார்லின் மீனின் சோடியை ஒருமுறை
கொக்கி போட்டுச் சிக்க வைத்திருந்தார் பெரியவர். எப்பவுமே ஆண் மீனும் பெண் மீனும் சோடி
போட்டுத் திரிகையில் ஆண்மீன் பெண்மீனை முதலில் இரைகொள்ள விட்டுவிடும்.
அவரிடம் பெண்மீன் மாட்டிக் கொண்டது.
கலவரப்பட்டு அது பெரிய அளவில் அமளி துமளியாக்கிட்டது. அது பண்ணிய போராட்டத்தில் சீக்கிரமே
அது களைத்துப் போனது.
கடைசிவரை அந்த ஆண்மீன் அதன் கூடவே
தான் இருந்தது. தூண்டில்களை ஊடறுத்து இங்கே அங்கே என்று அலைபாய்ந்து கொண்டிருந்தது.
பெண்ணைச் சுற்றிச் சுற்றி நீர் மேல்தளத்தில் வளைய வந்து கொண்டிருந்தது.
படகோடு கூடவே கிட்டத்திலேயே அது வந்து
கொண்டிருந்தது. எங்கே இது தூண்டிலையே அத்து விட்டுருமோன்னு பெரியவர் பயந்து போனார்.
அதன் வாலே ஒரு புல்வெட்டி போல கூர்மையாய் இருந்தது. புல்வெட்டி போல அத்தனை பெரிய வால்
அது.
அந்தப் பெண்மீன் மேல் அவர் ஈட்டியைப்
பாய்ச்சிய போதும், தடியால் அதை அடி மொத்திய போதும் அது, அந்த ஆண்மீன் கூடவே தான் இருந்தது.
அதைக் கையில் பிடித்துத் தூக்கினார். ரெண்டு பக்கமும் கூரிய முள்ளெடுத்த ரம்பம் போல
இருந்தது மீன். மீனைத் தலையில் கழியால் அறைந்தார். அடித்த அடியில் மீனே ரசம் பூசிய
கண்ணாடியின் பின்பக்கம் போல சிவந்து விட்டது.
பிறகு பையனின் உதவியோடு அதைப் படகுக்குள்
தூக்கிப் போட்டார். தூண்டிலைத் திரும்ப அடுத்த இரைக்காக சுத்தம் செய்தபடி, அந்த ஆண்மீன்
சிக்குமா என்கிற யோசனையில் குத்தீட்டியையும் கையில் எடுத்தார்.
அதை ஆண்மீன் உணர்ந்து கொண்டாப் போலிருந்தது.
ஸ்வைங் என அது மேலே ஒரு உயரத்துக்குத் துள்ளியது. படகுக்குள் அதன் சோடியை ஒரு பார்வை
பார்க்கிற யோசனையும் இருந்ததோ என்னமோ?
திரும்ப கடலுக்கு ஆழத்துக்குப் போய்விட்டது.
கத்திரிப்பூ நிற அதன் நெஞ்சுசெதிள்கள். உடலில் பரவிய கருநீல நெடுங் கோடுகள்.
மேலே வந்து அழகு உடலைக் காட்டி திரும்ப
உளளமுங்கிக் கொண்டது ஆண்மீன். கண்கொள்ளாக் காட்சி அது. இன்னும் அப்படியே அந்தக் காட்சிகளை
நினைத்தபடி படுத்திருந்தார்..
அவை ஆக சோகமான சமாச்சாரங்கள், என
நினைத்தார் பெரியவர். சோடிகளைப் பிரித்தது. பையனுக்கும் அதையிட்டு ரொம்ப துக்கம் தான்.
நாங்கள் மன்னிப்பு கோரிவிட்டு, அதை,
அந்தப் பெண்மீனை சரியாகக் கூறு போட்டோம்.
•
"ஹ்ரும், இப்ப கூட பையன் மனோலின்
இல்லாதது ஒரு மாதிரிதான் இருக்கிறது" என்று சத்தமாய்ப் பேசினான் கிழவன். அப்படியே
உருளை வடிவத்தில் கிடந்த படகின் அடிமரத்தில் வசம் பார்த்தபடி தோது பண்ணிக் கொண்டான்.
கையில் இன்னும் மீனின் பிடி இருந்தது.
அதன் கனம் இப்பவும் தெரிகிறது. தோளில் அழுந்திக் கிடந்தது கயிறு.
மீன் தன் போக்கில் போய்க் கொண்டிருந்தது.
நான் அதனிடம் இன்னும் என் எதிர்ப்பைக்
காட்டவில்லை. என்றாலும் அது கூடிய விரைவில் என்னை எதிரியாக, நம்பிக்கை துரோகியாக உணரக்
கூடும். அப்போது... அது என்னைச் சமாளிக்க ஒரு முடிவு எடுக்க வேண்டி நேரும்!
அதன் இப்பத்திய முடிவு, கடலின் அடி
ஆழத்தில் அந்த இருளில் தேமே என சஞ்சாரம் செய்வது. மனுசாளுக்கு வெகு அப்பால். மனுசாள்
பற்றிய கெட்ட கனவுகள் அதற்கு வேண்டாம். மனுசாளின் பொறி பற்றி அது கவலைப்படாமல் போக
விரும்புகிறது. அவர்களின் நம்பிக்கைத் துரோகம்...
சட்டென பிடித்து, கொன்று விடுகிறார்கள்
பாவிகள்!
ஆனால் என் விருப்பம், மத்தவர்களை
விடு. எனக்கு இப்போது அந்த அடியாழத்துக்கு நானும் போய் அதைப் பார்க்க வேண்டும். உலகத்தில்
வேற யார் பத்தியும் எனக்கு பொருட்டில்லை. நான். அந்த மீன்... அந்த மீனை நான் சந்திக்க
வேண்டும்.
இப்போது நாங்கள் இருவரும், பிணைந்து
கிடக்கிறோம். நேத்து மதியத்தில் இருந்து நாங்கள் ஒருசேரப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
என்றால் இதில் ஒரு விசித்திரம், யாரும்
யாருக்கும் உதவியோ ஒத்தாசையோ கிடையாது!
•
ஹ்ம். ஒருவேளை நான் மீனவனாகவே ஆயிருக்கக்
கூடாதோ என்னவோ? நான் மீனவன் என்று சொல்லிக் கொள்ள லாயக் இல்லையோ என்னவோ? ஆனால் நான்
பிறந்ததே இப்படி. நான் மீனவனாகவே பிறந்து விட்டேன்.
டேய் காலைல வெளிச்சம் வந்ததும், ஆமா.
மறந்துறாதே. அந்த மீன், பிடிச்சியே அதை, சாப்பிடணும் நீ.
•
விடியலின் வெளிச்சந் தட்டும் முன்னால்
அவனுக்கு பின்பக்கத்தில் இருந்த ஒரு தூண்டில் சலனப்பட்டது. மூங்கில் குச்சி முறியும்
சத்தமும் அவனால் கேட்க முடிந்தது.
தூண்டில் பிரிகள் சரசரவென்று ராட்டினத்தில்
உருண்டாப் போல கேட்டது. நல் இருட்டு வேளை. வெளிச்சமே இல்லை. பாளை வெட்டும் கத்தி வைத்திருந்ததை
அந்த இருட்டிலேயே எடுத்தான்.
இடது தோளில் கனமாக அந்த மீன் பிடித்து
வைத்துள்ள கயிறு அழுந்திக் கொண்டிருந்தது. ராட்டினச் சட்டத்தின் வழி சரசரவென்று சரியும்
அந்தக் கயிறின் பிரிகளை லாவகமாக கத்தியால் வெட்டி விட்டான்.
அப்படியே தனக்கு ஆகக் கிட்டத்தில்
இருந்த இன்னொரு தூண்டில், அதையும் வெட்டிவிட்டான். கையிருப்பில் மிச்சம் இருந்த இரு
கண்டுகளின் கயிறையும் முடிச்சு போட்டு சேர்த்துக் கொண்டான்.
நல்ல இருட்டு. ஒரு கையால் வேலை செய்ய
வேண்டியிருந்தது. திறமையாய்ச் செயல்பட்டான் அவன். கண்டின் சுருணைகளில் காலை அழுத்தி
அது மேலும் உருவிக் கொள்ளாமல் அழுத்தி வைத்துக் கொள்ள வேண்டி யிருந்தது.
இப்போது அவனிடம் தயாராய் ஆறு கண்டுகள்,
அவன் பயன்படுத்திக் கொள்ளலாம் என காத்திருந்தன. ரெண்டு தூண்டில்களை வெட்டி விட்டது
போக மீதிக் கண்டுகள். இரண்டு கண்டுகள் அளவு கயிறை உள்ளே இருக்கிற, அவனை இழுத்துப் போகிற
மீன் வைத்துக் கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும் இணைத்து சேர்த்து
கட்டி வைத்துக்கொண்டு விட்டான்.
வெளிச்சம் வரட்டும். அந்த நாப்பது
ஃபாதம் தூண்டில் இல்லையா?... அதையும் துண்டித்து இதனோடு சேர்த்துக் கொள்ளலாம், என நினைத்துக்
கொண்டான்.
என்ன ஒரு இது என்றால், ரெண்டு நூறு
பாதம் இழைகள், அருமையான கடலான் கார்டல், நஷ்டப்பட்டு விட்டது. கடலுக்குள் போய்விட்டது.
அதன்கூடவே கொக்கிகள், முட்கள், இழைகள். இரைகள்...
ஆனால் இவற்றை நாம சம்பாதிச்சிக்கலாம்.
ஆனால் இந்த மீன்? இதை விட்டுட்டா அவ்வளவுதான். வேற தூண்டில்ல சிக்கிய மீன், ஆத்திரப்பட்டு
அது இந்த மீனை அத்து விட்டுவிட்டால்?. ஆகவே தான் அதை வெட்டி விடவேண்டி வந்தது..
இப்ப கடைசியா இரையைக் கடிச்சுதே,
நான் தூண்டிலை வெட்டி விட்டேனே? அந்த மீன் பத்தி எதுவும் தெரியாது எனக்கு. அது மார்லினோ,
பிராட்பில், சுறா என்ன வகையோ அறியேன். தூண்டிலைப் பிடிச்சி அதை நான் எடை
சோதிக்கக் கூட இல்லை.
அவசரமா அதை நான் வெட்டிவிட்டு, இந்த
விளையாட்டில் இருந்து அதை வெளியேத்த வேண்டியிருந்தது.
சத்தமாய்க் கத்தினான். "இந்தப்
பயல், அவன் இல்லாமப் போயிட்டானே!"
தொ ட ர் கி ற து
91
97899 87842

No comments:
Post a Comment